விக்கிரவாண்டி: தேர்தலன்றும் உலாவந்த வெளிமாவட்ட அதிமுகவினர்

public

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று (அக்டோபர் 21) காலை ஏழு மணி தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஆங்காங்கே சிற்சில சலசலப்புகளும் சச்சரவுகளும் நடந்திருந்தாலும் பொதுவாக அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது தேர்தல்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்ட நிலையில் நேற்று விக்கிரவாண்டி நகரத்தில் இருக்கும் நம்ம வீடு வசந்தபவன் ஹோட்டலின் அறை எண் 204 இல் திமுகவின் தொகுதிப் பொறுப்பாளர்களான கே.என்.நேரு, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது அங்கே வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், ‘வெளியூர் காரங்களுக்கு இன்னும் என்ன இங்க வேலை?’ உடனே வெளியேறுங்க’ என்று உத்தரவிட்டனர்.

திமுக பிரமுகர்கள் இதோ கிளம்பிவிடுறோம் என்று சொல்ல, விக்கிரவாண்டி எஸ்.ஐ. மருதப்பனை விட்டு திமுகவினரை அவரவரது வாகனங்களில் ஏறச் சொல்லி விழுப்புரம் டவுன் வரை கொண்டு சென்று விடச் சொன்னார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். அதுபோலவே அவரும் திமுக பொறுப்பாளர்களை விழுப்புரம் டவுன் வரைக்கும் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பினார்.

ஆனால் தேர்தல் தினமான அக்டோபர் 21 ஆம் தேதி பகல் முழுதும் வெளிமாவட்ட அதிமுகவினர் பலர் எந்த வித தடையும் இன்றி தொகுதிக்குள் உலாவருவதும், பூத்துகளை பார்வையிடுவதுமாக இருந்தனர்.

இன்று பகல் 12 மணியவில் விக்கிரவாண்டி டவுனில் இருக்கும் ஒரு வாக்குச் சாவடி அருகே ஒரு வாகனம் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய பேன்ட்- டிஷர்ட் அணிந்த நபர் ஒருவர் பூத் அருகே கையில் ஒரு ஸ்லிப்போடு வந்தார்.

அவரது நடவடிக்கைகளை கவனித்த உள்ளூர் திமுகவினர் அவரைப் பிடித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

‘என்ன ஊர் உங்களுக்கு?’

’மாத்தூர்…’

’எந்த மாத்தூர்?

’விழுப்புரம் மாவட்டம் மாத்தூர்தான் சார்’

’விழுப்புரமா சேலம் மாவட்டமா? உனக்கு இன்னா இங்க வேலை?’

என்று விசாரித்துக் கொண்டிருக்கும்போதே அவரோடு வந்த வாகனத்தில் வந்தவர்கள் புறப்பட்டனர். அவர்களை ஒரு குரூப் விரட்ட, ‘நாங்க வெளியூர் போயிட்டிருக்கோம்’ என்றபடியே வண்டியைக் கிளப்பினார்கள். வெளியூர் போனா பைபாஸ்ல போமாட்டியா நில்லு… என்று உள்ளூர் மக்கள் கேட்க அதற்குள் வாகனத்தை நகர்த்திவிட்டனர்.

இதற்கிடையே பூத் சிலிப்புடன் பிடிபட்ட அந்த சேலம் மாவட்ட பிரமுகரை போலீஸில் பிடித்துக் கொடுக்க, போலீஸோ அவரை விசாரித்து ‘இங்கேர்ந்து போய்யா’ என்று அனுப்பிவிட்டனர்.

விக்கிரவாண்டி தொகுதி முழுதும் இன்று தேர்தல் முடியும் வரை வெளிமாவட்ட அதிமுகவினர் உலவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் திமுகவினர் மட்டும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்று புகார் கூறுகிறார்கள் திமுகவினர்.

மாவட்ட அளவிலான ஒரு தேர்தல் அதிகாரி நம்மிடம், ‘எங்களுக்கு தெரிஞ்சே நிறைய முறைகேடுகள் ஆளுங்கட்சியினரால நடத்தப்படுது. ஆனால் யாராவது புகார் கொடுத்தால்தான் எங்களால நடவடிக்கை எடுக்க முடியும். யாரும் கொடுக்கலையே” என்கிறார் ஆதங்கமாய்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *