தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில் நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை, தனது எக்ஸ் பதிவில், “அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே!
நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம் ” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தி சேனல் ஒன்றில் பேசிய செல்வப் பெருந்தகை , “திமுக கூட்டணியைத் தொடர வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் எனது கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதனை விட்டுப் போனதற்காகத்தான் எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்; 220 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சமமாக இந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்பக் கூடியவர்கள். இதனை நாம் இழந்துவிட்டால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும் என்பதை அப்போதே உணர்ந்தேன்.
இந்த நட்பு எஃகுக் கோட்டை போன்ற வலிமையான நட்பு. அன்னை இந்திரா காந்தி குடும்பத்திற்கு எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது; குறிப்பாக, தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு எந்தவிதத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்தக் கூட்டணி வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தினேன். ஆனால், கடைசியில் நான் சொன்ன கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வேறு முடிவெடுத்து விட்டார்கள். ஆகவே, தலைமை எடுத்த முடிவிற்குக் கட்டுப்பட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம். இப்பொழுது எல்லோரும் ‘எதற்காக விட்டுச் சென்றீர்கள்?’ என்று நினைவுகூர்கிறார்கள்.
இந்தியாவின் தலையெழுத்தையே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்யும் இடத்திற்கு இன்று வந்துவிட்டார்களே, இதற்கு யார் பொறுப்பேற்பது? குறைந்தபட்சம் அந்த நட்பையாவது தொடர்ந்திருக்க வேண்டும் இல்லையா? கூட்டணி மாறிவிட்டோம்; ஆனால் அந்த நட்பு எப்படிப்பட்ட நட்பு! நீண்ட நெடிய நாட்களாக நாடாளுமன்றத்திலும், ஒன்றிய அமைச்சரவையிலும் இணைந்திருந்த நாம், கசப்பில்லாமலாவது இருந்திருக்கலாம். ஆனால், யாரோ ஒருவர் இருவர் பயனடைவதற்காக, இன்று இந்தத் தேசத்தையே மிகப்பெரிய கேள்விக்குறிக்கு உள்ளாக்கும் வகையில், தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் மூலம் இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
இந்த 22 எம்பிக்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம்! எங்களுக்குத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவைத் தவிர வேறு எதுவும் கிடையாது; இதனை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இருவர் அமைச்சராவதற்கோ, ஒருவர் ராஜ்யசபா உறுப்பினர் ஆவதற்கோ அல்ல; இது நீண்ட நெடிய போராட்டம், மிகப்பெரிய கனவு. ஆனால், எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு இன்று மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பி இருப்பவர்கள் யார்?
மீண்டும் திமுக – காங்கிரஸ் உறவு சாத்தியமா?
திமுக – காங்கிரஸ் உறவு மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகள் அமைந்தால் வரவேற்கிறோம், மகிழ்ச்சி. மூத்த தலைவர் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகிய மூவரும் சென்னை வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிப்பாக அவர்களுக்கு உரிய இடத்தை அளிப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். அந்த நட்பு ஆழமான நட்பு.
இந்த நட்பைச் சிதைத்தவர்கள் எல்லாம் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். தவறான செய்திகளைப் புதுடெல்லியில் சொல்லி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை ஏமாற்றிவிட்டார்கள் என்பதுதான் எனக்குத் தோன்றுகிறது. எவ்வளவு பெரிய பாதிப்பை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். தலைவர்கள் வருகை தர உள்ள நிலையில், நல்ல முடிவு ஏற்பட்டால் முதலில் மகிழ்வது நானாகத்தான் இருப்பேன்” என்று தெரிவித்தார்.










