பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்டப் பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல்கள் பரவின. இது குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து திமுக, அதிமுக சார்பில் டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை இல்லாத சூழலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற தலையீட்டிற்கு பின்னர் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அளித்த புகார் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதி லட்சுமி நாராயணன், “அரசு யாரையும் பாதுகாக்க முயற்சிக்கக் கூடாது” என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், உள்ளூர் காவல் கண்காணிப்பாளருக்குப் பதிலாக உயர் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஐஜி காமினி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றது. கடந்த 27-ஆம் தேதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
எம்எல்ஏ அருள் விக்னேஷை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.









