தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி: விஜயபாஸ்கர்

public

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் தற்போது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அதி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாகத் தாய்லாந்தைச் சேர்ந்த 2 பேர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆகிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் வெளி நாடு, வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள். சமூக பரிமாற்றமாக தமிழகத்தில் கொரோனா பரவவில்லை. அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ எட்டியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே, ஓமனிலிருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர், டெல்லி மற்றும் அயர்லாந்திலிருந்து வந்த தலா ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *