2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டங்கள் இப்போது தேவையற்றதாகிவிட்டன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துவிட்ட நிலையில், இந்த சட்டங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டம் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தத் தடை உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ககோடா கிராம ஊராட்சித் தலைவராக 2022-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மங்களா பீம்ராவ் இங்கிளே. இவருக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் இருந்த நிலையில், 2014-ல் 3-வது குழந்தை பிறந்தது. மகாராஷ்டிர கிராம ஊராட்சிகள் சட்டத்தின்படி, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் ஊராட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் மங்களாவின் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றமும் தகுதி நீக்கத்தை உறுதி செய்தது. இதையடுத்து மங்களா பீம்ராவ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3-வது குழந்தை பிறந்தது தொடர்பான ஆதாரங்களை மட்டும் பார்க்காமல், இத்தகைய சட்டங்கள் இன்றைய சூழலுக்குத் தேவையா என்ற கேள்வியையும் எழுப்பியது.
உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது?
இன்றைய விசாரணையில், “2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களைத் தண்டிக்கும் சட்டங்கள் இப்போது பொருத்தத்தை இழந்துவிட்டன என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர் நீதிபதிகள் (We are of the strong opinion that laws that penalise having more than two children have lost their relevance)
பிறப்பு விகிதம் குறைவு
இதற்கு முக்கியக் காரணமாக இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். 2003-ல் இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 3 குழந்தைகள் என்ற அளவில் இருந்த மொத்தக் கருவுறுதல் விகிதம் தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ளது. ஒரு தலைமுறையின் மக்கள் தொகை அடுத்த தலைமுறையிலும் அதே அளவில் தொடர வேண்டுமானால் இந்த விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால் இந்தியா அந்த அளவுக்கும் கீழே சென்றுவிட்டது.
இதுபற்றி நீதிபதிகள், “மக்கள் தொகை அதிகரித்துவிடும் என்ற அச்சம்தான் இந்தச் சட்டங்களுக்கு அடிப்படையாக இருந்தது. கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றங்களால் அந்த அடிப்படையே தகர்ந்துவிட்டது (The foundation of such laws, i.e. the fear of overpopulation, has crumbled due to demographic changes in the past few decades) என்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகை இப்போதே குறையத் தொடங்கிவிட்டது என்று இதற்கு அர்த்தமல்ல. ஆனால் எதிர்காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் வயதில் இருப்பவர்களின் விகிதம் குறையும். இது நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்; இந்த மாற்றங்களைக் கவனிக்கத் தவறினால் இந்தியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
2003-ல் வழங்கப்பட்ட தீர்ப்பு
2003-ல் ஜாவேத் எதிர் ஹரியானா அரசு வழக்கில், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் ஊராட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்திருந்தது. அப்போது மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகக் கருதப்பட்டது.
ஆனால் கடந்த 23 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. அன்றைய சூழலை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை இன்றும் அப்படியே பின்பற்ற முடியுமா என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
மேலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்திய சீனா, 2015-ல் அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியது. பின்னர் 2021-ல் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியது. குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கப் பல்வேறு சலுகைகளை அறிவித்தும் எதிர்பார்த்த அளவுக்குப் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.
இந்த அனுபவத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “இறந்துபோன குதிரையின் மீது ஏறிக்கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க முடியாது” (We cannot ride into the future on a horse that is dead) என்றனர்.
அதாவது, ஒரு காலத்தில் தேவையாக இருந்த சட்டத்தைச் சூழ்நிலை மாறிய பிறகும் தொடர்ந்து பின்பற்றக் கூடாது என்பதைத்தான் நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பாதிக்கப்படுவது எப்படி?
2 குழந்தைகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதையும் நீதிபதிகள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். பல குடும்பங்களில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பெண்கள் மட்டும் முடிவு செய்வதில்லை. கணவர்களின் விருப்பம், ஆண் குழந்தை வேண்டும் என்ற எண்ணம் உள்ளிட்ட பல காரணங்கள் இதில் இருக்கின்றன.
இத்தகைய சூழலில் 3-வது குழந்தை பிறந்ததற்காக ஒரு பெண்ணின் தேர்தலில் போட்டியிடும் உரிமையைப் பறிப்பது நியாயமற்றது என்று நீதிபதிகள் கருதியுள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளால் சில இடங்களில் கட்டாயக் கருக்கலைப்பு, கர்ப்பிணி மனைவியைக் கைவிடுதல், குழந்தைக்குத் தந்தை என்பதை மறுத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆய்வுகளையும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்வதா, வேண்டாமா, எப்போது பெற்றுக்கொள்வது, எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட முடிவு. இந்த உரிமையை அரசியலமைப்பின் 21-வது பிரிவு பாதுகாக்கிறது.
3-வது குழந்தை பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம், குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமைக்கும் ஜனநாயகத்தில் பங்கேற்கும் உரிமைக்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையை உருவாக்குகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.(The imposition of electoral disqualification upon the birth of a third child places a person in the position of choosing between the exercise of their reproductive autonomy and continued participation in democratic governance.)
ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன என்பதற்கும், அவர் மக்கள் பிரதிநிதியாகச் செயல்படும் திறனுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?
இந்த விவகாரத்தில் 2003-ல் வழங்கப்பட்ட ஜாவேத் வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பின் நகலை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து, பொருத்தமான அமர்வை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றப் பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர். (We deem it appropriate to refer the matter to a larger bench for reconsideration of the ratio laid down in Javed v. State of Haryana)
மேலும், மங்களா பீம்ராவ் இங்கிளே ஊராட்சித் தலைவராகத் தொடர அனுமதித்து ஏற்கெனவே வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு, அவரது மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.









