தமிழக தொகுதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தால்.. ப.சிதம்பரம் சொல்வது என்ன?

By Mathi

|

Published on 29 Nov 2026, 2:28 PM

Chidambaram

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59 ஆக உயர்ந்தால், எந்த ஊர் எந்தத் தொகுதியில் சேரும் என்பதைப் புதிதாக முடிவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் தமிழகத்தின் தேர்தல் வரைபடமே மாறும் என்று கூறிய மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் எம்.பி., அசாம், ஜம்மு–காஷ்மீர் உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, தொகுதி எல்லைகள் பாஜகவுக்குச் சாதகமாக வரையப்படலாம் என்கிறார்.

இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டி: மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 815 ஆக உயர்த்தினால், தொகுதி எல்லைகளைப் பெரிய அளவில் மாற்றுவதற்கு மறுவரையறை ஆணையத்துக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த 39 தொகுதிகளும் தொடர்ந்தால், பல ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட எல்லைகளில் தேவைக்கேற்ப சிறிய மாற்றங்களைச் செய்யலாம். ஆனால், 39 தொகுதிகளை 59 ஆக உயர்த்தினால், எந்த ஊர் எந்தத் தொகுதியில் சேரும் என்பதையே புதிதாக முடிவு செய்ய வேண்டும். அதற்காகத் தமிழகத்தின் தொகுதி வரைபடம் முழுவதையும் புதிதாக வரைய வேண்டியிருக்கும்.

அசாமிலும் ஜம்மு–காஷ்மீரிலும் இப்படித்தான் பகுதிகளைப் பிரித்து வேறு தொகுதிகளுடன் சேர்த்தார்கள். மறுவரையறைக்குப் பிறகு அசாமின் வரைபடத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். ஒரு தொகுதி குதிரை லாடம் போல வளைந்திருக்கிறது. அந்த வளைவுக்குள் இருக்கும் பகுதி எந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டது? இன்னொரு மக்களவைத் தொகுதியில், ஒன்றோடொன்று ஒட்டியே இல்லாத இரண்டு பகுதிகளைச் சேர்த்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

எல்லைகளை மாற்றியதால் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் 4 தொகுதிகளை இழந்ததாக ஜம்மு–காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா என்னிடம் கூறினார். அசாமிலும் காங்கிரஸ் பல தொகுதிகளை இழந்ததாகவும், அந்த மாற்றம் பாஜகவுக்குச் சாதகமாக அமைந்ததாகவும் கவுரவ் கோகோய் என்னிடம் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மறுவரையறை செய்யும்போதும், பாஜகவின் பலத்தை அதிகரித்து எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் வகையில் எல்லைகளை வரைவார்கள்.

ADVERTISEMENT

இப்போது இருக்கும் 543 தொகுதிகளுடன் 271 புதிய தொகுதிகளைச் சேர்க்கும்போது, நாடு முழுவதும் தொகுதி வரைபடமே புதிதாக வரையப்படும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel