மசோதா நிறைவேற திமுக ஆதரவு மட்டும் போதுமா?

By Mathi

|

Published on 28 Nov 2026, 12:43 PM

Delimitation Bill- DMK- BJP

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவரும் புதிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவை நிபந்தனைகளுடன் ஆதரிப்பதாக திமுக அறிவித்துள்ளது. மக்களவையில் 22 எம்.பி.க்களைக் கொண்ட திமுக ஆதரவு தருவதால், இந்த மசோதாவை பாஜக அரசு எளிதாக நிறைவேற்றிவிட முடியுமா?

திமுகவின் நிலைப்பாடு என்ன?

சென்னையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

மக்களவையில் தமிழ்நாட்டுக்கு தற்போது உள்ள 7.18% பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பது திமுகவின் முதல் கோரிக்கை. 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தை மேலும் 25 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.

அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளை ஒரே விகிதத்தில் 50% அதிகரிக்கவும், மாநிலங்களிடையே தற்போதுள்ள பிரதிநிதித்துவ விகிதத்தை 2051 வரை பாதுகாக்கவும் புதிய வரைவு வகை செய்கிறது. இந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் மசோதாவை ஆதரிக்க திமுக முடிவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., மக்களவையில் தமிழ்நாட்டின் 7.18% பங்கு பாதுகாக்கப்படுவதாகவும், நடைமுறை சார்ந்த அம்சங்களில் தேவைப்பட்டால் திருத்தம் கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

மக்களவையில் தற்போது எத்தனை எம்.பி.க்கள்?

மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. இதில் 3 இடங்கள் காலியாக இருப்பதால், தற்போது 540 எம்.பி.க்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

அரசியல் சாசனத் திருத்தத்துக்கு எத்தனை வாக்குகள் தேவை?

மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து அமல்படுத்தக் கொண்டுவரப்படும் 132-வது அரசியல் சாசனத் திருத்த மசோதாவுக்கு, அரசியல் சாசனத்தின் 368-வது பிரிவின்படி ஒவ்வொரு அவையிலும் 2 நிபந்தனைகள் பொருந்தும். அந்த அவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்டோர் ஆதரிக்க வேண்டும். அத்துடன், வாக்கெடுப்பில் வாக்களித்தவர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிக்க வேண்டும்.

அதன்படி, மக்களவையில் 540 பேரும் வாக்களித்தால் 360 ஆதரவு வாக்குகள் தேவை. சில எம்.பி.க்கள் அவைக்கு வராவிட்டாலோ, அவைக்கு வந்தும் வாக்களிக்காமல் விலகியிருந்தாலோ, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுக்குத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை குறையும்.

கடந்த ஏப்ரல் 17-ந் தேதி 528 பேர் வாக்களித்ததால் 352 ஆதரவு வாக்குகள் தேவைப்பட்டன. அப்போது முந்தைய அரசியல் சாசனத் திருத்த மசோதாவுக்கு 298 ஆதரவு வாக்குகளே கிடைத்ததால் அது தோல்வியடைந்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் என்ன?

மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பலம் 320 எம்.பி.க்கள் என மதிப்பிடப்படுகிறது. கட்சிவாரிக் கணக்கு வருமாறு.

  • பாஜக – 241
  • தெலுங்கு தேசம் – 16
  • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – 13
  • ஐக்கிய ஜனதா தளம் – 12
  • லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) – 5
  • என்சிபிஐ (திரிணாமுல் அதிருப்தி அணி) – 20
  • சிரோமணி அகாலி தளம் – 1
  • பிற கூட்டணிக் கட்சிகள் – 12

திமுகவின் 22 வாக்குகள் போதுமா?

ஆளும் தரப்பின் 320 வாக்குகளுடன் திமுகவின் 22 வாக்குகளும் சேர்ந்தால், மசோதாவுக்கான ஆதரவு 342 ஆக உயரும். மக்களவையில் 540 பேரும் வாக்களித்தால், மசோதாவை நிறைவேற்ற அப்போதும் 18 வாக்குகள் தேவைப்படும்.

அதே நேரத்தில், அந்த 342 ஆதரவு வாக்குகளும் பதிவாகி, வாக்களிப்போர் எண்ணிக்கை 513 அல்லது அதற்குக் கீழே இருந்தால் மசோதா மக்களவையில் நிறைவேறும். அதாவது, 540 எம்.பி.க்களில் குறைந்தது 27 பேர் வாக்களிக்காத சூழலில் திமுகவின் ஆதரவுடன் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியும்.

வேறு எந்தக் கட்சிகள் ஆதரிக்க வாய்ப்புள்ளது?

அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகள் ஒரே விகிதத்தில் 50% உயர்த்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சிக்கு மக்களவையில் 8 எம்.பி.க்கள் உள்ளனர். 4 எம்.பி.க்களைக் கொண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் ஆதரிக்க வாய்ப்புள்ளது.

இந்த இரு கட்சிகளும் திமுகவுடன் சேர்ந்து ஆதரித்தால், மசோதாவுக்கான வாக்குகள் 354 ஆக உயரும். ஆனாலும், மக்களவையில் 540 பேரும் வாக்களித்தால், சிறிய கட்சிகள் அல்லது சுயேச்சைகளிடமிருந்து ஆளும் தரப்பு மேலும் 6 வாக்குகளைப் பெற வேண்டியிருக்கும்.

சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாடு என்ன?

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எப்படி வாக்களிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் 37 எம்.பி.க்களும் வாக்களிக்காமல், மற்ற அனைவரும் வாக்களித்தால், வாக்களிப்போர் எண்ணிக்கை 503 ஆகக் குறையும். அந்தச் சூழலில் மசோதாவுக்கு 336 வாக்குகள் தேவை. திமுகவுடன் ஆளும் தரப்புக்குக் கிடைக்கக்கூடிய 342 வாக்குகளே மக்களவையில் மசோதாவை நிறைவேற்றப் போதுமானவை.

மாநிலங்களவை நிலைமை என்ன?

மக்களவையில் மசோதா நிறைவேறினாலும், மாநிலங்களவையிலும் தனியாகச் சிறப்புப் பெரும்பான்மை பெற வேண்டும். மாநிலங்களவையில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன. ஓரிடம் காலியாக இருப்பதால், தற்போது உள்ள 244 உறுப்பினர்களும் வாக்களித்தால் 163 ஆதரவு வாக்குகள் தேவை.

மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம்

  • பாஜக – 118
  • அதிமுக – 4
  • ஐக்கிய ஜனதா தளம் – 4
  • அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் – 4
  • தெலுங்கு தேசம் – 4
  • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – 2
  • அசாம் கண பரிஷத் – 1
  • ஜனசேனா – 1
  • தேசிய மக்கள் கட்சி – 1
  • பாமக – 1
  • ராஷ்டிரிய லோக் தளம் – 1
  • ராஷ்டிரிய லோக் மோர்ச்சா – 1
  • இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலே) – 1

இந்தக் கட்சிகளின் மொத்த பலம் 143. ஆளும் தரப்பில் கணக்கிடப்பட்டுள்ள 7 நியமன உறுப்பினர்களையும், 3 சுயேச்சை உறுப்பினர்களையும் சேர்த்தால், அதன் ஆதரவு பலம் 153 ஆகிறது.

திமுகவின் 8 மாநிலங்களவை எம்.பி.க்களும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸின் ஓர் எம்.பி.யும் ஆதரித்தால், மசோதாவுக்கான ஆதரவு 162 ஆக உயரும். 244 பேரும் வாக்களித்தால் மேலும் ஒரு வாக்கு தேவை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள் அல்லது பிஜு ஜனதா தளத்தின் 5 எம்.பி.க்களில் ஒருவரின் ஆதரவு கிடைத்தாலும் அந்தப் பற்றாக்குறை தீரும்.

அதே நேரத்தில், 243 பேர் மட்டுமே வாக்களித்தால் 162 வாக்குகளே போதும். எனவே, மாநிலங்களவையிலும் மற்ற கட்சிகளின் ஆதரவும், வாக்கெடுப்பில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதும் மசோதாவின் முடிவைத் தீர்மானிக்கும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel