திண்டுக்கல் மக்களால் ‘காட்டாஸ்பத்திரி’ என அழைக்கப்படும் மிக பிரபலமான புனித வளனார் மருத்துவமனை, மாநகராட்சிக்கு ரூ.4.96 கோடி சொத்து வரி பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையின் சுவரில் வரி பாக்கி விவரங்களை மிக பெரிய பேனரில் அச்சடித்து சுவரொட்டி போல ஒட்டி இருக்கிறது திண்டுக்கல் மாநகராட்சி.
திண்டுக்கல்–திருச்சி சாலையில் அதாவது பழைய கரூர் சாலையில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது புனித வளனார் மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் ஒரிஜனல் பெயரைவிட ‘காட்டாஸ்பத்திரி’ என்ற பெயர்தான் திண்டுக்கல் மாவட்ட மக்களிடம் மிகவும் பிரபலம்.
இந்த மருத்துவமனை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.4,96,91,130 (ரூ.4.96 கோடி).


இந்தத் தொகையைச் செலுத்தக் கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் அறிவுறுத்தியும் மருத்துவமனை நிர்வாகம் செலுத்தவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையின் நுழைவாயில் சுற்றுச்சுவரில் மாநகராட்சி ஊழியர்கள் பெரிய அறிவிப்புப் பதாகையை வைத்துள்ளனர். அதில் 18 வரி விதிப்பு எண்களும், அவற்றுக்கான நிலுவைத் தொகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.








