�சிறப்புக் கட்டுரை: பிரணாப் – மோடி: இந்தியப் பொருளாதார மந்த நிலைக்குச் சொந்தக்காரர்கள்?

public

நா. ரகுநாத்

2016 நவம்பர் 8, அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பழிப்பு (demonetization) நடவடிக்கை மற்றும் 2017 ஜூலை 1 அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி… இவ்விரண்டின் விளைவாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகமிழக்கத் தொடங்கியது. ஏற்கனவே நாட்டில் நிலவி வந்த வேலையின்மை, வேளாண் நெருக்கடி போன்ற பிரச்சினைகளை இவ்விரண்டும் தீவிரப்படுத்தின. இதை ஏற்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மறுத்தாலும், உண்மை என்னவென்று கண்ணைத் திறந்து பார்க்க மறுப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் புலப்பட்டுவிட்டது.

‘இந்தியப் பொருளாதாரத்துக்குப் பாதகம் ஏற்படுத்தும் பல்வேறு சம்பவங்கள், கொள்கை முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் 2008-2018 எனும் பத்தாண்டுகளில் அரங்கேறி, அதன் வளர்ச்சியைப் பெருமளவுக்குப் பாதித்துவிட்டன. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (2009-14) மற்றும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (2014-2018) என இரு பெரும் தேசியக் கட்சிகளுமே பொறுப்பு’ என அவர்கள் செய்ததையும், செய்யத் தவறியதையும் பதிவு செய்யும் வண்ணம் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் பூஜா மெஹ்ரா எனும் பத்திரிகையாளர், The Lost Decade 2008-18: How India’s Growth Story Devolved into Growth without a Story எனும் புத்தகத்தில் கோர்வையான கதையாடல் ஒன்றை நமக்கு வழங்குகிறார்.

**2008-2018: நடந்தது என்ன?**

2005-06இல் தொடங்கி, அடுத்த மூன்று நிதியாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்குச் சராசரியாக 8 விழுக்காடு வேகத்தில் வளர்ந்தது எனவும், செப்டம்பர் 2008இல் அமெரிக்காவில் தொடங்கி மற்ற நாடுகளுக்குப் பரவிய உலக நிதி நெருக்கடி (Global Financial Crisis) அதற்கு முட்டுக்கட்டை போட்டது எனவும் இந்தக் கதையாடல் தொடங்குகிறது. அந்த நெருக்கடியின் அதிர்வலைகளின் தாக்கங்களை ரிசர்வ் வங்கியும், தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், திட்டக்குழு துணைத்தலைவர் மான்டெக் அலுவாலியா உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்கள் துரிதமாகச் செயல்பட்டு மட்டுப்படுத்தினர். ஆனால், அதற்குப் பின் ஏற்பட்ட இரண்டு எதிர்பாராத நிகழ்ச்சிகள் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகச் செய்தன என்கிறார் பூஜா மெஹ்ரா.

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை (2008 நவம்பர் 26) அடுத்து நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் உள்துறை அமைச்சர் ஆனதும், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மன்மோகன் சிங் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டதால் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சர் ஆனதும் நாட்டின் பொருளாதார மேலாண்மையின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்தன என்பது பூஜா மெஹ்ராவின் வாதமாக இருக்கிறது. அவர் அப்படி சொல்வதற்குக் காரணம், உலகமயமாக்கல் சூழலில் நவீன இந்தியப் பொருளாதாரத்தை வழிநடத்தும் திறன், கட்டுப்பாடுகள் நிறைந்த சோசியலிச இந்தியாவில் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு இல்லாமல் போனதே என்று நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவருடைய தவறான அணுகுமுறையால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியும் வேகமிழக்கத் தொடங்கியது என்கிறார் மெஹ்ரா.

அதுமட்டுமின்றி, பொருளாதாரம் வேகமாக வளர்ந்த காலத்தில் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொதுத் துறை வங்கிக் கடன்கள், வாராக் கடனாக (NPA) மாறத்தொடங்கியதும் வளர்ச்சியை பாதித்தது. அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு முதலியவற்றில் முறைகேடுகள் ஏற்பட்டிருக்கின்றன என்று நாட்டின் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் (CAG) அறிக்கைகள் வெளியிட்டதும், அந்த ஒதுக்கீடுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததும், துணிச்சலான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான ஊக்கத்தை முற்றிலும் அழித்துவிட்டது. அதன் விளைவாகவே, பொதுத் துறை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பல திட்டங்களில் செயல்பட்டுக்கொண்டிருந்த தனியார் நிறுவனங்கள், அத்திட்டங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல அரசு அதிகாரிகளின் அனுமதி பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன என்றும் நமக்குச் சொல்லப்படுகிறது.

2011-12இல் தொடங்கி 2013-14 வரை அடுத்த மூன்று நிதியாண்டுகளில் பொருளாதார மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். ஊழலற்ற ஆட்சியையும், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதார வளர்ச்சியையும் நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என்று பரப்புரை செய்து 2014இல் ஆட்சியைப் பிடித்தார் நரேந்திர மோடி. அவருடைய தலைமையில் கொள்கை முடிவுகள் துரிதமாக எடுக்கப்பட்டாலும், அவை பெரும்பாலும் பொருளாதார வல்லுநர்களிடம் அறிவுரை பெற்று, பரவலாகக் கலந்தாலோசித்து, தீர்க்கமாகச் சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்பது மெஹ்ரா வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகளுள் ஒன்று. அதற்கு எடுத்துக்காட்டாக பணமதிப்பழிப்பு (2016), கோளாறான ஜிஎஸ்டி அமலாக்கத்தை (2017) அவர் வழங்குகிறார்.

மேலும், வங்கிகளில் வாராக்கடன் குவிகிறது என்பது தெரிந்தும் அதைச் சரி செய்ய எந்த முனைப்பும் மோடி அரசு காட்டவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்த மோடி, பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் தேவையான பல முக்கியமான ‘சீர்திருத்தங்களை’ (reforms) மேற்கொள்ளத் தவறியது மட்டுமின்றி, நலத்திட்டங்களை மட்டும் அமல்படுத்தும் ஜனரஞ்சகவாதியாக (populist) தன்னை மாற்றிக்கொண்டதும் பொருளாதாரத்தில் தொய்வுநிலை தொடர்ந்ததில் பெரும் பங்காற்றியது. இதுவே, இந்தப் புத்தகம் நமக்கு வழங்கும் கதையாடலின் சுருக்கம்.

நாட்டின் இருபெரும் தேசியக்கட்சிகளின் திராணியற்ற பொருளாதார மேலாண்மையால் முக்கியமான ‘சீர்திருத்தங்கள்’ மேற்கொள்ளும் வாய்ப்பை 2008-2018 காலத்தில் பொருளாதாரம் இழந்துவிட்டது என்பதே பூஜா மெஹ்ராவின் மிகப்பெரிய ஆதங்கம். அவர் சொல்லும் சீர்திருத்தங்களை நாம் எப்படிப் பொருள்கொள்வது?

**நவதாராளமய இந்தியாவில் ‘சீர்திருத்தம்’**

1991க்குப்பின் பொருளாதாரத்தில் அரசின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. கடந்த இருபதாண்டுகளாகவே நடுவனரசு செய்யும் செலவு, நாட்டின் மொத்த உற்பத்தியில் சராசரியாக10-11 விழுக்காடாகவே இருந்து வந்துள்ளது. புதிய முதலீடுகளை அரசு மேற்கொள்ளாமல் இருப்பது போதாதென்று, பொதுத் துறை நிறுவனங்களில் வைத்திருக்கும் பங்குகளையும் அரசு திரும்பப்பெறும் அல்லது சந்தையில் விற்கும் போக்கையே நாம் பார்க்கிறோம். இதை ஆங்கிலத்தில் disinvestment என்பார்கள். நாட்டில் ஏற்படும் புதிய முதலீடுகளில் கிட்டத்தட்ட அனைத்து முதலீடுகளும் தனியார் நிறுவனங்களே செய்கின்றன. பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் முதலீடுகளையும், பொருளாதாரத்தில் அரசின் பங்கையும் தொடர்ந்து குறைப்பது ஒரு முக்கியமான ‘சீர்திருத்தம்’ என்று சந்தைப் பொருளாதாரத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் நமக்குச் சொல்கிறார்கள்.

1990க்கு முன்பு ICICI, IDBI போன்றவை வணிக வங்கிகளாக (commercial banks) செயல்படவில்லை. நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்குவதற்கும், தனியார் நிறுவனங்கள் தொழில் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மற்றும் பெரும் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் தேவையான நிதி, ஆலோசனை வழங்கும் மேம்பாட்டு நிதி நிறுவனங்களாக (Development Finance Institutions) அவை இருந்தன. அதுவே அந்நிறுவனங்களின் பிரத்யேகமான கடமையாக இருந்தது. வளரும் நாடுகளில் துணிச்சலாகப் பல துறைகளில் முதலீடு செய்வதற்கான மூலதனத்தை (risk capital) வழங்க இதுபோன்ற வங்கிகள் நிறுவப்பட்டன. 90களுக்குப் பிறகு அவையெல்லாம் வணிக வங்கிகளாக மாற்றப்பட்டன. பொருளாதாரத்தில் அரசு தனது இடையீடுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனும் கோட்பாடும் அந்தச் சமயத்தில்தான் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித்தரும் பொறுப்புகளும் தனியாரிடமே வழங்கப்பட்டன. ஆனால், அதற்கான நிதியை அவர்கள் பொதுத் துறை வங்கிகளிடம் பெற்றுக்கொள்ளலாம் எனும் PPP (Public-Private-Partnership) ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

நுகர்வு சார்ந்த சில்லறைக் கடன் (retail loans) வழங்குவதே வணிக வங்கிகளின் வேலை. பல கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களில் ‘ரிஸ்க்’ அதிகம்; மேலும் அவை நிலையான வருவாய் ஈட்டத் தொடங்குவதற்குச் சில வருடங்களாகும். இவற்றுக்குக் கடன் கொடுப்பது வணிக வங்கிகளின் வேலை அல்ல; அது மேம்பாட்டு நிதி நிறுவனங்களின் வேலை. ஆனால், அவற்றின் அடையாளங்களைதான் நாம் மாற்றிவிட்டோமே! அதன் விளைவாக, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தொழிற்துறைக்கும், உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கும் திட்டங்களுக்கும் வழங்கப்பட்டன. இந்தக் கடன்கள் வழங்கப்பட்ட காலத்தில் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. இந்த நேர்மறை வளர்ச்சிப்போக்கு தொடரும் என எதிர்பார்த்து வழங்கப்பட்ட பல கடன்கள் வாராக்கடனாக மாறிவிட்டன. எல்லாம் சீர்திருத்தத்தின் விளைவே!

முன்பெல்லாம் நிலம் தொடர்பான சீர்திருத்தம் என்றால், அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி, நிலம் இல்லாதவர்களுக்கு வழங்கும் முயற்சியாகவே அது பார்க்கப்பட்டது. பூஜா மெஹ்ரா சொல்லும் நிலச்சீர்திருத்தத்தின் பொருள் என்ன தெரியுமா? தனியார் நிறுவனங்கள் தொழில் செய்வதற்கு, பிரத்யேக ஏற்றுமதி மண்டலங்களுக்கு (Special Economic Zones), பெரும் தொழிற்பேட்டைகளுக்கு, மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு மற்றும் நெடுஞ்சாலை போடுவதற்கு விவசாய நிலம், எளிய பழங்குடியின மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் முறைகளை எளிமைப்படுத்துவதே அதன் பொருள். கேட்டால், இப்படித்தான் மேற்கத்திய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டது என்று சீர்திருத்தவாதிகள் வரலாற்றுப் பாடம் எடுப்பார்கள். நிலவுடைமை சமுதாயத்திலிருந்து தொழில்மயமான சமுதாயமாக அந்நாடுகள் மாறிய வரலாறு மிகவும் கொடியது; வலியும் வேதனையும் நிறைந்து. இங்கு அதுபோன்ற மாற்றம் ஏற்படுத்தக்கூடிய வலிகள், பலன்கள் இரண்டுமே சமூக-பொருளாதாரப் படிநிலையில் வெவ்வேறு நிலைகளில் இருக்கும் மக்களிடையே நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் என்று ஏதாவது உத்தரவாதம் உண்டா?

அடுத்து தொழிலாளர் சந்தை சார்ந்த சீர்திருத்தங்களுக்கு (labour market reforms) வருவோம். இந்தியாவில் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் நெகிழ்வுத்தன்மையற்றதாக (inflexible labour laws) இருப்பதால், அவை தொழில்முனைவோரின் ஊக்கத்தையும், தொழிலாளர்களின் நலனையுமே பாதிக்கின்றன எனும் கரிசனப் போர்வையில் ஏற்கனவே பல மாநிலங்களில் அச்சட்டங்களை நீர்த்துப்போகச் செய்திருக்கிறார்கள். இதற்கு ராஜஸ்தான் மாநிலம்தான் முன்னோடி. தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களில் ராஜஸ்தான் மாநிலம் செய்த ‘சீர்திருத்தங்களை’ மாதிரியாகக்கொண்டு மற்ற மாநிலங்களும் இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை 2018-19 வலியுறுத்துவதை நாம் என்னவென்று சொல்வது?

பொதுவாகவே, லாப நோக்கோடு இயங்கும் பொருளாதார அமைப்பில் ஏட்டளவில் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் பல இருந்தாலும், அவை பெரும்பாலும் முறையாக அமல்படுத்தப்படுவதே இல்லை என்பதைப் பல ஆய்வுகள் ஆதாரத்தோடு நிறுவியுள்ளன. தொழிலாளர் சந்தையில் நெகிழ்வுத்தன்மை – அதாவது, எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வேலையில் அமர்த்தலாம், எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கலாம் எனும் ஏற்பாடு – வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் என்கிறார்கள் சீர்திருத்தவாதிகள். இந்தியாவில் முறைசார்ந்த தொழிலாளர்கள் (formal sector workers) வெறும் 17 விழுக்காடுதான். 2000-2014 காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்புசார்ந்த ஆலை வேலைகளின் (organised maufacturing employment) வளர்ச்சியில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் (contract workers) பங்கு 50 சதவிகிதம். 2017இல் அமைப்பு சார்ந்த ஆலைகளில், ஒப்பந்தம் மற்றும் முறைசாராத்தொழிலாளர்களின் (informal sector workers) பங்கு 30 சதவிகிதம். இவர்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை ஊதியமோ, சமூகப் பாதுகாப்புப் பயன்களோ கிடையாது. இதற்குமேல் என்ன நெகிழ்வுத்தன்மை வேண்டுமாம் இந்த சீர்திருத்தவாதிகளுக்கு?

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *