திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில்… பக்தர்கள் கீழே இறங்க உத்தரவு – தீபமேற்ற வந்த முன்னாள் நீதிபதிகள்!

By Kavi

|

Published on 28 Nov 2026, 3:42 PM

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் இன்று மாலை தீபம் ஏற்றப்படவிருக்கும் நிலையில் மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர், பக்தர்கள் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

ADVERTISEMENT

இந்த உத்தரவை நிறைவேற்றாததால் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் இன்று நவம்பர் 28 கட்டாயம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. 

தீபம் ஏற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள், வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையில் குழுவும் அமைத்தது. 

ADVERTISEMENT

இதையொட்டி ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரும் இன்று (நவம்பர் 28) மதுரை வந்தனர். அதேபோன்று காலை முதலே இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் பக்தர்களும் மலைக்கு சென்றனர். அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்த பிறகு போலீசார் அனுமதி வழங்கினர். 

மலையில் உள்ள தர்காவுக்கு செல்லும் இஸ்லாமியர்களிடமும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 

ADVERTISEMENT

பாதுகாப்பு பணிக்காக சிஆர்பிஎப் வீரர்களும் வருகை தந்தனர். அவர்களுக்கு மேளதாளங்களுடன் மலர் தூவி வரவேற்பும் அளிக்கப்பட்டது. 

மலை அடிவாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தீபச்சட்டியுடன் ரத வீதிக்கு வருகை தந்தனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவும் வருகை தந்தார்.

தொடர்ந்து மதுரை ரெசிடென்சி ஹோட்டலில் தங்கிய முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன், திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானிக பட்டர்களான சுவாமிநாதன், ராஜா பட்டர் மற்றும் செல்லப்பா ஆகியோருடன்  ஆலோசனை செய்தனர். அதாவது, உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருந்து சுடரை எடுத்துச் சென்று கல் தூணில் ஏற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. 

இந்த சூழலில் தீபம் ஏற்றுவதற்கான நேரம் நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் காவல் படை குவிக்கப்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் ஐஜி விக்ரம் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

நான்குக்கும் மேற்பட்ட கம்பெனிகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான வீரர்கள் வருகை தந்துள்ளதாகவும், மலை முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுவார்கள் என்றும், ஒட்டு மொத்த மலையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் பாதுகாப்பு வழங்குவது மட்டுமே எங்களது பொறுப்பு என்றும் கூறினார். 

இந்த நிலையில் தீபம் ஏற்றுவதற்கு, ஐந்து லிட்டர் எண்ணெய் பிடிக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட தீபச் சட்டிகள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

தற்போது, அந்தக் கல் தூணில் தீபம் ஏற்றுவதற்காக அதைச் சுற்றிலும் சாரங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் அதன் மீது களிமண் பூசப்பட்டு அதன் மீது மண்சட்டிகளை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. 

இப்படி அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தற்போது மலை மீது உள்ள பக்தர்கள், இந்து முன்னணியினர் அனைவரும் கீழே இறங்குமாறு சிஆர்பிஎஃப் கேட்டுக் கொண்டுள்ளது. 

மலைக்கு மேல் பாதுகாப்புக்காக சென்றுள்ள அதிகாரிகள் அங்கு உள்ளவர்களை கீழே இறக்கி வருகின்றனர். இன்று தீபத் தூணை காண அனுமதி இல்லை என்று பக்தர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சூழலில், கீழே இருக்கும் இந்து முன்னணியினரும் பக்தர்களும் மேலே செல்ல அனுமதிக்குமாறு சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் காவல்துறையினர் உங்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை என்று கூறியபோது, ’உங்களுக்கு என்ன இங்கு வேலை. நீங்கள் வெளியே செல்லுங்கள்’ என்று காவல்துறையினரிடம் இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பியுள்ளனர். 

இந்த சூழலில் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இரண்டு பேர், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், சிஆர்பிஎஃப் ஐஜி, ஸ்தானிக பட்டர் இரண்டு பேர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இப்படி ஒரு பரபரப்பான சூழலில் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் வசிக்கும் முஸ்லிம் பெண் ஒருவர், “எங்கு வேண்டுமானாலும் அவர்கள் தீபம் ஏற்றிக் கொள்ளட்டும். இது அவர்களுடைய இஷ்டம். இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.  இந்து மதத்தினரும் முஸ்லிம் மதத்தினரும் இங்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். வெளியே இருந்து வந்து தான் இங்கு பிரச்சனை செய்கிறார்கள். பிரச்சினை செய்ய வைக்கிறார்கள்” என்று இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்துள்ளார். 

தற்போது தீபம் ஏற்றுவதற்காக நீதிபதிகள் வருகைத் தந்துள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel