வெள்ளைத் துணிகளோடு அடர் நீலம், சிவப்பு, கருப்பு போன்ற நிறத் துணிகளைச் சேர்த்து ஊறப்போட்டுவிட்டு, பிறகு வெளியே எடுத்துப் பார்த்தால் அத்தனையும் சாயம் ஏறிப்போயிருக்கும். இது எல்லோர் வீட்டிலும் ஒருமுறையாவது நடந்திருக்கும். வாஷிங் மெஷினில் போட்டாலும் இப்படிச் சாயக் கறை படிவது உண்டு.
விலை உயர்ந்த துணியில் இப்படி ஆகிவிட்டால் மனசே உடைந்துபோகும். ஆனாலும் உடனே தூக்கிப் போடாதீர்கள். வெள்ளை வினிகர், எலுமிச்சை, பேக்கிங் சோடா போன்ற வீட்டுப் பொருட்களை வைத்துச் சில கறைகளை நீக்க முயற்சி செய்து பார்க்கலாம்.
1. வினிகர் + சோப்புத் தூள்
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து, அதில் கொஞ்சம் துணி துவைக்கும் சோப்புத் தூளும், 2 முதல் 3 ஸ்பூன் வெள்ளை வினிகரும் சேருங்கள். சாயம் படிந்த துணியை இந்தக் கலவையில் 30 நிமிடம் ஊறவைத்து, கறை இருக்கும் இடத்தை மெதுவாகத் தேய்த்துக் கழுவுங்கள். துணியின் தன்மையைப் பொறுத்து பலன் மாறுபடும்.
2. எலுமிச்சைச் சாறு + உப்பு (வெள்ளைத் துணிக்கு மட்டும்)
வெள்ளைத் துணியில் படிந்த சாயக் கறைக்கு எலுமிச்சைச் சாறும் உப்பும் உதவும். கறை மீது கொஞ்சம் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, அதன் மேல் உப்பைத் தூவி, சிறிது நேரம் அப்படியே வைத்திருங்கள். பிறகு தண்ணீரில் நன்றாக அலசித் துவையுங்கள்.
வண்ணத் துணிகளில் இதைச் செய்தால் துணியின் சொந்த நிறமே மங்கிவிடும் ஆபத்து இருப்பதால் தவிர்த்துவிடுங்கள்.
3. பேக்கிங் சோடா பேஸ்ட்
கொஞ்சம் பேக்கிங் சோடாவில் தண்ணீர் சேர்த்துக் கெட்டியான பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். அதைக் கறை மேல் தடவி, சிறிது நேரம் கழித்து மென்மையான பிரஷ்ஷால் தேய்த்துக் கழுவுங்கள்.
அடர் நிறத் துணிகளுக்குச் சாதாரண ப்ளீச் பயன்படுத்துவதற்குப் பதிலாக Colour-safe Bleach பயன்படுத்தலாம். அதுவும் துணியின் பராமரிப்பு லேபிளில் சொல்லியிருப்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
சாயம் ஒட்டாமல் தடுக்க என்ன செய்யலாம்?
- புதிய துணிகளை முதல் இரண்டு முறையாவது தனியாகத் துவையுங்கள்.
- வெள்ளை, வெளிர் நிறம், அடர் நிறம் என்று பிரித்துத் துவையுங்கள்.
- குளிர்ந்த தண்ணீரில் துவைத்தால் சாயம் வெளியேறுவது குறையும்.
- சாயம் ஒட்டிய துணியை உலர்த்துவதற்கு முன்பே கறையை நீக்க முயற்சி செய்யுங்கள்.
- வினிகர், எலுமிச்சை போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் துணியின் மறைவான ஒரு மூலையில் சோதித்துப் பாருங்கள்.









