பாஜகவின் ஆதரவோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்டு கடனுதவிகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர், “பாஜகவின் ஆதரவோடு திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க மீண்டும் முயற்சி நடைபெற்று வருகிறது. தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசுவது குறித்து ஏற்கனவே திமுக, அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க ஒரு இடத்தில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் முயற்சி நடைபெற்று வருகிறது.
தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, பாஜகவின் பின்புல ஆதரவோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியும் திமுகவும் ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்துவதுதான் திட்டம். ஆனால், திமுகவிற்குள் கனிமொழி மற்றும் கே.என்.நேரு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அது கைவிடப்பட்டது. அடுத்து வரும் இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால், உட்கட்சிகளில் எதிர்ப்பு கிளம்பினால் மட்டுமே தனியாக வேட்பாளர்களை நிறுத்துவார்கள். எப்படியாவது தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க வேண்டும் என திமுகவும் அதிமுகவும் வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளிலிருந்தே முயற்சி செய்து வருகின்றன. எங்களுக்கு யாரையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியமும் இல்லை; சமரசம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. ஆனால், திமுகவினர் தொடர்ச்சியாக இந்த முயற்சியைச் செய்து வருகின்றனர்.
திமுகவினரால் பிரச்சினை வருகிறது; இது முதலிலிருந்தே நடக்கிறது, இப்போது வெட்டவெளிச்சமாகிறது. இதனை மறைத்துவிட்டு, ‘மூன்று மாதத்திற்குள் ஆட்சிக்கு வந்துவிடுவோம்’ என்கிறார்கள். அதெல்லாம் 100 சதவீதம் நடக்காது. எங்கள் எம்.எல்.ஏ-க்கள் பணத்தையோ, வேறு எதையோ வாங்கிக்கொண்டு எங்கேயும் நகரமாட்டார்கள். எங்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு 70 கோடி ரூபாய் வரை ஆஃபர் கொடுத்து மாட்டிக்கொண்டு கைதாகி நிற்கிறார்கள். மிக அதிக அளவிலான பணம் எம்.எல்.ஏ பேரத்தில் மாட்டியுள்ளது. ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் பணத்தைச் சப்ளை செய்திருக்கிறார்கள்; அனைத்து விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.” என்றார்.
டிடிவி தினகரன் – ஆளுநர் சந்திப்பு குறித்த கேள்விக்கு, “அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், எல்லோரும் சேர்ந்துதான் செய்கிறார்கள். பாஜக, திமுக, அதிமுக ஆகிய மூவரும் சேர்ந்துதான் இந்த வேலையைச் செய்கிறார்கள். எந்தக் காலத்திலும் எங்கள் தலைவர் யாருக்கும் பயப்படமாட்டார். எப்போது எந்தத் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்.
எம்.எல்.ஏ-க்களிடம் பண ஆசை காட்டி பல வேலைகள் செய்யப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ-க்கள் யாரும் விலை போகமாட்டார்கள். அவர்களின் முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். மக்களின் ஆதரவோடு இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறும்.”
இடைத்தேர்தலில் தவெக வெற்றி குறித்த கேள்விக்கு, “அடுத்து வரும் எல்லாத் தேர்தல்களிலும் கண்டிப்பாக 100% தவெக மட்டும்தான் வெற்றி பெறும். மக்களின் ஆதரவு முழுமையாக உள்ளது. கடந்த 6 மாதங்களில் எல்லா துறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது; அந்த மாற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட்டிருக்கிறது.
கடைநிலையில் உள்ள லஞ்சம் தடுக்கப்படுவதற்கு அனைத்து இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுத் தடுக்கப்பட்டு வருகிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் , பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றைச் சீரமைத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றத்தை மக்களிடம் கொடுத்துள்ளோம். எங்களுக்குக் குறைவான எம்.எல்.ஏ-க்கள்தான் இருக்கிறார்கள்; என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். 100% இன்னும் 30 ஆண்டுகளுக்கு இந்த அரசுதான் இருக்க வேண்டும் என மக்கள் நினைத்துவிட்டார்கள். இதில் எந்த மாற்றமும் கிடையாது; எந்தத் தேர்தல் வந்தாலும் தவெகதான் வெல்லும்” என்று அவர் ரிவித்தார்.









