Zஜெயலலிதா போல் நடந்துகொள்ளுங்கள்!

public

சர்கார் படம் சம்பந்தமாக எழுந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) சார்பில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி இந்தப் பிரச்சினை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

“அன்புள்ள தமிழக மக்களுக்கும், மதிப்பிற்குரிய தமிழக அரசுக்கும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் பணிவான வணக்கங்களைத் தெரிவித்து கொள்கிறோம்.

சமீபத்தில் தீபாவளி அன்று வெளியான சர்கார் திரைப்படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், அதனால் ஏற்படும் நிகழ்வுகளையும் கண்டு கவலை கொள்கிறோம். சமூக அக்கறையுள்ள சில படைப்பாளிகள் சமூகத்தில் ஏற்படுகின்ற சில அவலங்களையும் வேதனைகளையும் குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டித் திரைப்படங்கள் எடுப்பது அரிய நிகழ்ச்சி அல்ல.

பராசக்தியில் கலைஞர் திரு.கருணாநிதி தொடங்கி, நாடோடி மன்னனில் புரட்சித் தலைவர் எனத் தொடர்ந்து பல்வேறு படைப்பாளிகள் இதுபோன்ற கருத்துகளை முன் வைத்து திரைப்படங்களை எடுத்துவருகிறார்கள். அதுபோன்றே இயக்குநர் திரு. ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள், சகோதரர் திரு. விஜய் அவர்கள் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திலும், இதுபோன்ற சில கருத்துகளைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இயக்குநர் திரு. ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் ஏற்கனவே அரசு நிர்வாகத்தினர், அரசு ஊழியர்கள் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டி ரமணா திரைப்படம் இயக்கி உள்ளார். பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கக் கூடாது என்ற கருத்தினை முன்வைத்து கஜினி திரைப்படம் இயக்கியுள்ளார். அயல்நாட்டு பயங்கரவாதத்தை முன் வைத்து துப்பாக்கி திரைப்படத்தை இயக்கி உள்ளார். நீரின் மேலாண்மை குறித்தும், விவசாயிகளின் தற்கொலை குறித்து விளக்கி கத்தி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அதுபோன்றே தற்போது அரசியலில் நடைபெறுகின்ற நிகழ்வுகளில் தனக்கு ஏற்புடையது அல்ல என்ற கருத்துகளை முன்வைத்து சர்கார் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதனால் கோபமுற்ற சிலர் திரைப்பட பேனர்களைக் கிழிப்பதும், திரையரங்குகளில் சட்ட ஒழுங்கைக் குலைப்பதும் ஏற்புடைய செயல் அல்ல.

நான் அவரிடம் பேசியபோது, ‘கடந்த 30 ஆண்டுகளில் இலவசம் என்ற பெயரில் தமிழக மக்களின் சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் குலைக்கின்ற விதமாக பல்வேறு விதமான செயல்களையே நான் விமர்சனம் செய்துள்ளேன். அனைத்து அரசுகளையுமே நான் விமர்சனம் செய்துள்ளேனே தவிர எந்த ஒரு தனிப்பட்ட ஆட்சிக்கும், அரசுக்கும் எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

ஒரு அரசு தன் குடிமக்களுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே முக்கியமான கடமை என்று நான் கருதுகிறேன். இலவசங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்து அவர்களைத் தலை நிமிரச் செய்யும் ஒரு கருவியாக இருக்க வேண்டுமே தவிர, அரிசி முதல் உப்பு வரை, வேட்டி முதல் டிவி வரை, மிக்ஸி முதல் கிரைண்டர் வரை தொடர்ந்து இலவசங்களை வழங்கி இலவசங்களைப் பெறும் நிலையிலேயே குடிமக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது குடிமக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துவது ஆகும் என்பதே என் கருத்தாகும். குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே விமர்சிப்பது என் நிலை அல்ல’ என்று முருகதாஸ் என்னிடம் தெரிவித்தார்.

மேலும், இந்நேரத்தில் ஒரு விஷயத்தை நினைவுகூர விரும்புகிறேன். நானும் இதுபோன்ற அரசியல் கருத்துகளை முன்வைத்துப் பல படங்களை இயக்கி உள்ளேன். குறிப்பாக, மக்கள் ஆட்சி திரைப்படத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசையும், அதன் தலைமையில் இருந்த புரட்சித் தலைவி அவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தேன்.

எங்கள் திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தித் தருமாறு அம்மா அவர்களை பார்க்க, நானும் என் மனைவி ரோஜாவும் போயஸ் தோட்டத்தில் உள்ள அவர்கள் இல்லத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது இவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளோமே என்ன சொல்வார்களோ என்று சிறிது தயக்கத்தில்தான் சென்றேன். ஆனால், என்னிடம் பேசும் போது நீங்கள் என்னையும், என் ஆட்சியையும் விமர்சனம் செய்து படம் இயக்கி உள்ளீர்கள். ஆனாலும் ஒரு சிறந்த படைப்பாளியாக உங்கள் மீது எனக்கு மிகவும் மரியாதை உள்ளது என்று அன்புடன் பேசினார். அவர்கள் வீட்டிற்குள் எதிர்க் கருத்துகளைக் கொண்டவனாக நுழைந்த நான் வெளியே வரும்போது ஏறக்குறைய அவர்களின் ஆதரவாளனாகவே வந்தேன்.

வியாபாரிகளை அதிகாரத்தின் மூலம் பணியவைக்கலாம். ஆனால் படைப்பாளிகளை அன்பினாலேயே கனியவைத்திட முடியும் என்ற புரட்சித் தலைவரின் சித்தாந்தத்தையே புரட்சித் தலைவியும் கையாண்டார் என்றே எனக்குத் தோன்றியது. அதுபோலவே அம்மாவின் வழிநடக்கின்ற அரசும், இந்த வழியையே கடைப்பிடிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று செல்வமணி குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறை சார்ந்தவர்களுக்கும் வேண்டுகோளாக, “அரசியல் ரீதியாக படம் எடுக்கின்ற படைப்பாளிகள் இதுபோன்ற திரைப்படங்களை இயக்கும்போது தனிமனித தாக்குதல்களோ அல்லது காழ்ப்புணர்ச்சி கருத்துகளோ, இல்லாமல் திரைப்படங்கள் இயக்குதல் கருத்து சுதந்திரத்திற்கும், சமூகத்திற்கும், திரைப்படத் துறைக்கும் நன்மை பயக்கும் செயல் ஆகும் என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *