மகள் திருமணம்: நடத்துநருக்கு இரு வாரங்களில் பி.எஃப் தொகை வழங்க உத்தரவு!

Published On:

| By Balaji

மகள் திருமண செலவுக்காகத் தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் கோரிய நடத்துநருக்கு இரண்டு வாரங்களில் உரியத் தொகையை வழங்க அரசுப் போக்குவரத்துக் கழக, கோவை மண்டல பொது மேலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தில் நடத்துநராக துரைசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், தனது மகளின் திருமண செலவுகளுக்காக, தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாயை விடுவிக்கக் கோரி, பொது மேலாளரிடம் மனு கொடுத்தார்.

ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் நேற்று (அக்டோபர் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா ஊரடங்கு காரணமாகப் பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்துக் கழகம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், மனுதாரரின் கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, துரைசாமியின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து எவ்வளவு வழங்க முடியும் எனக் கணக்கிட்டு, இரண்டு வாரங்களில் வழங்க போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share