xலெனின் சிலை இடிப்பு: முதலமைச்சர்கள் கண்டனம்!

public

திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதற்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5ஆம் தேதியன்று, திரிபுரா மாநிலத்திலுள்ள பிலோனியாவில் லெனின் சிலை சில நபர்களால் தகர்க்கப்பட்டது. பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே இது மோதலை உண்டாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு புல்டோசர் பயன்படுத்தப்பட்டதால், இது திட்டமிட்ட தாக்குதல் என்று குற்றம்சாட்டி வருகின்றன எதிர்க்கட்சிகள்.

இந்த நிலையில், பிலோனியாவைத் தொடர்ந்து சப்ரூம் என்ற இடத்திலுள்ள லெனின் சிலை நேற்று (மார்ச் 6) சிலரால் தகர்க்கப்பட்டது. ஏற்கெனவே திரிபுராவின் சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், இது பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள பங்குரா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, லெனின் சிலை இடிப்புக்குக் கண்டனம் தெரிவித்தார். “நான் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரானவள்; லெனின், மார்க்ஸ் எனது தலைவர்கள் அல்ல. நான் மார்க்சிஸ்ட் கட்சியின் அராஜகங்களுக்கு எதிராகப் போராடியிருக்கிறேன். அதேபோல, இப்போது பாஜகவின் அராஜகத்தையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. யாராவது இந்தப் பூனைக்கு மணி கட்ட வேண்டும். யாரும் போராடத் தயாராக இல்லை. ஆனால், நாங்கள் போராடுவோம்” என்று கூறினார்.

ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததாலேயே, அங்குள்ள காரல் மார்க்ஸ், லெனின் மற்றும் காந்தி சிலைகளை உடைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். “அரசியலில் புனிதத்தைக் கடைப்பிடிப்பதைப் போலவே, சமூக ஒற்றுமை ஓங்க எல்லோருக்கும் மரியாதை அளித்து வருகிறோம். 34 ஆண்டு கால மார்க்சிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அப்போதும் மாற்றத்தை மட்டுமே விரும்பினோம்; பழிவாங்குதலை அல்ல” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதான தாக்குதல் குறித்தும், லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்தும், தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

“திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், லெனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வும், தேசிய அளவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடக்கும் சதியாகும். நான்கு சிலைகளை அகற்றிவிட்டால் கம்யூனிஸ்டுகளை ஒழித்துவிடலாம் என பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நினைக்கின்றன. ஆனால், கம்யூனிஸ்டுகளை இந்த நாட்டில் இருந்து அகற்றவே முடியாது.

நாட்டில் ஜனநாயகமும் மதச்சார்பற்ற தன்மையும் இன்னும் பாதுகாப்பாக இருப்பதற்குக் காரணம் கம்யூனிஸ்ட்கள்தான்” என்று தனது பதிவில் கூறியுள்ளார் பினராயி விஜயன். திரிபுராவின் பாஜக கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி குறித்துப் பேசிய கேரள மாநில மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், “தேர்தல் வெற்றி கிடைத்த ஒரு மணி நேரத்தில் 200 வீடுகளை பாஜகவினர் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த வெற்றி பண பலத்தாலும், மின்னணு வாக்கு யந்திரத்தில் செய்த தில்லுமுல்லுகளாலும் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *