pபாய் உற்பத்தியாளர்களைப் பாதித்த ஜிஎஸ்டி!

public

சிறு தொழில்களில் ஒன்றான பாய் தயாரிப்பில் ஜிஎஸ்டி வரி நடைமுறை கொண்டு வரப்பட்டதால் பாயின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனால் பாய் தயாரிப்புத் தொழில் முற்றிலுமாக முடங்கிவிட்டதாக நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்திடம் பாய் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீர்காழியில் கடந்த 60 வருடங்களாகப் பாய் தயாரிப்பு தொழிலில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. தைக்கால், ஓலையாம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் கோரைப் புற்களை விவசாயிகளிடமிருந்து கட்டு ஒன்றுக்கு ரூ.1400 கொடுத்து வாங்கும் உற்பத்தியாளர்கள், அவற்றைச் சுத்தம் செய்ய ரூ.300 வரை செலவிடுகிறார்கள். பின்னர் கோரைப் புல்லைச் சமமாக வெட்டிப் பலவித வண்ணங்களில் சாயமேற்றி சூடேற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ரூ.70 முதல் ரூ.300 வரை செலவு செய்து தயாரிக்கப்படும் பாய்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே லாபம் கிடைக்கிறது. இவையெல்லாம் கடந்த ஜூலை மாதம் வரை மட்டும் தான். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறை பாய் தொழிலுக்கும் கொண்டுவரப்பட்டதும் அந்தத் தொழில் முற்றிலுமாக முடங்கி விட்டதாகத் தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நியூஸ் 18 ஊடகத்திடம் பாய் உற்பத்தியாளர் ஒருவர் பேசுகையில், ”பாய்கள் செய்வதற்கான கோரா, சாயம், நூல் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதால் சரியான அளவில் பொருள் உற்பத்தி செய்யமுடியவில்லை. அதே சமயத்தில் பொருட்களை விற்கவும் முடிவதில்லை. காவிரி நீர் இல்லாததால் மோட்டார் மூலம் நீர் நிரப்பி கோரையை விளைவிப்பதில் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பால் உண்டாகும் விலை உயர்வின் தாக்கம் மக்கள் மத்தியில் திணிக்கப்படுகிறது. பாய் தொழிலை பாதித்துள்ள ஜிஎஸ்டி வரியினை மத்திய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “ஏழைகள் பாயில் தான் படுக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கு வரியைப் போட்டு அந்தத் தொழிலை அழிப்பதுதான் அரசாங்கத்தின் கொள்கையாகுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜிஎஸ்டி வரியிலிருந்து பாய் தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே பாய் உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *