பிஸ்லேரி தண்ணீரில் பாக்டீரியா? மேற்கு வங்க ஆலை மாதிரியில் கோலிஃபார்ம் கண்டுபிடிப்பு… வழக்குத் தொடர FSSAI அனுமதி

By Minnambalam Desk

|

Published on 28 Nov 2026, 11:36 PM

இந்தியாவின் முன்னணி பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லேரி (Bisleri) மறுபடி சிக்கலில் மாட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள அதன் உற்பத்தி ஆலையிலிருந்து எடுத்த குடிநீர் மாதிரியில் கோலிஃபார்ம் (Coliform) பாக்டீரியா இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

அதையடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையமான FSSAI, நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர அனுமதி கொடுத்துள்ளது. இந்த வாரத்தில் பிஸ்லேரிக்கு எதிராக எடுக்கப்படும் இரண்டாவது சட்ட நடவடிக்கை இது.

ADVERTISEMENT

ஜல்பைகுரி ஆலையில் என்ன கிடைத்தது?

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தெலிபாரா கிராமத்தின் பிஸ்லேரி ஆலையிலிருந்து குடிநீர் மாதிரி எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதில் கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பது முதல் ஆய்வகத்திலும், மேல்முறையீட்டுக்குப் பிறகு பரிசோதித்த பரிந்துரை ஆய்வகத்திலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த வகை பாக்டீரியாக்கள் கழிவுநீர் கசிவு, சேதமடைந்த குழாய்கள் போன்ற காரணங்களால் நீர் விநியோக அமைப்புக்குள் கலக்கலாம். இதையடுத்து PB 201 என்ற குறிப்பிட்ட தயாரிப்புத் தொகுதியின் விற்பனைக்கு 2026 ஆகஸ்ட் 12 அன்று தடை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கோவா ஆலையிலும் ஏற்கெனவே சிக்கல்

மேற்கு வங்க விவகாரத்துக்குச் சில நாட்கள் முன்பு, கோவாவில் உள்ள பிஸ்லேரி ஆலையின் குடிநீர் மாதிரியும் பாதுகாப்பற்றது என்று அறிவிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட ப்ரோமேட் (Bromate) அதிகமாக இருப்பதாக FSSAI முதலில் சொன்னது. பிஸ்லேரி மேல்முறையீடு செய்ததால், மாதிரி இன்னொரு ஆய்வகத்துக்குப் போனது. அங்கே பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) கண்டறியப்பட்டதால், அந்த மாதிரியும் பாதுகாப்பற்றது என்றே வகைப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006-ன் கீழ் பிஸ்லேரி மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிஸ்லேரி சொல்வது என்ன?

தங்கள் குடிநீர் பாதுகாப்பானது என்றும், தரப் பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பிஸ்லேரி சொல்லியுள்ளது. கோவா விவகாரத்தில், தங்கள் உற்பத்தி நடைமுறையில் 10 கட்டங்களாக 90-க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகள் நடப்பதாக நிறுவனம் கூறுகிறது. அந்த மாதிரியை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் மறுபடி பரிசோதித்ததாகவும், FSSAI அதிகாரிகளோடு தொடர்ந்து ஒத்துழைப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. ஆனால் மேற்கு வங்க விவகாரத்தில் நிறுவனத்தின் விரிவான பதில் உடனே கிடைக்கவில்லை.

எல்லா பாட்டில் குடிநீர் நிறுவனங்களுக்கும் சோதனை

இதைத் தொடர்ந்து பாட்டில் குடிநீர் நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை FSSAI தீவிரமாக்கியுள்ளது. மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கு அனுப்பிய உத்தரவில், குடிநீர் ஆலைகளில் வழக்கமான ஆய்வுகளும் இடர் அடிப்படையிலான மாதிரிப் பரிசோதனைகளும் நடத்தச் சொல்லப்பட்டுள்ளது. பெப்சிகோ, கோகா-கோலா, டாடா கன்சியூமர், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளும் இந்தக் கண்காணிப்புக்குள் வரலாம். அடுத்த சில வாரங்களில் நாடு முழுக்க எடுக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வக முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel