அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்புக்கு பெரும் பின்னடைவு.. செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி!

By Mathi

|

Published on 4 Nov 2026, 10:56 AM

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு மாகாணங்களின் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சியே பெரும்பான்மை பெற்றிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சி முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியின் வசமிருந்த 5 செனட் இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றி, செனட் சபையில் பெரும்பான்மை பெற்றுள்ளது.

குறிப்பாக, குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிகுந்த டெக்சாஸ் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் தலரிகோ, குடியரசுக் கட்சியின் கென் பாக்ஸ்டனைத் தோற்கடித்துள்ளார். தெற்கு கரோலினா, கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களிலும் ஜனநாயகக் கட்சிக்கு முக்கிய வெற்றிகள் கிடைத்துள்ளன.

ADVERTISEMENT

பிரதிநிதிகள் சபையிலும் குடியரசுக் கட்சி வசமிருந்த 7 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. இருப்பினும், அந்தச் சபையில் எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

விலைவாசி உயர்வு, பொருளாதாரப் பிரச்சினைகள், ஈரான் போர் உள்ளிட்ட விவகாரங்கள் இந்தத் தேர்தலில் முக்கிய இடம்பிடித்தன. செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியிருப்பதால், அதிபர் டிரம்ப் கொண்டு வரும் சட்ட மசோதாக்கள் மற்றும் முக்கிய நியமனங்களுக்கு நாடாளுமன்றத்தில் கூடுதல் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

டிரம்ப் விளக்கம்

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது Truth Social சமூக வலைதளப் பக்கத்தில், “நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்” என கூறியுள்ளார்.

முன்னதாக CBS News தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என்னிடம் இறுதி அதிகாரம் இருக்கிறது. அதுதான் வீட்டோ அதிகாரம்” என்று கூறிய டிரம்ப், ஜனநாயகக் கட்சி கொண்டு வரும் சட்ட மசோதாக்களைத் தேவைப்பட்டால் நிராகரிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel