பெரம்பலூர் அருகே டாஸ்மாக்கை உடைத்து மது பாட்டில்கள் கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் புகுந்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் திருடப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து, பல டாஸ்மாக்குகளில் இருந்த மது பாட்டில்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டன. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கை உடைத்து 1.50 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டம் உப்போடை அருகே எளம்பலூர் சாலையிலுள்ள அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு அங்கு மூன்று இரு சக்கர வாகனங்களில் ஆறு பேர் சென்றனர். டாஸ்மாக் கடையை உடைத்து, 48 பெட்டிகளில் இருந்த மது பாட்டில்களை தாங்கள் கொண்டுவந்த சாக்குப் பைகளில் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனம் மூலம் கோனேரிப்பாளையம் வழியாக தப்பிச் சென்றுவிட்டனர்.
மறுநாள் காலை அப்பகுதியாகச் சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை செய்ததில் கடைக்கு அருகில் உள்ள இடத்தில் மதுபான காலிப் பெட்டிகள் இருப்பது தெரிய வந்தது. பின்னர், டாஸ்மாக் அருகில் ஒரு வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இரு சக்கர வாகனங்களில் மது பாட்டில்களைக் கொண்டுசெல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதுதொடர்பாக மஞ்சு என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, தாங்கள்தான் மது பாட்டில்களை கடத்தியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, காட்டுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை நேற்று (ஏப்ரல் 8) பறிமுதல் செய்த போலீசார் மதுக் கடத்தியதாக மஞ்சு, குணாளன், சிலம்பரசன், சிவகணேஷ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
இதுபற்றி அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, “ஆளுங்கட்சிப் பிரமுகரின் ஆதரவாளர்கள் இருவர், மது பாட்டில்களை டாஸ்மாக்கிலிருந்து சட்டவிரோதமாக எடுத்துவந்து ஒரு குவாட்டர் ரூ.300 என்ற வீதத்தில் விற்பனை செய்துவந்தனர். காவல் துறைக்கு இது தெரிந்ததால் மது பாட்டில்கள் கிடைக்காத வகையில் அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த டாஸ்மாக்கில் புகுந்து மது பாட்டில்களைக் கடத்திவிட்டனர்” என்று சொல்கிறார்கள்.
**எழில்**�,