சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைப் பொது தீட்சிதர்களிடமிருந்து பெற்று, 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 4) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் அமர்வு கடந்த அக்டோபர் 30-ந் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதில், கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நிர்வாகத்தைச் சீரமைக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசன், இணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார், உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி. ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் பொது தீட்சிதர்களின் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
கோயில் சொத்துகள், வரவு செலவுக் கணக்குகள், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை இந்தக் குழு கவனிக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்பது, நிலுவை வாடகையை வசூலிப்பது, முறையான கணக்குகளைப் பராமரிப்பது ஆகிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கனகசபையில் இருந்து பக்தர்கள் அனைவரும் சமமாகத் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
அதேநேரத்தில், கோயிலில் நடைபெறும் தினசரி பூஜைகள், திருவிழாக்கள் உள்ளிட்ட வழிபாட்டு நடைமுறைகள் வழக்கம்போலப் பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.
கோயில் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை இந்தக் குழு செயல்பட வேண்டும் என்பதே உயர்நீதிமன்றத்தின் உத்தரவாக இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்துப் பொது தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அரசியலமைப்பின் 26-வது பிரிவின்படி கோயிலை நிர்வகிப்பதற்குத் தங்களுக்கு உரிமை இருப்பதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அந்த உரிமையில் தலையிடுவதாகவும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் அக்டோபர் 30-ந் தேதி உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.









