மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

வேலூர் தேர்தலைப் புறக்கணித்தது ஏன்? தினகரன் விளக்கம்!

வேலூர் தேர்தலைப் புறக்கணித்தது ஏன்? தினகரன் விளக்கம்!

வேலூர் மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்தது தொடர்பாக விளக்கமளித்து, தொண்டர்களுக்கு அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மடல் எழுதியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக அனைத்து இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது. தோல்வியைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றனர். ஆனால், சுயநல நிர்வாகிகள்தான் கட்சியிலிருந்து வெளியேறுவார்கள், தொண்டர்கள் எப்போதும் கட்சியில்தான் இருப்பார்கள் என அதற்குப் பதிலடி கொடுத்தார் அமமுக பொதுச் செயலாளரான தினகரன். அண்மையில் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளை நியமித்தவர், வேலூர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்தார்.

இந்த அனைத்து விவகாரங்களையும் குறிப்பிட்டு அமமுக தொண்டர்களுக்கு நேற்று (ஜூலை 9) மடல் எழுதியுள்ள தினகரன், மக்களவைத் தேர்தலில் அமமுக சந்தித்த பின்னடைவுக்கான காரணங்களை உணர்ந்து, எதிர்காலத்தில் அவற்றையும் எதிர்கொண்டு வெற்றிகளைக் குவிக்கும் தாகத்தோடு காத்திருக்கும் உங்களின் எழுச்சிக்கு முதலில் தலைவணங்குகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல், சின்னம் கிடைக்க நடத்திய போராட்டங்களை விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கும் தினகரன், “இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஓர் அரசியல் இயக்கமும் இதுபோன்ற சோதனைகளைச் சந்தித்திருக்காது என்று சொல்லும் அளவுக்குக் கடும் சோதனைகளை, சதிகளை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. வேட்பு மனுத் தாக்கலுக்கு சில மணி நேரம் முன்புவரை நாம் யார்... அரசியல் கட்சியின் வேட்பாளரா... சுயேச்சை வேட்பாளரா என்பதைக்கூட உறுதிபடச் சொல்ல முடியாத ஒரு சோதனையை வேறு எந்த இயக்கமும் சந்தித்திருக்காது. கடைசியில், சுயேச்சைகளாகத்தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டு, அதன் பிறகும் சில நாள் காத்திருப்புக்குப் பிறகு பரிசுப் பெட்டகம் சின்னத்தைப் பெற்றோம். உங்களது அயராத உழைப்பின் காரணமாக இரண்டே வாரக் கால இடைவெளியில் அந்தச் சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம்” என்றவர்,

பரிசுப் பெட்டகத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தாலும், நாம் சுயேச்சைகள் என்பதால் மிகப் பெரும்பாலான தொகுதிகளில் நமது சின்னம், இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குப்பதிவு இயந்திரங்களில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. நமக்கு வாக்களிக்க விரும்பியும் நமது சின்னத்தைத் தேடுவதில் கிராமப்புற மக்கள் பட்ட சிரமங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாகத்தான் அமமுகவை அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியை வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களிலேயே நாம் ஆரம்பித்தோம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ள தினகரன்,

“இந்த நேரத்தில்தான், ஏற்கெனவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நமது இயக்கத்தைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணி ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில் நிறைவுபெறக்கூடும். அதுவரை நாம் சுயேச்சை என்ற அடையாளத்தோடுதான் தேர்தல் களத்தில் அறியப்படுவோம். அந்த அடிப்படையில் இந்த வேலூர் தொகுதி தேர்தலுக்காக ஒரு சின்னத்தைப் பெற்று, தொடர்ந்து வரவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்குத் தனித்தனிச் சின்னங்களைப் பெற்று நாம் தேர்தலைச் சந்திப்பதும், அமமுகவைப் பதிவுசெய்த பின் நிரந்தர சின்னத்தைப் பெற்று அதன்பிறகு வரும் தேர்தல்களைச் சந்திப்பதும் எனப் பல சின்னங்களில் போட்டியிடுவது மக்களிடம் மட்டுமல்ல, தொண்டர்கள் மத்தியிலும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால்தான் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம். நீங்களும் அதை உணர்ந்து ஏற்றுக்கொள்வீர்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு பயத்தின் காரணமாக எடுக்கப்பட்டது, தேர்தல் களத்தைக் கண்டு அமமுக பயப்படுகிறது என்றெல்லாம் நமது எதிரிகள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடும். அவற்றையெல்லாம் புறந்தள்ளுங்கள் என்று அமமுகவினரிடம் கேட்டுக்கொண்டவர், நமது இயக்கத்துக்கான நிரந்தரமான புதிய அடையாளத்தோடு மக்களைச் சந்திப்போம் என்றும் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon