முரசு புயலில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களின் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29-ந் தேதி செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆந்திர மாநிலம் நிசாம்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது முரசு புயலில் சிக்கினர். புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அருகிலுள்ள துறைமுகத்துக்குச் செல்லுமாறு படகின் உரிமையாளர் செல்வழகன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், விசைப்படகின் இன்ஜின் பழுதானதால் மீனவர்களால் கரைக்குத் திரும்ப முடியவில்லை. இதையடுத்து நடுக்கடலில் நங்கூரமிட்டு படகை நிறுத்தியுள்ளனர். நவம்பர் 3-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் மற்றொரு விசைப்படகில் இருந்த மீனவர்களைச் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக் கருவி மூலம் தொடர்புகொண்டு தாங்கள் நடுக்கடலில் சிக்கியிருப்பதைத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆந்திர கடலோரக் காவல் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காசிமேடு மீனவர்களின் நிலை குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.








