மதுரை மத்திய சிறையில் தலைமைக் காவலரை கைதி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிறையில் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை குளிப்பதற்காக விசாரணை கைதிகள் உள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான கைதிகள் திரண்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் நான்கு காவலர்கள் இருந்தனர். கைதிகள் குளிப்பதற்காக ஆழ்துளைக் கிணற்று நீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மூர்த்தி என்ற கைதி மட்டும் குடிநீரைக் குளிப்பதற்காக வாளியில் நிரப்பியுள்ளார்.
இதைக் கவனித்த தலைமைக் காவலர் தெய்வநாயகம்(52), மூர்த்தியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைதி மூர்த்தி, தெய்வநாயகத்தின் முகத்தில் குத்தியுள்ளார். அப்போது அருகில் இருந்த கைதிகள் யாரும் மூர்த்தியைத் தடுக்க முயலவில்லை என்று கூறப்படுகிறது. மூர்த்தியின் தாக்குதலால் தலைமைக்காவலர் தெய்வநாயகத்தின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சக காவலர்கள் தெய்வநாயகத்தை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து கைதி மூர்த்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே தேனியில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் மதுரையில் காவலரைக் கைதி ஒருவர் தாக்கிய சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், கைதிகளுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதைப் போன்று, கைதிகளிடமிருந்து காவலர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.









