மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று (அக்டோபர் 2) இந்தியா முழுவதும் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். பாஜக, காங்கிரஸின் சார்பில் தனித்தனியாக நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாஜக சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் “காந்தி சங்கல்ப யாத்திராவை” அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா துவங்கிவைத்தார். இந்த யாத்திரையானது சுமார் நான்கு மாதங்கள் வரை நடைபெறவுள்ளது. கைரா கிராமம் அருகே சந்த் வதிகாவில் நடந்த யாத்திரையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார். யாத்திரையில் காந்தியின் போதனைகளும், மத்திய அரசின் திட்டங்களும் முன்வைக்கப்படவுள்ளன.
இதுபோலவே காங்கிரஸின் சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராஜீவ் பவனில் தொடங்கி சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள ராஜ்காட் வரை காந்தி சந்திஷ் யாத்திரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற இந்த நடைபயணத்தில், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர். தொண்டர்கள் கூட்டத்திற்கு நடுவே கடும் சிரமத்துக்கு மத்தியில்தான் ராகுல் நடந்து வர முடிந்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “இந்தியாவையும் காந்தியையும் பிரித்துப் பார்க்க முடியாது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு சில ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் காட்சிகளைப் பார்த்தால் காந்தியின் ஆன்மா காயம்படும். தவறான அரசியலில் ஈடுபட்டிருக்கும் பாஜகவினரால், காந்தியை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. சிலர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்தான் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள்” என்று விமர்சித்தார்.
�,”