திருத்தங்களைப் பாஜக ஏற்காவிட்டால் எதிர்த்து வாக்களியுங்கள் : திமுகவினருக்கு கி.வீரமணி அறிவுரை!

By Kavi

|

Published on 28 Nov 2026, 9:37 PM

தி.மு.க. எம்.பி.,க்கள் கூட்டத் தீர்மானமும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரையும் நம்பிக்கை அளிக்கிறது என்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கி.வீரமணி கேட்டுக்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (நவம்பர் 28) மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்த நிலையில் இன்று (28.11.2026) காலை 10 மணியளவில் நாம் ஓர் அவசர – அவசிய வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்த செய்திகளின் அடிப்படையில் நம்முடைய அழுத்தமான கருத்தை உரிமையுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருக்கு சுட்டிக்காட்டியிருந்தோம்.

அமித்ஷாவின் வெற்று உறுதிமொழிகளையோ, விஷ உருண்டைகளையோ நம்பிவிடக் கூடாது; 2024 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ, அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்” என்ற தீர்மானத்திலும், அதற்கு அடுத்து 2025 இல் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிலும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம்.

ADVERTISEMENT

தி.மு.க. எம்.பி.,க்கள் கூட்டத் தீர்மானமும் – தி.மு.க. தலைவரின் உரையும்!

இந் நிலையில், தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையும், நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் வெளிவந்துள்ளன. (வெறும் தலைப்பைப் பார்த்தும், ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்தும் முடிவெடுக்கக் கூடாது.)

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் கொண்டு வரப்படவுள்ள தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவும், அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவும் வெளிவந்துள்ளன.

அந்த மசோதாக்களின் அடிப்படையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தெளிவாகத் தன்னுடைய கருத்தை முன்வைத்துள்ளது. ஆழ்ந்து நோக்கத்தக்கதும், எதிர்கால ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியதும் ஆகும்.

மூன்று பிரச்சினைகள்!

  1. எல்லா மாநிலங்களுக்கும் பாகுபாடு இன்றி, தற்போது 50% இடங்கள் உயர்த்தப்படுவதன் மூலம் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே மாநிலங்களுக்குத் தொகுதிகளின் எண்ணிக்கை அமையும் என்று மசோதா குறிப்பிடுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் (7.18%) குறையாது என்பது மசோதாவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  2. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையிலேயே 25 ஆண்டுகளுக்கு (2026 வரை) தொகுதி விகிதம் இருக்கும் என்னும் 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிலைப்பாடு, இப்போதும் நீட்டிக்கப்பட்டு, 2051 வரை இதே விகிதம் நீடிக்கும் என்பதும் மசோதாவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    இவை இரண்டும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவையாகும். இவை உறுதிமொழி களாக அல்லாமல், மசோதாவிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன.
  3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 81 இல், 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 84 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் படி, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் படி, மாநிலங்களுக்குத் தொகுதிகளின் விகிதம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு இருக்கும் என்ற இந்தச் சட்டத் திருத்தம் 2026 வரை மட்டுமே செல்லும்!
    இப்போது, அடுத்த கட்ட நடவடிக்கைக்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறை வேற்றப்படாவிட்டால், தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது. ஆனால்் 2027 ஆம் ஆண்டு புதிதாக தொகுதி மறுவரையறை சட்டம் கொண்டு வந்து, தொகுதிகளை மாற்றியமைக்கும் சட்டத்தை, சாதாரணப் பெரும்பான்மை மூலமே கொண்டு வந்துவிட முடியும். இது மிகப்பெரும் ஆபத்தாகும்.
    என்றாலும், இந்தத் தொகுதி மறுவரையறையைத் தங்களுக்கு ஏற்ற வகையில் பா.ஜ.க.வால் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற ஆபத்தும் இதில் உள்ளது. அதைத் தடுக்க வேண்டும்.
    திமுகவைப் பொறுத்தவரை, இன்று (28.11.2026) நடைபெற்ற கூட்டத்தில் உரை யாற்றிய போது, “நாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் நாம் தற்போது வரை உறுதியாக உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் பறிபோகக் கூடாது. அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்” என்று அறுதியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின் .
  4. இதைத் தடுக்க, இம் மசோதாவை அப்படியே ஆதரிக்காமல், சில முக்கியமான திருத்தங்களைக் கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. அத் திருத்தங்கள், தன்னிச்சையாக ஒன்றிய அரசுக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கப்படாமல், ஜனநாயக ரீதியான வாய்ப்பைப் பாதுகாக்கப் பெரிதும் உதவும்.
    தி.மு.க. தரும் அத் திருத்தங்களை ஒன்றிய அரசு ஏற்க முன்வந்தால் மட்டுமே, இம் மசோதாவுக்குத் திமுக ஆதரவளிக்கும் என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
  5. எல்லா மாநிலங்களுக்கும் 50% என்ற அளவில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்போது, மேட்டிலும் ஒரு பிடி மண், பள்ளத்திலும் ஒரு பிடி மண் என்ற நிலை இருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றாலும், இப்போது இருக்கும் விகிதமாவது மாறாமல் இருக்க வேண்டும் என்பதும், ஜனநாயகத்துக்கு ஆபத்தான ஒரு தலைப்பட்சமான முடிவுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசை அனுமதித்துவிடக் கூடாது. அதை மூக்கணாங்கயிறு போட்டுக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் அவசியமாகும். அந்த மூக்கணாங்கயிறுதான் திமுக கொடுக்கும் திருத்தம்.
    வேண்டாம் வெளிநடப்பு –

எதிர்த்து வாக்களிக்க வேண்டும்!

  1. தி.மு.க. முன்வைக்கும் திருத்தங்களை ஏற்றுக் கொண்டு, மசோதா முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே தி.மு.க. இதனை ஆதரிக்க வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். அப்படி தி.மு.க. கொடுக்கும் திருத்தங்களைப் பா.ஜ.க. ஏற்க மறுத்தால், வெளிநடப்பு போன்றவற்றைச் செய்யாமல், வெளிப்படையாக, அதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்பதே நமது உறுதியான கருத்தாகும்.
    கடைசிவரை இதில் விழிப்புடன் இருந்து, நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதையும், அதில் எதுவும் சூழ்ச்சிகள் நடக்கிறதா என்பதையும் கவனித்துத்தான் தி.மு.க. இதில் இறுதி முடிவை எடுக்கவேண்டும் என்பதை நினைவூட்ட வேண்டியதும் நமது கடமை” என்று கூறியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel