‘நாங்கள் எட்டப்பன்கள் அல்ல- கட்டபொம்மன்கள்.. கொள்கையில் சமரசம் இல்லை’- ராகுலுக்கு ஸ்டாலின் ’நச்’ பதிலடி!

By Mathi

|

Published on 29 Nov 2026, 12:03 PM

Delimitation-Stalin-RahulGandhi

தொகுதி மறுவரையறை மசோதாவைத் திமுக எதிர்க்க வேண்டும் என மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். “இந்த மசோதாவை நாம் ஒன்றாகத் தோற்கடிக்க வேண்டும்” என ராகுல் காந்தி அழைப்பு விடுத்த நிலையில், “தமிழ்நாட்டின் நலனை முதன்மையாகக் கொண்டே முடிவெடுக்கிறோம். இந்தப் பாதையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்” என்று ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாகத் திமுக அறிவித்துள்ளது. மசோதா நாளை (நவ. 30) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்த இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று (நவ. 29) சென்னை வருகின்றனர்.

ADVERTISEMENT

‘ஒன்றாக மசோதாவைத் தோற்கடிப்போம்’ – ராகுல் காந்தி

சென்னைப் பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் சென்னைக்குச் சென்று மு.க. ஸ்டாலினைச் சந்திக்க இருப்பதாகவும், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடமும் திமுகவிடமும் கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்களவையின் இடங்களை 850 ஆக உயர்த்துவது இந்தியாவில் ஜனநாயகத்துக்கு முடிவுகட்டும் என்றும், நாட்டின் ஒட்டுமொத்தத் தேர்தல் வரைபடத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க பாஜக–ஆர்எஸ்எஸ்ஸுக்கு அது வாய்ப்பளிக்கும் என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT

“தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக சகோதரர் ஸ்டாலின் எப்போதும் பாறைபோல் உறுதியாக நின்றவர். நாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் இந்த மசோதாவை நாம் ஒன்றாகத் தோற்கடிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறினார்.

‘வரலாறு எங்களை எப்படிப் பார்க்கும்?’ ஸ்டாலின் பதிலடி

ராகுலின் பதிவுக்குப் பதிலளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுக ஆற்றிய வரலாற்றுப் பங்கை அங்கீகரித்ததற்காக ராகுலுக்கு நன்றி தெரிவித்தார்.

ADVERTISEMENT

“தமிழ்நாட்டின் நலனையும் தமிழ் மக்களின் நலனையும் முதன்மையாகக் கொண்டே எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்திருக்கிறோம். இந்தப் பாதையில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே பார்க்கும் என்று நம்புகிறேன்” என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel