குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில் அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசில் உணவுத்துறை அமைச்சராக வெங்கடரமணன் செயல்பட்டு வருகிறார்.
இவரது மனைவி மீனாட்சி, தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். அதில் குழந்தைகளிடமிருந்து தன்னை பிரித்து வைத்திருப்பதாகவும், தன்னை வீட்டை விட்டு விரட்டி அடிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.
அதில், அமைச்சர் வெங்கடரமணன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அமைச்சராக இருப்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
குழந்தைகளை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆஜராகவில்லை. இதனால் வழக்கை டிசம்பர் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அன்றைய தினம் அமைச்சர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வெங்கடரமணன் மனைவி மீனாட்சி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “வயிற்றில் இருந்த குழந்தையை கலைத்துவிட்டு வருமாறு என்னை துரத்தி அடித்தார். என்னுடைய இரண்டாவது பெண் பிள்ளையை பிரிந்து இருக்கிறேன். அவரைப் பார்ப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை. வீடு எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது.
அபார்ஷன் செய்துவிட்டு சொல் கூப்பிடுகிறேன் என்றார். ஆனால் இன்னும் கூப்பிடவில்லை.
அமைச்சரான பிறகும் அவரை தொடர்பு கொண்டேன். ஆனால் போனை எடுக்கவில்லை.
அதனால் நீதிமன்ற மூலமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன்.
என்னையும் எனது அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
நான் பிரிந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. இப்போது நீதிமன்றத்தின் மூலம் ஜீவனாம்சமும் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
அவரது வழக்கறிஞர் கூறுகையில், ”குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். ஜீவனாம்சமாக 75 லட்சமும், மாதம் 1 லட்ச ரூபாய் மெயிண்ட்டனஸ் தொகையாகவும் கேட்டிருக்கிறோம்” என்றார்.









