பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ‘தமிழகத்துக்கு 59 தொகுதிகள் வேண்டுமா? 32 வேண்டுமா?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. இந்த இரண்டு எண்ணிக்கைகளும் எப்படிக் கணக்கிடப்பட்டன? ஏப்ரலில் மசோதாவை எதிர்த்த திமுக, இப்போது புதிய மசோதாவை ஆதரிப்பது ஏன்?
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் நடைபெற்று வரும் விவாதங்களின் தொகுப்பு:
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான 3 மசோதாக்களை நாளை, நவ. 30-ந் தேதி, மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. மக்களவைச் சிறப்புக் கூட்டம் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது.
மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் 3 மசோதாக்கள்
- 132-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, 2026 – மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், மறுவரையறைக்குப் பிறகு மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் வழிவகுக்கிறது.
- தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா, 2026 – மறுவரையறை ஆணையத்தை அமைக்கவும், தொகுதி எல்லைகளை வகுக்கவும் வழிமுறைகளை நிர்ணயிக்கிறது.
- யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) இரண்டாவது மசோதா, 2026 – சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றங்களை அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்களை முன்வைக்கிறது.
கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதாக்களைத் திரும்பப் பெற்ற பிறகு, இந்த 3 புதிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என மக்களவை நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
59, 32 என்ற கணக்கு எப்படி வந்தது?
மக்களவையில் தமிழ்நாட்டுக்கு இப்போது 39 தொகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை 50% உயர்த்த புதிய மசோதா வகை செய்கிறது. அது நிறைவேறி நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தின் தொகுதிகள் 59 ஆக உயரும்.
மக்களவையின் மொத்த இடங்களை 543 ஆகவே வைத்துக்கொண்டு, 2011 மக்கள்தொகைக் கணக்கின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே புதிதாகப் பங்கிட்டால், தமிழ்நாட்டுக்கு 32 இடங்கள் கிடைக்கும் என்பது ஒரு கணிப்பு. சமூக வலைதள விவாதத்தில் முன்வைக்கப்படும் 59, 32 ஆகிய எண்கள் இரண்டு வெவ்வேறு பங்கீட்டு முறைகளிலிருந்து வருகின்றன.
நாமக்கல்லில் மசோதாவை எரித்த ஸ்டாலின் இன்று ஏன் ஆதரிக்கிறார்?
கடந்த ஏப்ரலில் நாமக்கல்லில் நடந்த பிரசாரத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை மு.க.ஸ்டாலின் எரித்தார். புதிய மக்கள்தொகைக் கணக்கின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே மக்களவைத் தொகுதிகளைப் பங்கிட்டால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதுதான் அவரது எதிர்ப்புக்குக் காரணம். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, அதற்காகவே நாடாளுமன்றத்தில் தனது பங்கை இழக்க வேண்டுமா என்று அப்போதே திமுக கேள்வி எழுப்பியது.
இதற்கான தீர்வையும் திமுக 2024-ஆம் ஆண்டிலேயே முன்வைத்தது. பிப். 14-ந் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தொகுதிகளை அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டால், 1971 மக்கள்தொகைக் கணக்கின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே இப்போது உள்ள பிரதிநிதித்துவ விகிதமே தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அந்தக் கோரிக்கை புதிய வரைவில் இடம்பெற்ற பிறகும், ஏப்ரலில் எதிர்த்தோம் என்பதற்காகவே இப்போதும் எதிர்க்க வேண்டுமா? அன்று எதிர்த்ததற்கும் இன்று ஆதரிப்பதற்கும் ஸ்டாலின் சொல்லும் காரணம் ஒன்றுதான். மக்களவையில் தமிழ்நாட்டின் பங்கு குறையக் கூடாது என்பதுதான்.
ஸ்டாலின் சொன்னது என்ன?
இது தொடர்பாக ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
7.18% கணக்கு
நேற்றைய திமுக எம்.பி.க்கள் கூட்டத்துக்குப் பிறகு பேசிய ஆ. ராசா, தமிழ்நாட்டின் தற்போதைய 7.18% பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் புதிய மசோதா அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் இடங்கள் உயர்த்தப்படுவதால், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-லிருந்து 59 ஆக உயரும். மக்களவையில் தமிழகத்தின் பங்கு சுமார் 7.2% ஆகத் தொடரும்.
59 என்பதைப் போலவே 7.18% என்பதும் முக்கியம். மக்களவை விரிவடையும் போது மற்ற மாநிலங்களைவிடக் குறைவான விகிதத்தில் இடங்கள் கிடைத்தால், தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும் அவையில் நமது பங்கு குறைந்துவிடும். அந்த இழப்பைத் தடுப்பதற்காகத்தான் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் இடங்களை உயர்த்தும் முறையைத் திமுக ஆதரிக்கிறது.
தொகுதி மறுவரையறை ஆணையம், தொகுதி எல்லைகளை வகுக்கும் நடைமுறை ஆகியவற்றில் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் திருத்தங்களைக் கொண்டுவரலாம் என்றும் ஆ. ராசா கூறியுள்ளார். எல்லைகளை மாற்றும்போது மத, மொழிச் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படும் அபாயம் இருந்தால் அதைத் தடுக்கப் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தங்கம் தென்னரசு சொன்ன 2 காரணங்கள்
தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அந்த விகிதத்தை 2051 வரை மாற்றக் கூடாது என்பது இரண்டாவது கோரிக்கை. இவை இரண்டும் புதிய வரைவில் இடம்பெற்றிருப்பதால்தான் திமுக ஆதரிக்கிறது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கினார். பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
காங்கிரஸ் தற்போதுள்ள 543 இடங்களுக்குள்ளேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையிலான இடப் பங்கீட்டை 25 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால் தமிழ்நாட்டின் 39 இடங்கள் தொடரும். இந்த மசோதாவைத் தோற்கடித்த பிறகு என்ன நடக்கும் என்பதுதான் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வி.
சரி.. ராகுல் காந்தி சொன்னது என்ன?
நவ. 28-ந் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மக்களவையின் தற்போதைய 543 இடங்கள் தொடர வேண்டும். தொகுதி மறுவரையறைக்கு சாதிவாரித் தரவுகளையும் உள்ளடக்கிய 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். மத்திய அரசு 2011 கணக்கெடுப்பைப் பயன்படுத்த முனைவதால், 2027 கணக்கெடுப்பும் சாதிவாரித் தரவுகளும் ஓரங்கட்டப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி சொன்னபடி மக்களவையின் மொத்த இடங்களை 543 ஆகவே வைத்துக்கொண்டு, 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது எழும் கேள்வி, 2027 தரவுகளை மாநிலங்களுக்குள் தொகுதி எல்லைகளை மாற்ற மட்டும் பயன்படுத்துவார்களா? மாநிலங்களுக்கு இடையே மக்களவை இடங்களைப் புதிதாகப் பங்கிடவும் பயன்படுத்துவார்களா?
தமிழ்நாட்டின் தற்போதைய 39 இடங்களைப் பாதுகாத்து, மாநிலத்துக்குள் மட்டும் தொகுதி எல்லைகளை மாற்றினால், தமிழகத்தின் மக்களவைப் பங்கு குறையாது. ஆனால், அதே 543 இடங்களை 2027 மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே புதிதாகப் பங்கிட்டால், தமிழகத்தின் இடங்கள் குறையக்கூடும். அப்படியொரு பங்கீட்டில் தமிழகத்தின் 39 இடங்கள் 31 ஆகக் குறையலாம் என்பதுதான் திமுக முன்வைத்த எச்சரிக்கை.
புதிய மசோதா தோற்றுவிட்டால், மறுவரையறை விவகாரமும் அத்துடன் முடிந்துவிடுமா? இப்போது வரைவில் இடம்பெற்றுள்ள 2051 வரையிலான பாதுகாப்பை, அடுத்த மசோதாவிலும் பெற்றுத் தர முடியும் என்று காங்கிரஸால் உறுதியளிக்க முடியுமா?
பாஜக கொண்டுவரும் மசோதாவாக இருந்தாலும், தமிழகத்தின் பங்கைப் பாதுகாத்து 59 தொகுதிகளைப் பெற்றுத் தரும் வாய்ப்பைப் பயன்படுத்துவது முக்கியமா? காங்கிரஸின் அரசியல் நலனுக்காக மசோதாவைத் தோற்கடித்து, நாளை மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் பங்கிடப்பட்டால், இன்றுள்ள 39 தொகுதிகள்கூட 31 அல்லது 32 ஆகக் குறையும் அபாயத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டுமா?
காங்கிரஸ் தனது அரசியல் நலனைப் பார்த்துக்கொள்ளலாம். அதற்காகத் தமிழ்நாடு தனது நாடாளுமன்ற பலத்தை ஏன் இழக்க வேண்டும்? மாநில சுயாட்சியையும் மாநில உரிமைகளையும் அடிநாதமாகக் கொண்ட திமுக அதற்குத் துணை போக வேண்டுமா? இவ்வாறு சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.











