மதவாத சக்தியான பாஜகவுடன் எந்தக் காலத்திலும் திமுக கூட்டணி அமைக்காது என்றும், தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் திமுகவின் நிலைப்பாட்டுக்கும் கூட்டணி அரசியலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவம்பர் 28) செய்தியாளர்களிடம் தங்கம் தென்னரசு கூறியதாவது: தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கிறது. நியாயமான தொகுதி மறுவரையறை (Fair Delimitation) வேண்டும் என்பதை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, ஏதோ இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தனியாக எடுத்த முடிவு அல்ல. இன்றைக்கு இதற்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கக்கூடிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் என அனைவரும் ஒன்றுகூடித்தான் ஏற்கெனவே நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தோம்.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் அதனைத் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் எந்தக் காலத்திலும் எங்களுடைய நிலைப்பாட்டைத் துளியளவும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
திமுகவின் 2 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு
நேற்று ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கக்கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவில் நாங்கள் கேட்டிருந்த அம்சங்களையும் ஷரத்துகளையும் இணைத்திருக்கிறார்கள். இப்போது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட இருக்கக்கூடிய இந்த மசோதாவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தற்போது இருக்கக்கூடிய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்துக்கான விகிதாச்சாரம் 7.18% என்ற அதே நிலையிலேயே தொடரும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல 2026-ஆம் ஆண்டு தொடங்கி 2051-ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகளுக்கு இந்த விகிதாச்சாரத்தில் மாற்றம் செய்யப்படாது என்பதற்கும் ஒன்றிய அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யத் துணை போகிறார்களா?
தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய இந்த முக்கிய அம்சங்களை உள்ளடக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழுத்தமான கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு இந்த மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறது. இந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு உண்மையிலேயே நல்லது செய்ய விரும்புகிறார்களா? அல்லது அழிக்க முடியாத துரோகத்துக்குத் துணை போகிறார்களா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
இன்றைக்கு காங்கிரஸ் கட்சி சொல்வதைக் கேட்டுக்கொண்டு இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், வருங்காலத்தில் தற்போது தமிழ்நாட்டுக்கு இருக்கக்கூடிய 39 இடங்களும் குறையக்கூடிய நிலை ஏற்படும்.

முந்தைய மசோதாவை எதிர்த்தது ஏன்?
தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; 2026-ஆம் ஆண்டு முதல் 2051-ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகளுக்கு அது மாறாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அப்போது ஒன்றிய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கவில்லை. அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் இதனை வலியுறுத்தினோம். மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன்னதாக ஒன்றிய அரசு மசோதாவைக் கொண்டுவந்தபோது திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது. மக்களவையில் அந்த மசோதாவைத் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்கடித்தது. காரணம், அன்றைய நிலையில் அந்த மசோதா அப்படியே நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கும்.
2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ஏற்படக்கூடிய ஆபத்து
இன்றைக்கு நாம் சொன்னவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு இந்த மசோதாவைக் கொண்டுவருகிறார்கள். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இங்கே இருக்கக்கூடிய ஆளுங்கட்சி ஆகியவை பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கின்றன. ஒரு வாதத்துக்காகக் கேட்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன சூழ்நிலை ஏற்படும்?
இந்த மசோதா தோற்கடிக்கப்படலாம். ஆனால் ஏற்கெனவே தொடங்கப்பட்டிருக்கக்கூடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகையை வைத்து சாதாரண பெரும்பான்மையுடன் பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றினால் என்ன செய்வது?
தற்போது தமிழ்நாட்டுக்கு இருக்கக்கூடிய 39 இடங்கள் 31 ஆகக் குறையக்கூடிய நிலை ஏற்படும். 39 தொகுதிகளில் இருந்து 59 தொகுதிகளாக உயர்வதை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்களா? அல்லது வரக்கூடிய பேராபத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டு, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் நமது அரசியல் வலிமையையும் இழந்து நிற்கப் போகிறோமா? இந்த 2 கேள்விகள்தான் இப்போது நம்முன் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் எல்லைச்சாமி ஸ்டாலின்
‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்’
என்ற திருக்குறளை மனதில் வைத்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இன்றைக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதியான முடிவெடுத்து தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைப் பாதுகாக்காவிட்டால், வருங்காலத்தில் தமிழ்நாடு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிடும். வரக்கூடிய அந்த ஆபத்தைத் தடுக்க வேண்டும் என்றால் இன்றைக்குக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் 7.18% பிரதிநிதித்துவ விகிதம் தொடர வேண்டும்; 25 ஆண்டுகளுக்கு அந்த விகிதத்தில் மாற்றம் இருக்கக் கூடாது என்ற 2 முக்கிய கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்ட பிறகுதான் இந்த மசோதாவை ஆதரிக்கிறோம்.
எதிர்காலத்தில் வரவிருந்த ஆபத்தை உணர்ந்து, அதை இன்றைக்கே தடுத்து நிறுத்தக்கூடிய எல்லைச்சாமியாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்கு மாறாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் அல்லது இங்கே ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய தவெக ஆகியவை எடுக்கக்கூடிய முடிவுகள், வருங்காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு அழிக்க முடியாத துரோகத்துக்குத் துணை போகக்கூடியவை.
யூ டர்ன் அடித்தது திமுக அல்ல
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு யூ டர்ன் அடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன.
நியாயமான தொகுதி மறுவரையறை என்பதுதான் எங்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்பு பாஜக அரசு கொண்டுவந்த மசோதாவின் அடிப்படையில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் 32 ஆகக் குறையக்கூடிய நிலை இருந்தது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால்தான் 7.18% பிரதிநிதித்துவம் தொடர வேண்டும் என்பதைத் திட்டவட்டமான நிலைப்பாடாக முன்வைத்தோம். இப்போது எங்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
39 தொகுதிகளில் இருந்து 32 ஆகக் குறையக்கூடிய நிலை இருந்தபோது எதிர்த்தோம். இன்று 39 தொகுதிகளில் இருந்து 59 ஆக உயரக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதால் ஆதரிக்கிறோம்.
திமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நியாயமான தொகுதி மறுவரையறை தீர்மானத்துக்குக் கிடைத்த வெற்றியாக இதனை எடுத்துக்கொள்கிறோம்.
ஏற்கெனவே எங்களுடன் இணைந்து நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள்தான் இப்போது யூ டர்ன் அடித்து, தொகுதி மறுவரையறையே வேண்டாம் (No Delimitation) என்ற நிலைப்பாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

தென்னிந்திய மாநிலக் கட்சிகளும் ஆதரவு
இது அரசியல் கட்சிகளுக்கு இடையேயான விவகாரம் அல்ல. தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரம். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாநிலக் கட்சி. தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் உரிமைகள்தான் எங்களுக்குப் பிரதானமானவை.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கானாவில் பிஆர்எஸ் ஆகிய கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
தங்களுடைய மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் பாதிக்கப்படவில்லை; மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில்தான் அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான மாநாட்டில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முதலமைச்சர்களும் இதனை ஏற்றுக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இது தெரியாமல் இல்லை. ஆனால் தங்களுடைய தேசியத் தலைமையின் கருத்துக்கு மாறுபடாமல் செயல்படுகிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.
பாஜகவுடன் கூட்டணியா?
கூட்டணி அரசியலுக்கும் இப்போது எடுத்திருக்கக்கூடிய நிலைப்பாட்டுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. கூட்டணி என்பது அரசியல். இந்த நிலைப்பாடு என்பது தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் குரலையும் மக்களவையில் நமது பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கக்கூடிய முயற்சி. இந்த முடிவை எடுத்தவுடனேயே பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறார்கள் என்ற மாய பிம்பத்தை உருவாக்கி, சொப்பன உலகத்தில் சிலர் சஞ்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டுக்கும் அரசியல் கூட்டணிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
மதவாத சக்திகளுடன் எந்தக் காலத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்காது என்பதை எங்களுடைய தலைவர் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

செய்தியாளர்கள் கேள்வி – தங்கம் தென்னரசு பதில்
செய்தியாளர் கேள்வி: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் குறையக் கூடாது என்று தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் மக்களவையின் மொத்த இடங்கள் 850 ஆக அதிகரிக்கும்போது 7.18% என்ற அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு இன்னும் 2 அல்லது 3 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்க வேண்டுமே?
தங்கம் தென்னரசு பதில்: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18% ஆக நீடிக்கும் என்று கொடுத்திருக்கிறார்கள். தற்போது இருக்கக்கூடிய தொகுதிகளில் எதையும் குறைக்கவில்லை. இந்தத் தொகுதி மறுவரையறையை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்கிறோம்? இன்றைக்கு 39-லிருந்து 59 ஆக உயர்கிறது. இந்த வாய்ப்பை விட்டுவிட்டால், இந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முடித்துவிட்டு சாதாரண பெரும்பான்மையுடன் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றினால் யாராலும் தடுக்க முடியாது அல்லவா? அப்படி வந்தால் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் 31 ஆகக் குறையக்கூடும். ஏற்கெனவே இருக்கக்கூடிய இடங்களையும் இழந்துவிடுவோம். இதற்கு இதுவரை யாராவது பதில் சொல்கிறார்களா?
காங்கிரஸ் முன்வைக்கும் மாற்றுத் திட்டம் என்ன?
நியாயமான தொகுதி மறுவரையறை என்ற மாற்றுத் திட்டத்தை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். காங்கிரஸோ மற்ற கட்சிகளோ இதற்கு ஏதாவது மாற்றுத் திட்டத்தை முன்வைத்திருக்கிறார்களா? எதுவுமே சொல்லவில்லை. தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை நம்பி நாங்களும் அந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அடுத்த ஆண்டே 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவந்து சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றிவிட்டால், தமிழ்நாட்டின் தொகுதிகள் 32 ஆகக் குறைந்துவிட்டால் என்ன செய்வது? அப்போது அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்த்து, தொகுதிகள் குறையும் என்று தெரிந்தும் ஏன் தடுக்கவில்லை? என்றுதானே கேட்பார்கள்?
வட மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸுக்குத் திராணி இல்லை
காங்கிரஸ் கட்சி ஒரு தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. வட மாநிலங்களில் பாஜகவை எதிர்த்து நிற்பதற்குத் திராணியும் தெம்பும் காங்கிரஸுக்கு இல்லை. ஆனால் திமுகவுக்கு அப்படிக் கிடையாது. திமுக ஒரு மாநிலக் கட்சி. மாநில உரிமைகள் எங்களுக்கு முக்கியம். தமிழ்நாட்டின் உரிமையைத்தான் முதலில் பார்ப்போம். எங்களுடைய உரிமையைப் பாதுகாப்போம்.
இங்கே ஒரு கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறது. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதும் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வரக்கூடிய ஆபத்தில் இருந்து தமிழ்நாட்டை நிச்சயமாகக் காப்பாற்ற வேண்டும்.
அண்ணா சொன்னதைப் போல, வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்பட்ட பிறகுதான் நாட்டில் இருக்கக்கூடிய மற்ற பிரச்சினைகளைப் பார்க்க முடியும்.
தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கும் அணுகுமுறை ஏன்?
செய்தியாளர் கேள்வி: மாநிலங்களுக்கு இடையேயான குழந்தைப் பேறு விகிதத்தில் உள்ள வேறுபாடுகள் குறையும் வரை தொகுதி மறுவரையறையை ஒத்திவைக்க வேண்டும் என முன்பு வலியுறுத்திய திமுக, இப்போது 2051 வரை மட்டும் ஒத்திவைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தது ஏன்?
தங்கம் தென்னரசு பதில்: உடனடியாக என்ன ஆபத்து வருகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். முன்பு இருந்ததற்கும் இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலைக்கும் மிக முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைமுறைகள் தொடங்கப்படவில்லை. இன்றைக்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. 2027-ஆம் ஆண்டு புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் தொகுதி மறுவரையறையைக் கொண்டுவர முடியும்.
சாதாரண பெரும்பான்மையுடன் தொகுதி மறுவரையறையைக் கொண்டுவந்தால் எந்தக் கட்சியின் ஆதரவும் தேவையில்லை. பாஜக எந்த வடிவத்தில் மசோதாவைக் கொண்டுவர விரும்புகிறதோ, அந்த வடிவத்தில் கொண்டுவந்துவிடலாம். அப்படிக் கொண்டுவரப்பட்டால் நாம் தயாராவதற்கு முன்பாகவே நமக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும். ஏற்கெனவே ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்யவும் முடியாது. எனவே கண்ணெதிரே ஒரு பேராபத்து வந்துகொண்டிருக்கும்போது அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்துவதுதான் அறிவுடைமையாக இருக்கும்.
59 தொகுதிகளா? 61 தொகுதிகளா?
செய்தியாளர் கேள்வி: தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-லிருந்து 59 ஆக உயரும் என்று சொல்கிறார்கள். ஆனால் 850 தொகுதிகளில் 7.18% என்ற அடிப்படையில் 61 தொகுதிகள் வர வேண்டும் என்று சொல்கிறார்களே?
தங்கம் தென்னரசு பதில்: எண்ணிக்கை விளையாட்டுக்குப் போவதற்கு முன்னால் தொகுதிகள் கூடுகிறதா? குறைகிறதா? என்பதுதானே பிரச்சினை? 59 தொகுதிகளோ, 61 தொகுதிகளோ எண்ணிக்கை அதிகரிக்கிறது. 61 தொகுதிகள் வேண்டாம் என்று நாங்கள் சொல்கிறோமா? 61 தொகுதிகள் கிடைத்தாலும் சரி, 71 தொகுதிகள் கிடைத்தாலும் சரி, அதில் மகிழ்ச்சியடையக்கூடிய முதல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
எங்களுடைய கவலை என்னவென்றால் இப்போது இருக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடக் கூடாது. அதைத் தடுப்பதற்கான முயற்சியைத்தான் செய்வோம். அதைத்தான் செய்திருக்கிறோம்.
2 அமைச்சர் பதவிகளுக்காக காங்கிரஸ், விசிக எதிர்ப்பு
செய்தியாளர் கேள்வி: நியாயமான தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஏற்கெனவே திமுகவுடன் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்தன. இப்போது திடீரென எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் திமுகவைப் புறக்கணிப்பதற்கும் என்ன காரணம்?
தங்கம் தென்னரசு பதில்: அரசியல்தான். வேறு ஒன்றும் காரணம் கிடையாது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் 2 அமைச்சர் பதவிகளுக்காகப் பார்க்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் 2 அமைச்சர் பதவிகளுக்காகப் பார்க்கிறார்கள். அவர்களில் யாரோ ஒருவரை எம்.பி. ஆக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட குறுகிய நோக்கங்கள்தான் இருக்கின்றனவே தவிர, நீண்ட கால அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும் தமிழ்நாட்டின் அரசியல் வலிமையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை இல்லை.
இந்த வாய்ப்பை விட்டால் என்ன பிரச்சினை வரும் என்பது எனக்குத் தெரிந்ததைப் போல அவர்களுக்கும் தெரிந்திருக்கும்; தெரிந்திருக்க வேண்டும்.
தெரிந்திருந்தும் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்று சொல்வதைப் போல இருக்கிறார்கள்.
எதிர்காலத்திலும் பாஜகவுடன் இணைந்து செயல்படுமா திமுக?
செய்தியாளர் கேள்வி: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டதால் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். எதிர்காலத்திலும் பாஜக கொண்டுவரக்கூடிய மசோதாக்களில் திமுகவின் நிலைப்பாடு ஒத்துப்போனால் அவர்களுடன் இணைந்து செயல்படுவீர்களா?
தங்கம் தென்னரசு பதில்: இது முற்றிலும் யூகத்தின் அடிப்படையிலான கேள்வி. இப்போது இருக்கக்கூடிய பிரச்சினை என்பது நேரடியாக, நிதர்சனமாக நீண்டகாலப் பாதிப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு விவகாரம். இதில் நன்கு பரிசீலித்து ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். நீங்கள் சொல்லக்கூடிய யூகங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாதா?
செய்தியாளர் கேள்வி: பாஜக தனது அரசியல் ஆதாயத்துக்காகத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் ஜெரிமாண்டரிங் (Gerrymandering) நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் காணாமல் போகக்கூடிய ஆபத்து இருக்கிறதே?
தங்கம் தென்னரசு பதில்: இதில் 2 விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஜெரிமாண்டரிங் உள்ளிட்ட விவகாரங்கள் இரண்டாவது கட்டத்தில் வரக்கூடியவை. முதலில் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்ட பிறகுதான் ஒரு தொகுதியின் எல்லைகள் எப்படி இருக்க வேண்டும், மக்கள் தொகை எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற விவகாரங்கள் வரும்.
அதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடிய ஒரு மசோதாவைக் கொண்டுவந்தால் என்ன செய்வீர்கள்? 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போது இருக்கக்கூடிய 39 தொகுதிகள் 32 ஆகக் குறைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
தொகுதிகளின் எல்லைகள் மாற்றப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவீர்களா? அல்லது தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதைப் பற்றிக் கவலைப்படுவீர்களா? உங்களுடைய அடிப்படையான தொகுதிகளின் எண்ணிக்கையே குறைந்துவிட்டதே! வரக்கூடிய பேராபத்தை உணர்ந்தும், அதை உணராதது போலக் கடந்து செல்வதற்கான முயற்சியாகவே இந்த வாதங்களைப் பார்க்கிறேன்.
திமுக மீது சமூக வலைதளங்களில் பிரச்சாரம்
செய்தியாளர் கேள்வி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தொகுதி மறுவரையறை மசோதா மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்; யாரும் ஆதரிக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல திமுகவின் தொகுதி மறுவரையறை தொடர்பான கோரிக்கைகளைத் தாண்டி வேறு சில கோரிக்கைகளையும் பாஜக ஏற்றுக்கொண்டிருப்பதால்தான் திமுக ஆதரிக்கிறது என்பது போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவுகின்றனவே?
தங்கம் தென்னரசு பதில்: அவர்களுடைய இயலாமையின் வெளிப்பாடாகத்தான் இதனைப் பார்க்கிறேன். காலையில் இருந்து சமூக வலைதளங்களில் திட்டமிட்டுப் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய இலக்கு மிகத் தெளிவாக இருக்கிறது. ஏற்கெனவே நிலை மாறிப்போனவர்கள், நிலை தடுமாறிப்போனவர்கள் இன்றைக்கு அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அந்தக் கருத்துகளில் எந்தச் சாராம்சமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
திமுகவின் முடிவு வரலாற்றுப் பிழையா?
செய்தியாளர் கேள்வி: திமுக வரலாற்றுப் பிழையான முடிவை எடுத்திருப்பதாகவும் சிறுபான்மையினருக்கு எதிரான முடிவை எடுத்திருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறதே?
தங்கம் தென்னரசு பதில்: அவர்கள் இதைப் புரிந்துகொள்ளவே இல்லை. நான் இதுவரை விளக்கியிருப்பது அவர்களுக்கும் தெரியும். நாளைக்கு அந்த ஆபத்து வந்து தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்போது அவர்கள் எங்கே போய் நிற்கப் போகிறார்கள்?
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடிப் பாதுகாக்க வேண்டிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இப்படி ஒரு ஆபத்து வரும் என்று தெரிந்த பிறகும் அதனைத் தடுக்காமல் இருக்க முடியுமா? நியாயமான தொகுதி மறுவரையறை தொடர்பாக நாம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல், பாஜக ஏற்கெனவே கொண்டுவந்த மசோதாவை அதன் பழைய வடிவத்திலேயே இன்றைக்குக் கொண்டுவந்திருந்தால் எங்கள் மீது குற்றம் சொல்லலாம். ஆனால் அப்படி இல்லை. மசோதாவில் 2 மிக முக்கியமான மாற்றங்கள் வந்திருக்கின்றன. அந்த மாற்றங்களைத் திட்டமிட்டு மறைக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது
தமிழ்நாட்டின் உரிமையைத்தான் முதலில் பார்ப்போம் என்று மீண்டும் சொல்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை கூடுகிறது என்று காங்கிரஸ்காரர்கள் பேசுகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் இருப்பவர்களுக்குப் பயந்துதான் அவர்கள் பேசுகிறார்கள். அங்கே சென்று பாஜகவை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
எங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையக் கூடாது. எங்களுடைய உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. நாங்கள் சொன்னவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே நாங்கள் இந்த மசோதாவை ஆதரிக்கிறோம். இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.









