sசிறப்புக் கட்டுரை: இந்திய அணி திணறுவது ஏன்?

public

அரவிந்தன்

தென்னாப்பிரிக்காவில் இந்தியா ஆடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவையே. சென்ற ஆண்டில் இந்தியா டெஸ்ட் அரங்கில் பெற்ற வெற்றிகளில் பெரும்பாலானவை துணைக்கண்டத்து ஆடுகளங்களில் பெற்றவை அல்லது வலுக் குறைந்த அணிகளுக்கு எதிரானவை. தவிர, தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தயாராவதற்கான அவகாசமோ போதிய பயிற்சி ஆட்டங்களோ இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. வெளிச்சத்துக்குப் பழகிய கண்கள் இருட்டில் தடுமாறுவது இயல்புதான். அதிகம் எகிறாத, பெரிதாக ஸ்விங் ஆகாத துணைக்கண்டத்து ஆடுகளங்களில் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்த அணியினருக்குத் தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் சவாலாக இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.

இரண்டாவது டெஸ்ட்டையும் தொடரையும் இழந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி பொறுமை இழந்து கேள்விகளை எதிர்கொண்டார். மைதானத்தில் பந்துகளை அடித்து ஆடுவதைப் போன்றே கேள்விகளையும் எதிர்கொண்டார். அணித் தேர்வு பற்றிய கேள்விக்கு, வெற்றி பெற்றிருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள் என்றார். புவனேஸ்வர் குமாரை நீக்கியது ஏன் என்னும் பேச்சு இரண்டாவது டெஸ்ட்டின் தொடக்கத்தில் அதிகம் எழுந்தது. ஆனால், அவருக்குப் பதில் அணியில் இடம்பெற்ற இஷாந்த் ஷர்மா சிறப்பாக ஆடிவிட்டதால் இப்போது யாரும் அதுபற்றிப் பேசுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கோலி, வெற்றி தோல்விதான் இதுபோன்ற விமர்சனங்கள் எழுவதையும் எழாததையும் தீர்மானிக்கிறது என்றார்.

கோலியின் வாதத்தில் சாரம் இருக்கிறது. ஆட்டத்தின் முடிவை வைத்து ஆட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மதிப்பிடும் போக்கு பரவலாக இருக்கிறது. வென்றால் சரியான முடிவு, தோற்றால் தவறான முடிவு என்னும் தீர்ப்பு பல தளங்களிலும் முன்வைக்கப்படுகிறது. வெற்றி, தோல்வியைத் தாண்டி அணியின் முடிவுகள், அணியினரின் ஆட்டங்கள் ஆகியவற்றை அலச வேண்டும். அடுத்த கபில்தேவ் என்று அசட்டுத்தனமாகச் சிலரால் குறிப்பிடப்படும் ஹர்திக் பாண்டியா முதல் டெஸ்ட்டின் முதல் ஆட்டத்தில் எடுத்த ரன்களை வைத்து அவரது தேர்வை நியாயப்படுத்த முடியாது. அஜிங்க்ய ரஹானேவின் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் ஷர்மா சரியாக ஆடாததை வைத்து ரஹானேவை நீக்கிய முடிவை விமர்சிக்க முடியாது. பாண்டியாவின் அந்த இன்னிங்ஸை மீறியும் அவரது தேர்வு கேள்விக்குரியதுதான். ரோஹித் நன்றாக ஆடியிருந்தாலும் ரஹானேவை நீக்கியது ஆட்சேபத்துக்குரியதுதான். அண்மைக்கால ஆட்டத் திறனின் அடிப்படையில் ரஹானே போன்ற நேர்த்தியான டெஸ்ட் மட்டையாளரைத் தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் ஒதுக்குவது சரியல்ல.

ஆனால், இந்திய அணியின் பிரச்னை ரஹானே – ரோஹித் விவகாரத்தைக் காட்டிலும் ஆழமானது. சொல்லப்போனால் அணித் தேர்வின் பிரச்னை இரண்டாம்பட்சமானதுதான். சிறந்த 11 பேர் யார் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கோலி செய்தியாளரைத் திருப்பிக் கேட்டதிலும் அர்த்தம் இருக்கிறது. சிறந்த 11 பேர் யார் என்பது குறித்து யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அணித் தேர்வில் பரிசோதனைகளும் பலவிதமான கணக்குகளும் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது.

**எல்லா பந்துகளையும் ஆட வேண்டுமா?**

அணித் தேர்வு அல்ல, ஷாட் தேர்வே இந்திய அணியின் முக்கியமான பிரச்னை. உயிர்ப்புள்ள ஆடுகளங்களில், அதிலும், வேகப்பந்து வீச்சுக்குத் தோதான ஆடுகளங்களில் பந்துகளை அடிப்பதைக் காட்டிலும் அடிக்காமல் விடுவதில் தேர்ச்சியும் கவனமும் இருக்க வேண்டும். ராகுல் திராவிட் போன்றவர்கள் டெஸ்ட் அரங்கில் ஏன் மாபெரும் சக்திகளாகப் போற்றப்படுகிறார்கள் என்பதற்கு அவர்கள் அடித்த பந்துகள் மட்டுமல்ல, அடிக்காமல் விட்ட பந்துகளும் சான்றுகள்.

நடப்புத் தொடர் பற்றி தி இந்து நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ள தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட், பந்துகளை விட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கரிடம் எல்லா ஷாட்களும் இருந்தன என்று சொல்லும் அவர், ஆனால், விட வேண்டிய பந்துகளை விடுவதிலும் அவர் திறமையானவர் என்று சொல்லியிருக்கிறார்.

வீசப்படும் எல்லா பந்துகளையும் அடிக்க முயலுவது நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணுகுமுறை. டெஸ்ட் போட்டிகளில் அப்படி அல்ல. ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே முழு அளவில் வீசப்படும் பந்தை ட்ரைவ் செய்வது இயல்பான உந்துதல்தான். ஆனால், பொறி பறக்கும் வேகமும் கணிக்கவியலாத திசைமாற்றமும் கொள்ளும் பந்துகளை அப்படி அடிப்பதில் சிக்கல் இருக்கிறது. அதுவும் நான்கு ஸ்லிப்கள், கல்லி, பாயின்ட் ஆகிய தடுப்பாளர்களுடன் விக்கெட் காப்பாளரும் சேர்த்து ஏழு பேர் கேட்ச் பிடிக்கக் காத்திருக்கும் நிலையில் இதுபோன்ற பந்துகளை ட்ரைவ் செய்வது அசட்டு சாகசமாக முடிந்துவிடக்கூடும். நான்கு இன்னிங்ஸ்களிலும் பெரும்பாலான இந்திய மட்டையாளர்கள் வீழ்ந்த விதத்தைப் பார்க்கும்போது இது புரியும்.

முழு அளவிலான ஆஃப் திசை பந்துகளைத் துல்லியமாக ட்ரைவ் செய்தால் பவுண்டரிகள் வரத்தான் செய்யும். ஆனால், அந்த பவுண்டரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் வேகப் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அதுபோன்ற பந்துகளை வீசுவார்கள். காரணம், மட்டையாளர் செய்யும் சிறு தவறுகூட அவருடைய ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்பது வீச்சாளருக்குத் தெரியும். ஆடுகளத்தில் உயிர்ப்பு அதிகம் இல்லாதபோதும், பந்து வீச்சில் போதிய திறன் இல்லாதபோதும் இந்த ட்ரைவ்கள் அதிக ஆபத்தில்லாதவை. உயிர்ப்பான ஆடுகளமும் திறமையான பந்து வீச்சும் இருக்கும்போது மிக ஆபத்தானவை. மட்டையாளர் ஆடுகளத்துக்கும் பந்து வீச்சுக்கும் ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு, சூழலுக்கேற்பத் தன்னைப் பொருத்திக்கொள்வதுவரையிலும் இதுபோன்ற சாகச ஆர்வங்களை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நிலைத்து ஆடத் தொடங்கிவிட்ட பிறகு ஷாட்களில் துல்லியம் கூடும். அந்தத் தருணம் வரும்வரை காத்திருக்கப் பொறுமை வேண்டும். இது டெஸ்ட் மட்டையாட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று.

**பின் காலில் செல்லும் வியூகம்**

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தது. கபில்தேவின் கடைசி ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் அது. சச்சினுக்கு முதல் பயணம். அந்தத் தொடரில் இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும்ப்டி ஆடியவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. காரணம், பந்தை எகிறச்செய்யும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஆடும் உத்தியில் இவர்கள் பெற்றிருந்த தேர்ச்சி. இந்திய ஆடுகளங்களில் பெரும்பாலும் முன்காலில் வந்து ஆடலாம். ஆனால், பந்துகள் மேலெழும்பி வருகையில் பின்காலில் சென்று தடுத்தோ தாக்கியோ ஆடினால் சமாளிக்கலாம். கபிலும் சச்சினும் இதைத் திறம்படச் செய்தார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் அப்போது குறிப்பிட்டார்கள். அதிலும் சச்சின், பின்காலில் சென்று வெட்டி ஆடியது, புல் ஷாட் அடித்தது ஆகியவற்றுடன், பின்காலில் சென்று ட்ரைவும் செய்தார்.

தென்னாப்பிரிக்காவில் இன்று ஆடும் இந்திய மட்டையாளர்களில் எத்தனை பேர் இயல்பாகப் பின்காலில் சென்று ஆடுகிறார்கள் என்பதைப் பாருங்கள். பிரச்னை அணித் தேர்வில் இல்லை என்பது தெரியும்.

எகிறும் களங்களில் பின்காலில் சென்று ஆட வேண்டும் என்பது இவர்களுக்குத் தெரியாதா? அடிக்க வேண்டிய பந்துகள், விட வேண்டிய பந்துகள் பற்றித் தெரியாமல்தான் சர்வதேச அரங்கில் இவர்கள் ஆடுகிரார்களா? பயிற்சியாளர்கள் இதையெல்லாம் அவர்களுக்கு நினைவுபடுத்தியிருக்க மாட்டார்களா? பிறகு ஏன் செய்யவில்லை?

பழக்கம். தேர்ச்சி. தகவமைத்துக்கொள்வதில் தாமதம். இவைதான் காரணங்கள். துணைக்கண்டத்து ஆடுகளங்களில் ஆடும் விதத்திலிருந்து தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்னும் முனைப்பும், அதற்கான பயிற்சியும் கவனமும் இருந்திருந்தால் இந்தியா இரண்டு டெஸ்ட்களிலும் தோற்றிருக்காது.

மூன்றாவது டெஸ்டிலும், அடுத்து வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியச் சுற்றுப் பயணங்களிலும் நன்கு ஆட வேண்டுமானால் இந்தியா என்ன செய்ய வேண்டும்?

(அலசல் நாளையும் தொடரும்…)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *