உலக அரசியல் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச வர்த்தக மாற்றங்கள் என்று சவால்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகிறது. இந்திய நிறுவனங்களின் நிதிநிலையும் வங்கித் துறையின் ஆரோக்கியமும் வலுப்பெற்றுள்ளன. இந்தச் சூழலில் நாட்டின் அடுத்த முதலீட்டு, வளர்ச்சிச் சுழற்சியை நான்கு முக்கியத் துறைகள் வழிநடத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
1. மின்சாரத் துறை
நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி, டேட்டா சென்டர்கள், டிஜிட்டல் கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றால் இந்தியாவின் மின்சாரத் தேவை வேகமாகக் கூடிவருகிறது. 2027 முதல் 2031 வரையிலான நிதியாண்டுகளில் மின்சாரத் துறைக்கு ரூ.35 லட்சம் கோடி முதல் ரூ.40 லட்சம் கோடி வரை முதலீடு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தித் திறன் 143 ஜிகாவாட்டிலிருந்து 385 ஜிகாவாட்டாக உயரலாம். மின்சாரத்தைச் சேமிக்கும் கட்டமைப்புகளையும் விரிவாக்க வேண்டும். இதற்காக மின் பரிமாற்றக் கட்டமைப்பு, பேட்டரிகள், சூரிய மின்சாதன உற்பத்தி ஆகியவற்றில் பெரிய முதலீடு அவசியம்.
2. ஏற்றுமதி
கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருட்கள், சேவைகளின் ஏற்றுமதி 863 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. பல நாடுகளோடு போட்ட வர்த்தக ஒப்பந்தங்களும் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவாக்கியுள்ளன. ஆனால் உலகச் சந்தையில் போட்டியும் கூடிவருகிறது. பொருட்களின் தரம், உற்பத்திச் செலவு, போக்குவரத்து வசதி, விநியோகச் சங்கிலித் திறன் ஆகியவை மேம்பட்டால்தான் ஏற்றுமதியில் நீடித்த வளர்ச்சி வரும். வியட்நாம், சீனா போன்ற நாடுகள் ஏற்றுமதியை வைத்து உற்பத்தித் துறையை வலுப்படுத்தியதை இந்தியாவும் முன்மாதிரியாகப் பார்க்கலாம்.
3. உள்கட்டமைப்பு
சாலைகள், ரயில்வே, நகர்ப்புறப் போக்குவரத்து, சரக்கு முனையங்கள் என்று உள்கட்டமைப்பில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்கிறது. 2018 நிதியாண்டில் ரூ.4.4 லட்சம் கோடியாக இருந்த உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, இந்த நிதியாண்டில் சுமார் ரூ.11.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நல்ல சாலை, ரயில் இணைப்புகள் சரக்குப் போக்குவரத்துச் செலவைக் குறைக்கும். அதனால் உற்பத்தி நிறுவனங்களின் போட்டித்திறன் கூடும், புதிய தொழிற்சாலைகளும் உருவாகும். கட்டுமானத்தின்போது நேரடியாக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
4. உற்பத்தித் துறை
இந்த நான்கு துறைகளையும் இணைக்கும் முக்கியக் கண்ணி உற்பத்தித் துறைதான். செமிகண்டக்டர், மின்னணுப் பொருட்கள், மின்சார வாகனங்கள், பேட்டரிகள், சூரிய மின்சாதனங்கள், டேட்டா சென்டர்கள் போன்றவை அடுத்த ஐந்து நிதியாண்டுகளில் ரூ.9 லட்சம் கோடி முதல் ரூ.11 லட்சம் கோடி வரை முதலீட்டை ஈர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து பொருட்களைத் தயாரிப்பதோடு நிற்காமல், உதிரிபாகங்கள், வடிவமைப்பு, ஆராய்ச்சி, மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்தி ஆகியவற்றையும் இந்தியாவிலேயே பெருக்க வேண்டும். அப்போதுதான் அதிக மதிப்புக் கூட்டலும் வேலைவாய்ப்பும் ஏற்றுமதி வருவாயும் கிடைக்கும்.
நான்கும் இணைந்தால்?
மின்சாரம் உற்பத்திக்கு நம்பகத்தன்மை தரும். உள்கட்டமைப்பு செலவுகளைக் குறைக்கும். ஏற்றுமதி உலகச் சந்தையை விரிவாக்கும். உற்பத்தித் துறை இந்த வாய்ப்புகளை வேலைவாய்ப்பாகவும் வருமானமாகவும் மாற்றும்.
ஆனால் முதலீடுகள் அறிவிக்கப்படுவதே வளர்ச்சிக்கு உத்தரவாதம் ஆகாது. அறிவித்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்து, உற்பத்தி கூடி, நிறுவனங்களின் வருவாயிலும் வேலைவாய்ப்பிலும் தெரிய வேண்டும். அப்போதுதான் இந்த வளர்ச்சி நீடிக்கும்.









