nநாட்டு வெடியால் பறிபோன சிறுவனின் பார்வை!

Published On:

| By Balaji

சென்னையில் இறுதி ஊர்வலத்தின்போது வெடிக்கப்பட்ட நாட்டு வெடியால், அவ்வழியே சென்ற சிறுவனின் பார்வை பறிபோனது.

தேர்தல் கொண்டாட்டம், திருமணம், இறுதி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது பட்டாசுகளை வெடிப்பது வழக்கம். அதிக சத்தம் எழுப்பும் நாட்டு வெடி உள்ளிட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்படுவது நிறுத்தப்படுவதில்லை. மேலும், தடையை மீறி செயல்படும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சென்னை ஜாபர்கான்பேட்டை பச்சையம்மன் தெருவை சேர்ந்தவர் அழகு சுந்தரம். இவர் புதுகோட்டையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு புவனேஷ்வரி(18) மற்றும் சந்தோஷ்(14) என இரு பிள்ளைகள் உள்ளனர். சந்தோஷ் அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி மாலை, கல்லூரிக்கு சென்ற தனது சகோதரியை அழைத்து வருவதற்காக, ஜான் கென்னடி தெரு வழியாக சென்றுள்ளார். பின்னர், அங்கேயுள்ள சாலையோர தேநீர் கடை அருகே சந்தோஷ் நின்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இறுதி ஊர்வலத்தில் அதிக சத்தம் எழுப்பும் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை வெடித்துவிட்டு சென்றுள்ளனர். அந்த நாட்டு வெடிகளில் ஒன்றின் கல் அதிவேகமாக பறந்து வந்து சந்தோஷின் இடது கண்ணை பலமாக தாக்கியுள்ளது. வலியால் அலறி துடித்த சந்தோஷை அங்கிருந்தவர்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பார்வை நரம்புகள் சிதைந்து விட்டதால் அவரின் கண் பார்வை பறிபோய்விட்டது என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுவனின் சகோதரி புவனேஷ்வரி தனது சகோதரர் கண் பறிபோனதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜாபர்கான்பேட்டை ஜான்கென்னடி தெருவை சேர்ந்த விமலா (41) என்பவரின் இறுதி ஊர்வலத்தில், சண்முகவேல் என்பவர் நாட்டுவெடி வெடித்தபோது அதிலிருந்து சிதறிய கல் சிறுவன் கண்ணில் பட்டு பார்வை பறிபோனது தெரியவந்தது.

இதையடுத்து நாட்டு வெடி வாங்கிய ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த குணசேகரன் (24), பட்டாசு வெடித்து விபத்து ஏற்படுத்திய சண்முகவேல் மற்றும் சட்டவிரோதமாக நாட்டு வெடி விற்ற செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது வெடிபொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல், மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டு வெடியால் சிறுவனின் கண் பார்வை பறிபோனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதல் முறை கிடையாது. இதனால் சில இடங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share