தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக திமுக அறிவித்துள்ள நிலையில், “வெறும் 50% தொகுதி உயர்வு என்பது சமநீதிக்கான தீர்வல்ல; பாசிஸ்ட்களிடம் நீதியை எதிர்பார்ப்பதும் கண்ணைத் திறந்து பார்த்துக்கொண்டே குழியில் விழுவதும் ஒன்றுதான்” என திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “வெறும் 50% தொகுதி உயர்வு என்பது சமநீதிக்கான தீர்வல்ல. தொகுதி மறுவரையறை என்பது மக்கள்தொகை அடிப்படையிலான கணக்கீடாக மட்டும் இல்லாமல், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள், நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் குரல் வலிமை, சிறுபான்மையினர் மற்றும் விழிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அனைத்துத் தரப்பினரின் சமமான ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அணுகப்பட வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை. ஆனால் பாசிஸ்ட்களிடம் நீதியை எதிர்பார்ப்பதும் கண்ணை திறந்து பார்த்துக்கொண்டே குழியில் விழுவததும் ஒன்றுதான்!
- மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அநீதி:
1971-ல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 4.1 கோடியாகவும், உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை 8.3 கோடியாகவும் இருந்தது. அப்போது தமிழ்நாட்டிற்கு 39 எம்.பி. இடங்களும், உத்தரப் பிரதேசத்திற்கு 85 இடங்களும் இருந்தன. உத்தராகண்ட் பிரிக்கப்பட்ட பிறகு உ.பி.யின் இடங்கள் 80 ஆகக் குறைந்தன. 2026-ல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடியாகவும், உ.பி.யின் மக்கள்தொகை 24 கோடியாகவும் உயர்ந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் மக்கள்தொகை இரு மடங்காகவும், உ.பி.யின் மக்கள்தொகை மூன்று மடங்காகவும் உயர்ந்துள்ளது.
ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்திய மாநிலங்களுக்கும், செயல்படுத்தாத மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு என்பது தென் மாநிலங்களை வஞ்சிக்கும் செயல்.
இந்திரா காந்தி, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தும் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தக் கடுமையாக உழைத்த மாநிலங்களின் குரலை நாடாளுமன்றத்தில் குறைப்பதும், அந்தக் கடமையில் தவறிய மாநிலங்களுக்கு அதிக இடங்கள் வழங்குவதும் மிகப்பெரிய அநீதி என்பதே அவரது கருத்தின் சாரம்.
- தொகுதிகளை 50% உயர்த்துவது சமநீதியாகாது:
மக்களவையில் தற்போது உத்தரப் பிரதேசத்திற்குத் தமிழ்நாட்டைவிட 41 இடங்கள் கூடுதலாக உள்ளன. முன்மொழியப்படும் 50% உயர்வின்படி உ.பி.யின் இடங்கள் 120 ஆகவும், தமிழ்நாட்டின் இடங்கள் 58 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான வித்தியாசம் 41-லிருந்து 62 ஆக அதிகரிக்கும். நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றவும், திருத்தவும், தடுக்கவும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையே முக்கியம் என்பதால், ஒரே விகிதத்தில் இடங்களை உயர்த்துவது தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவப் பாதிப்பைச் சரிசெய்யாது. - அமித் ஷாவின் அரசியல் நோக்கம்:
அமித் ஷா முன்மொழியும் 50% இட உயர்வின் நோக்கம், மக்களவை இடங்களை 800-க்கு மேல் உயர்த்தி, பின்னர் தொகுதிகளை மறுவரையறை செய்வதாகும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அசாம், காஷ்மீரில் சிறுபான்மையினரின் வாக்கு வலிமையைப் பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதைப் போல, நாடு முழுவதும் தொகுதி எல்லைகளை மாற்றி பாஜகவுக்குச் சாதகமான தொகுதிகளை 10% வரை அதிகரிப்பதே மோடி அரசின் அரசியல் நோக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும், மொழிவழி மாநிலங்களுக்குப் பதிலாக 75 ‘ஜன்பத்’ மண்டலங்களாக இந்தியாவைப் பிரிப்பது ஆர்.எஸ்.எஸ். திட்டம் என்றும் விமர்சிக்கப்படுகிறது. - நாடாளுமன்றத்தில் மதச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை நீக்குதல்:
தற்போது நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு 241 மக்களவை எம்.பி.க்களும், 118 மாநிலங்களவை எம்.பி.க்களும் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இவ்விரு அவைகளிலும் பாஜக சார்பில் ஒரு கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ கூட இல்லை. இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து சுமார் 24 கோடி மக்கள் வாழும் நிலையில், அவர்களின் பிரதிநிதித்துவம் எங்கே?
தொகுதி மறுவரையறையில் எல்லைகளை மாற்றி நிர்ணயிக்கும்போது பாஜக ஜெர்ரிமாண்டரிங் (Gerrymandering) செய்யும். அதனால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் முழுவதுமாக இல்லாமலே போகும். அதுபோக, தென் மாநிலங்களின் தேவை இல்லாமல் போவதால் இங்கிருந்து பிரதமர் உருவாகும் நிலையும் இல்லாமல் போகும்.
- அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது:
தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாக இருந்த ‘மக்கள்தொகை’ என்ற வாசகத்தை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கித் திருத்தம் செய்யப்பட உள்ளது. அரசமைப்புச் சட்டம் கட்டாயப்படுத்துவதால்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது என்ற வாதம் இதனால் வலுவிழக்கிறது. அரசமைப்புச் சட்டம் கூறியதையே மாற்றிவிட்டு, தொகுதி மறுவரையறையை மட்டும் ஏன் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மேலும், இந்தத் திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதால், தொகுதி மறுவரையறை அடுத்த தேர்தலில்தான் நடைமுறைக்கு வரும் என்ற உத்தரவாதம் இல்லை; 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்தப்படலாம். - அதிகரிக்கும் எம்.பி. எண்ணிக்கை நாடாளுமன்றச் செயல்பாட்டைப் பாதிக்கும்:
தற்போதுள்ள 543 எம்.பி.க்கள் சராசரியாக 25 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 2019–24 காலகட்டத்தில் ஒரு எம்.பி.க்கு ஐந்து ஆண்டுகளில் சராசரியாக வெறும் 1 மணி நேரம் 36 நிமிடங்களே பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றம் மொத்தம் 1,370 மணி நேரமே நடைபெற்றுள்ளது; ஆண்டுக்கு சராசரியாக 274 மணி நேரம். ஆனால் 1952–57 காலகட்டத்தில் 3,700 மணி நேரம் நடைபெற்றுள்ளது.
ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் ஆணையம் செலவிடுவது ரூ.9 கோடி; வேட்பாளரின் அனுமதிக்கப்பட்ட செலவு ரூ.95 லட்சம் என்றாலும், உண்மையான செலவு பல கோடிகளாகிறது. நாடாளுமன்றத்தை நடத்த ஆண்டுக்கு ரூ.1,600 கோடி செலவாகிறது. ஐந்து ஆண்டுகளில் ஒரு எம்.பிக்கான சம்பளச் செலவு ரூ.1.52 கோடி. இந்நிலையில், 850 எம்.பி.க்கள் கொண்ட அவையில் விவாதங்களுக்கான நேரம் மேலும் குறைந்து, நாடாளுமன்றம் விவாத மன்றமாக இல்லாமல் மாநாட்டுக் கூட்டமாக மாறும் அபாயம் உள்ளது. ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கு அதிகபட்சம் 45 பேர் கொண்ட கூட்டமே சரியான அளவு என ஆய்வுகள் கூறுகின்றன.
- கட்சி தாவிய எம்.பி.க்களின் வழக்கு நிலுவையில்:
மேற்கு வங்கத்தில் கட்சித் தாவலில் ஈடுபட்ட 20 எம்.பி.க்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அந்த 20 எம்.பிக்களும் தொகுதி மறுவரையறை மசோதாவில் வாக்களிப்பது எப்படி நீதியாகும்? ஏற்கெனவே 35 லட்சம் வாக்காளர்களின் SIR மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதே, அவர்களைத் தவிர்த்துவிட்டுத் தேர்தல் நடத்தி பாஜக வென்றது; அதே தந்திரம் இது. - வடக்கு – தெற்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவ வேறுபாடு:
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 195 மக்களவை இடங்களாக அதிகரிக்கும். ஆனால், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கே சேர்த்து 180 இடங்களாக அதிகரிக்கும். இது தெற்கை அழித்து வடக்கை வாழவைக்கும் செயல்! - குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரைகள்:
தமிழ்நாடு அரசு 2025-ல் மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைத்த குழு, மக்கள்தொகைப் பெருக்கத்தைச் சீராக்கும் நோக்கில் 2126-ஆம் ஆண்டு வரை தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையை 550 ஆக மட்டுப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும் நியாயமான (fair) ஒரு முடிவை எட்ட வேண்டுமானால், மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் கமிட்டியின் பரிந்துரையை ஏற்பதே ஒரே வழி!” என தெரிவித்துள்ளார்.












