�டிஜிட்டல் திண்ணை 2: முதல்வருக்கே தெரியாமல் இலவச லேப்டாப் கொள்முதல் நிறுத்தம்!

public

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் முந்தைய சில டிஜிட்டல் திண்ணை செய்தி லிங்க் குகள் வந்தன. பின் செய்தி வந்தது.

“மாணவர்களுக்கு கொடுக்கப் போகும் இலவச லேப்டாப் விவகாரத்தில் அதிகாரிகளுக்கும், முதல்வருக்கும் இடையே நடக்கும் மோதலை தொடர்ந்து மின்னம்பலத்தில்தான் எழுதி வருகிறோம். ’மாணவர்களுக்கு நல்ல லேப்டாப்தான் போகணும். அதிக செயல் திறன் கொண்ட லேப்டாப்தான் கொடுக்கணும். அதுல எந்த காம்பரமைஸும் செய்ய வேண்டாம்..’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டார் என்பதுதான் நாம் லேப்டாப் விவகாரத்தில் கடைசியாக கொடுத்த அப்டேட். அதன் பிறகு நடந்தவற்றை சொல்கிறேன்.

முதல்வர் உத்தரவுக்குப் பிறகு அதிக செயல் திறன் கொண்ட லேப்டாப்தான் வேண்டும் என்பதை எல்காட் நிறுவனத்தில் இருந்து லெனோவா நிறுவனத்துக்கு மெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் குறைந்த செயல் திறன் கொண்ட லேப்டாப்பை கொடுப்பதற்காக எல்காட் எம்.டி விஜயகுமாருக்கும், ஐ.டி. செகரெட்டரி சந்தோஷ்பாபுவுக்கும் நிர்பந்தம் இருப்பதாக ஐ.ஏ.எஸ். வட்டாரத்திலேயே பரவலாக தகவல் பரவியது. இந்த அழுத்தம் காரணமாக அந்த அதிகாரிகள் மறுபடியும் குறைந்த செயல் திறன் கொண்ட லேப்டாப் கொடுப்பதற்கே முயன்றிருக்கிறார்கள்.

‘லேப்டாப் கொடுக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து,இதுவரை இவ்வளவு குறைவான விலைக்கு லேப்டாப் வாங்கியதே இல்லை. குறைந்த செயல் திறன் கொண்ட லேப்டாப் கொடுப்பதால் மாணவர்களுக்கும் பிரச்னை இல்லை. அரசுக்கும் லாபம்தான்” என்று ஒரு விரிவான அறிக்கை தயார் செய்து விஜயகுமாரும், சந்தோஷ்பாபுவும் , நிதிச் செயலர் சண்முகத்தை சந்தித்திருக்கிறார்கள்.

அதைப் பார்த்த சண்முகமோ, ‘முதல்வர் இந்த விஷயத்துல கோபமா இருக்காரு. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த வருஷம் ரிட்டையர் ஆகப் போறாங்க. அந்தப் பதவி எனக்கு வரப் போகுது. இந்த நேரத்துல இதுல நான் தலையிட்டா எனக்கு கெட்டபேருதான் வரும். அதனால என்னை இதுக்கு மேல இந்த விஷயத்துல இழுக்காதீங்க. நீங்க தலைமை செயலாளரை போய் நேரா பாருங்க..” என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.

அதன் பிறகு கிரிஜா வைத்தியநாதனை இருவரும் பார்த்திருக்கிறார்கள். “லேப்டாப் கொள்முதல் பண்ற விஷயத்துல முதல்வர் நேரடியாக தலையிட்டு இருக்காரு. இதுல நான் எதுவும் செய்ய முடியாது. நீங்க முதல்வர்கிட்டயே பேசுங்க..” என்று அவரும் தவிர்த்துவிட்டாராம். அதன் பிறகு கடந்த 5-ம் தேதி மீண்டும் முதல்வரை சந்திக்க சந்தோஷ்பாபுவும், விஜயகுமாரும் போயிருக்கிறார்கள். அன்று சந்தோஷ்பாபுவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு தாங்கித் தாங்கி நடந்தபடிதான் முதல்வர் அறைக்குள் போயிருக்கிறார். அவர்கள் இருவரைப் பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டாராம். “ நான் சொல்ற து எதையும் செய்யவே போறது இல்லைன்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணிடீங்களா? அம்மாவோட கனவு திட்டத்தை நீங்க நாசமாக்கிட்டு இருக்கீங்க… நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியும்” என எடப்பாடி சொல்லும் போதே, ஃபைலை எடுத்து இருக்கிறார் விஜயகுமார். அதற்கு எடப்பாடி, ‘ எந்த ஃபைலையும் நான் பார்க்க விரும்பலை. நீங்க கிளம்புங்க..’ என அனுப்பிவிட்டாராம்.

வெளியே வந்த இருவரும் அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘முதல்வர் இப்போ பிஸியாக இருக்காரு. லேப்டாப் தொடர்பாக விரிவாக பேசலாம்னு சொல்லி இருக்காரு. ஏற்கெனவே கொடுத்த ஆர்டரை நிறுத்த சொல்லிட்டாரு…’ என்று விஜயகுமார் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், லெனோவா நிறுவனத்துக்கு எல்ட்காட் நிறுவனத்தில் இருந்து அன்று மாலையே ஒரு மெயில் போயிருக்கிறது. அதில், இலவச லேப்டாப் உற்பத்தியை அடுத்த தகவல் வரும் வரை நிறுத்தி வைக்கவும்” என குறிப்பிட்டுள்ளனர். அதனால் இப்போது லேப்டாப் கொள்முதல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது முதல்வருக்கே தெரியாமல் நடந்திருக்கிறது.

இதற்கிடையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் சந்தோஷ்பாபு, ‘காலில் சுளுக்கு வந்து நடக்க முடியாம நடந்து போறேன். அதை என்னனு கூட முதல்வர் கேட்கலை. போனதும் திட்டி அனுப்பிட்டாரு. இவரெல்லாம் முதல்வர் ஆனதே பெரிய அதிர்ஷ்டம். அதிகாரிகளை மதிக்க தெரியாத இவரெல்லாம் என்ன முதல்வர். எப்படி அதிக சிஸ்மார்க் இருக்கும் லேப்டாப்பை வாங்கிடுறாருன்னு பார்க்கிறேன்.. கொஞ்ச நாள் பெண்டிங் வெச்சாலே போதும். தேர்தல் தேதி அறிவிச்சுடுவாங்க. அப்புறம் எப்படி லேப்டாப் வாங்குறாருன்னு பார்க்கிறேன்.’ என்று சொல்லி வருகிறாராம்.

மாணவர்களுக்கு அக்டோபரில் கொடுக்க வேண்டிய லேப்டாப் அதிகாரிகளின் அலட்சியத்தால் அப்படியே கிடப்பில் இருக்கிறது.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

[டிஜிட்டல் திண்ணை 2: இலவச லேப்டாப்- எடப்பாடியை ஏமாற்றும் அதிகாரிகள்!](https://www.minnambalam.com/k/2019/01/30/93)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *