6பசி கடலினும் பெரிது!

public

நீலப் பாலைவனம் 6 – நரேஷ்

மீனவர்களும் விவசாயிகளும் ஒரே வகையினர்தான். ஆதிகாலத்தில் இருவரும் விதைக்காமல் அறுவடை செய்தனர். காடோடி காட்டுக்குள் அறுவடை செய்து விவசாயி ஆனான். கடலோடி கடலுக்குள் அறுவடை செய்து மீனவன் ஆனான். காட்டின் வளம் வரையறுக்கப்பட்டதாக இருந்ததால், விவசாயி விதைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. முக்கியமாக சமவெளிப் பகுதிகளில் மனிதக் கூட்டம் அதிகமாகப் பெருகத் தொடங்கியதும், உணவுக்கான நிலப்பரப்பும் பெருகத் தொடங்கியது.

ஆனால், கடலின் வளம் கடந்த நூற்றாண்டு வரை வரையறுக்கப்படவில்லை. அதனால் கடலோடிக்கு விதைக்க வேண்டிய அவசியம் இல்லை. கடலின் வளம் எல்லையற்றது என்று அவர்கள் நம்பினார்கள். நிலப்பரப்பைவிடக் கடல் மிகப் பெரியது என்றும், நிலப்பரப்பில் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு அதிக வளம் கடலுக்குள் இருப்பதாகவும் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

ஆதிமனிதனுக்குக் கடல் என்பது விண்வெளியைப் போன்றது. இன்றைய ராக்கெட்டுகள்தான் அன்றைய கப்பல்கள். இன்று செவ்வாய்க்குச் செல்வதைப் போன்றதுதான் அன்று கடல்வழியாக வேறு கண்டம் செல்வது.

ஆதிகால மீனவ அறிவின் மிச்சம் இன்றும் கடலோடிகளிடம் இருப்பதைக் காண முடிகிறது. அவர்களால் ’மீன்பிடித் தடைக்காலத்தை’ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடலின் வளம் குன்றிவருகிறது என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதே சவாலாக இருக்கிறது.

“இவ்ளோ பெரிய கடல்ல, மீனு இனப்பெருக்கம் பண்ற காலம்னு எப்படி ரெண்டு மாசத்தை மட்டும் சொல்றாங்க? ஆத்துல இருந்து புதுத் தண்ணி கடல்ல கலக்கும்போதுதான் மீனுங்க கரைப்பக்கம் வந்து இனப்பெருக்கம் பண்ணும். அப்போ மழை பெய்யுற காலத்துக்கு அடுத்த நாட்கள்லதான் தடை விதிக்கணும். இவங்க கண்ணுக்குத் தெரியுற மீன் வகைய மட்டும் பாத்துட்டு, அதோட இனப்பெருக்க காலத்தை கணக்கெடுக்குறாங்க. இதெல்லாம் இந்த ஊருக்கு செட்டாவாது தம்பி” என்றார் மன்னார் வளைகுடா தீவைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ்.

தங்கள் நிலத்தின் அருகில் இருக்கும் கடற் பகுதியில் இருக்கும் மீன்வகைகளையும், அவற்றின் பருவகாலத்தையும் நன்கு அறிந்தவர் அவர்.

ஆனால், இது குறுகிய புரிதல் கொண்ட பார்வை என்றார் கடல் உயிரியலாளார் செல்வம். “60 நாள் மீன்பிடித் தடைக்காலம் என்பது பொதுவானது. எல்லா வகையான மீன்களுக்கும் பொதுவான இனப்பெருக்கக் காலம் என்று ஒன்று இருக்கும் அல்லவா, அதை வைத்துப் பல்வேறு கட்டச் சோதனைகளுக்கு பிறகு அமல்படுத்தப்பட்டதுதான் இந்த மீன்பிடித் தடைக்காலம். இதை இடத்திற்கு ஏற்றாற்போல மாற்ற முடியாது. அப்படி மாற்றினால், அதைக் கண்காணிக்கவும் முடியாது” என்றார் அவர்.

இதுதான் சட்டம் அமைப்பதில் உள்ள மிகப் பெரிய சவால். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே ரேஷன் போன்றதுதான் ஒரே கடல், ஒரே விதி என்பதும். மீன்பிடியைத் தொழிலுக்காகச் செய்பவர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் கடலோடுவதையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்களுக்கு, இந்த 60 நாட்களைக் கடப்பது நரகம். தினம் தினம் உணவு தேடச்செல்லும் ஒரு காட்டு விலங்கினுடைய வாழ்க்கையைப் போன்றது இவர்களுடைய மீன்பிடிப் பயணம்.

தானியங்களைப் போன்று சேகரித்து சேமித்து வைக்க முடியாத செல்வம் கடல் வளம். 10 – 15 நாட்கள் லாஞ்ச் போட்களில் சென்று பிடிக்கும் மீன்களை ஐஸ் பாக்ஸ்களில் அடைத்து வந்து விற்கும் விற்பனையாளர்கள் அல்ல இவர்கள். அன்றாடம் கடலுக்குள் சென்று கிடைப்பதைக் கிடத்தி வந்து, வெளிச்சம் மறைவதற்குள் விற்றுவிட்டு வீடு திரும்பும் வாழ்வைக் கொண்டவர்கள் இக்கரைவாசிகள். இவர்களிடம் மீன்பிடிக்குத் தடைக்காலம் என்று ஒன்று இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசவே முடியாது. ஒரு வேளை உணவுக்காகக் கடலுக்குள் செல்பவர்களிடம், கடல் வளம் பற்றியெல்லாம் போதித்துக்கொண்டிருக்க முடியாது. கடலின் அளவைவிட, அவர்களுடைய பசியின் அளவு அந்நேரத்தில் அவர்களுக்குப் பெரிது.

இந்த முரண்பாட்டினைப் புரிந்துகொள்வது கடினம்தான். ஆனால், அதை புரிந்துகொள்வதுதான் கரைவாசிகளின் வாழ்வைக் கருத்தில் கொள்வதற்கான எளிய வழிமுறை. நீலம் பாலைவனமாவதைத் தடுக்கும் அதே வேளையில், இக்கரைவாசிகளின் வயிறு பாலைவனமாகிவிடாமலும் பாதுகாக்க வேண்டும்.

[படகெங்கும் பணம், கப்பலெங்கும் கடன்!](https://minnambalam.com/k/2019/07/03/26)

**

மேலும் படிக்க

**

**[இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!](https://minnambalam.com/k/2019/07/09/22)**

**[நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!](https://minnambalam.com/k/2019/07/10/22)**

**[டிஜிட்டல் திண்ணை: மாமா… மாப்ள… திமுக-அதிமுக கலகல!](https://minnambalam.com/k/2019/07/09/84)**

**[புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா](https://minnambalam.com/k/2019/07/09/79)**

**[வேலூர் தேர்தலைப் புறக்கணித்தது ஏன்? தினகரன் விளக்கம்!](https://minnambalam.com/k/2019/07/10/26)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *