கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஒரு மசாலா… ஒன்ஸ்மோர் பலகாரங்கள்!

public

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு முறை சமையலறைக்குள் நுழையும் இல்லத்தரசிகளின் நினைப்பும், ‘சமைக்க எளிதாகவும் இருக்கணும்; அது சுவையாகவும் இருக்கணும்’ என்பதாகவே உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் இந்த உளுந்து மசாலா.

உதாரணத்துக்கு ஒருமுறை செய்யும் உளுந்து மசாலாவைக்கொண்டு உளுந்து கொழுக்கட்டை, உளுந்து சாதம், உளுந்து சப்பாத்தி என்று மூன்றையும் செய்து அசத்தலாம்.

**உளுந்து மசாலா செய்ய..**

இரண்டு கப் முழு உளுந்துடன் நீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு டீஸ்பூன் பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் கால் கப் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும். பிறகு இத்துடன் அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும். இதுதான் உளுந்து மசாலா.

இந்த உளுந்து மசாலாவை வைத்து உளுந்து கொழுக்கட்டை, உளுந்து சாதம், உளுந்து சப்பாத்தி ஆகியவற்றை செய்ய முடியும்.

**உளுந்து கொழுக்கட்டை**

வாணலியில் அரை கப் தண்ணீர்விட்டு அதனுடன் சிறிதளவு உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஒரு கப் அரிசி மாவைச் சேர்த்து கிளறவும். மாவு வெந்ததும் கீழே இறக்கி சொப்புகளாக செய்துகொள்ளவும். இவற்றின் உள்ளே தேவையான அளவு உளுந்து மசாலாவை வைத்து மூடவும். பின்னர் இட்லிப்பானையில் ஆவியில் வேகவைத்து இறக்கவும். சுவையான உளுந்து கொழுக்கட்டை தயார்.

**உளுந்து சாதம்**

வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி ஒன்றரை கப் உதிர் உதிராக வடித்த சாதத்தைச் சேர்க்கவும். இத்துடன் தேவையான உளுந்து மசாலாவைச் சேர்த்து சாதமும், மசாலாவும் ஒன்றுடன் ஒன்று சேரும்வரை நன்கு புரட்டவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். இந்த உளுந்து சாதத்தை வெங்காயத் தயிர்ப்பச்சடி அல்லது கார சிப்ஸுடன் சுவைக்கவும்.

**உளுந்து சப்பாத்தி**

ஒன்றரை கப் கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய சப்பாத்திகளாக இட்டு நடுவில் சிறிதளவு உளுந்து மசாலாவை வைத்து மூடி மறுபடியும் அவற்றை சப்பாத்திகளாக கவனமுடன் தேய்க்கவும். பின்னர் இவற்றை தவாவில் எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும். இந்த சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர்ப்பச்சடி, குருமாவுடன் சேர்த்துச் சுவைக்கலாம்.

[நேற்றைய ரெசிப்பி: பூசணி சாதம்](https://www.minnambalam.com/public/2020/06/20/3/poosani-sadham-kitchen-keerthana)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *