மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் நவ. 30-ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன.
மக்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2023-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியான பிறகு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு, மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்காக அதாவது தொகுதிகள் மறுவரையறை செய்வதற்காக கடந்த ஏப்ரலில் மத்திய அரசு கொண்டுவந்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு மக்களவையில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய அரசு மீண்டும் கொண்டுவருகிறது.

புதிய மசோதாவில், மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதில் புதிய திருப்பமாக, மக்களவையில் இந்த மசோதாவை ஆதரிப்பதாக திமுக அறிவித்துள்ளது. தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
இந்தப் பின்னணியில், நவ. 30-ந் தேதி மக்களவையில் 132-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்த உள்ளார். ஏற்கெனவே மக்களவையில் நிலுவையில் உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவைத் திரும்பப் பெற்று, அதற்குப் பதிலாகப் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவையும் அவர் அறிமுகப்படுத்த உள்ளார்.
அதே நாளில், யூனியன் பிரதேசச் சட்டங்கள் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்துவதும் மக்களவை அலுவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.









