கோவை வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணியுடன் இணைந்து பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திராவிட மாடல் அரசின் கனவுத் திட்டமான, தந்தை பெரியார் பெயரில் அமைந்திருக்கும் இந்த அறிவுலகத்தைப் பார்க்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே நான் இதைப் பார்த்திருந்தாலும், திறந்து வைக்கப்பட்ட பிறகு அது முழுமையடைந்த பிறகு இன்று நானும் நமது ஆசிரியர் வீரமணி அவர்களும் சேர்ந்து பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று அதிக கூட்டம் இருந்ததால் என்னால் பொறுமையாக அனைத்தையும் பார்க்க முடியாத சூழல் இருந்தது. அதனால், இனி ஒருமுறை நிச்சயமாக வந்து பொறுமையாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனது உள்ளத்தில் தோன்றியுள்ளது.
இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்குத் தமிழ்நாடு போய்க்கொண்டிருக்கும் சூழலில், திராவிட இயக்கம் என்றால் என்ன, திராவிடம் என்றால் என்ன, தந்தை பெரியாரின் உணர்வுகள் என்ன, அவரது லட்சியங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ள இளைஞர்களும் மாணவர்களும் இதை நல்ல வகையில் பார்த்து, அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள்” என்றார்.
“தமிழகத்தில் இனி இதுபேன்று நூலகங்கள் வர வாய்ப்புள்ளதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஏற்கனவே திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கினார். அதற்குப் பிறகு, தமிழகத்தில் எனது தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, மதுரையில் கலைஞர் பெயரால் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நெல்லையில் காயிதே மில்லத் பெயரால் ஒரு நூலகம் அமைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நூலகம் அமைப்பதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன; விரைவில் திறக்கப்படும் என்று கருதுகிறேன்.
நல்லவேளை, கோவையில் பெரியார் பெயரில் அமைந்திருக்கும் இந்த பெரியார் அறிவுலகம் நூலகத்தை பொறுத்தவரை 99 3/4 சதவீதப் பணிகள் முடிவடைந்திருந்தன. பாதியில் நிறுத்தியிந்தால் இதற்கும் இந்த அரசு மூடுவிழா நடத்தியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை; நல்லவேளை தப்பித்துவிட்டது! அதுபோல மற்ற நூலகங்களும் வரவேண்டும் என்ற எனது விருப்பத்தை உங்கள் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.









