kகுறுகிய சாலையில் முந்த முயன்று விபத்து!

Published On:

| By Balaji

சென்னை மாநகரில், வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வதும், அதனால் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தனக்கு முன்னாள் செல்லும் வாகனத்தை முந்துவதற்காக அதிவேகமாகச் செல்வதையும் காண முடிகிறது. போக்குவரத்து நெரிசலில் நின்றால், சிறிது இடம் கிடைத்தாலும் அவ்விடத்துக்காக முந்துகின்றனர்.

இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படும் நிலையில் வடபழனியில் இன்று (அக்டோபர் 14) மதியம் அரசு பேருந்தை முந்த முயன்றவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

வடபழனியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சுயதொழில் செய்து வந்துள்ளார். வேலை காரணமாக வடபழனியிலிருந்து அசோக் நகருக்கு இன்று மதியம் சென்றுள்ளார். வடபழனி பாலத்திற்குக் கீழே சென்று கொண்டிருக்கும் போது அவருக்கு முன்னால் மாநகர பேருந்து ஒன்று சென்றுள்ளது. குறுகிய அந்த சாலையின் அருகே கோயில் சுவர் ஒன்றும் இருந்துள்ளது. அப்போது அந்த பேருந்துக்கும், சுவருக்கும் இடையிலான பகுதியில் மகேந்திரன் பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறிய அவர், பிரேக் பிடித்ததில் அவரது வாகனம் அந்த சுவரில் மோதியிருக்கிறது. இதனால் அவர் கீழே விழுந்துள்ளார். அவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த குறுகலான இடத்தில் முந்தாமல், சிறிது நேரம் கழித்து முந்தியிருந்தால் இதுபோன்ற விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாண்டி பஜார் போலீசார், மகேந்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுநர் கருப்பையா மற்றும் நடத்துநர் ஸ்டாலினிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share