Xதிருச்சி மாநகர ஆணையர் இடமாற்றம்!

public

தேர்தல் அல்லாத பணிக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறை அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

சமீபத்தில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 8 காவல் நிலையங்களில் ஓட்டுக்காக காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்ற புகாரின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இரண்டு காவல் நிலையங்களிலிருந்து பணத்துடன் கூடிய கவர் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி கண்காணிப்பாளர் ரவி தலைமையில், ஒரு டிஎஸ்பி, இரண்டு ஆய்வாளர்கள், 6 காவலர்கள் என 10 பேர் அடங்கிய குழு இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றியும், பொன்மலை சரக உதவி ஆணையர் தமிழ்மாறனை பணியிடை நீக்கம் செய்தும் தேர்தல் ஆணையம் நேற்றிரவு (மார்ச் 30) உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே முசிறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜூக்கு சொந்தமான காரிலிருந்து ஒரு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம், திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சிவராசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோரை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *