kவிடுமுறையிலும் சத்துணவு வழங்க உத்தரவு!

Published On:

| By Balaji

கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தே காணப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதற்கேற்றபோல் நேற்று முன்தின பாதிப்பை விட நேற்றைய பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக கல்லூரிகள் மற்றும் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மதிய உணவு சாப்பாடும் வழங்கப்படுவதில்லை.

தற்போது இதுகுறித்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கு ஊட்டசத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க, பள்ளிகள் திறக்கும் வரை மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுகள் வழங்கப்பட வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க வேண்டும். ஜனவரி மாதத்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோதும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share