தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம்: திமுக முடிவை மறுபரிசீலனை செய்ய திருமா கோரிக்கை

By Pandeeswari Gurusamy

|

Published on 29 Nov 2026, 11:44 AM

நாடாளுமன்றத்தில் தொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரித்தால் பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்பதாகத்தான் போய் முடியும் என திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவை தீவிரமாக எதிர்ப்பது என்ற முடிவு நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் பாரதிய ஜனதாவின் கனவு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்று பாரதிய ஜனதாவும் சங் பரிவார அமைப்புகளும் நம்புகின்றன.

முதலில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது என்று பாஜக ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதற்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை உயர்த்தினால் பாதிக்கப்படும் என்கிற குரல் ஓங்கி ஒலித்தது. தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததின் அடிப்படையில் தான் அந்த சட்ட மசோதா தோல்வி அடைந்தது. பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால் தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் சராசரியாக 50 சதவீத இடங்களை உயர்த்துவது என்ற ஒரு முடிவை பாஜக ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது. அதற்கு திமுக ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுத்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்குமேயானால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு விடும் என்கிற ஒரு சூழல் உள்ளது. ஆகவே ஜனநாயக சக்திகளின் குரல் திராவிட முன்னேற்றக் கழகம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதாக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதே கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வேண்டுகோளாக முன்வைக்கிறோம்.

வட இந்திய மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை பெருகுவதன் மூலம் பாஜக தமக்கு செல்வாக்குள்ள மாநிலங்களில் வெற்றி பெறுவதன் மூலம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற கணக்கு போடுகிறது. அந்த வகையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அவர்களால் வென்றெடுக்க முடியும் என்றும் நம்புகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பாரதிய ஜனதா அடுத்த கட்ட நகர்வு ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்பதாகத்தான் போய் முடியும். எனவே இந்த சட்ட மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கணக்காக உள்ளது, வேண்டுகோளாக உள்ளது. அதையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்துகிறது. ” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel