�சிறப்புக் கட்டுரை: தூய்மை இந்தியாவிற்கு தடைபோடும் ஜாதியவாதம்! – ஸ்வாகதா யாதவர் பாகம் 2

public

**கேள்வி 4: நீண்ட காலமாகவே இந்திய பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிக்க விரும்பவில்லை என்று கருதப்படுகிறது. உங்களுடைய இந்த புத்தகம் இந்தக் கட்டுக்கதைகளை தகர்க்கிறது. இதுகுறித்து விரிவாக கூற முடியுமா?**

கோஃபே: இது ஒரு சிக்கலான விஷயம். சில குடும்பங்களில் உள்ள பெண்கள் பகல் நேரங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க விரும்புவதில்லை. அதனால் அவர்கள் கழிவறைகளை முக்கியமாய் கருதுகின்றனர். மேலும், சில பெண்கள் திறந்த வெளிகளில் மலம் கழிப்பதை சங்கடமாகவும் கருதுகின்றனர். ஆனால் எங்களுடைய ஆய்வின் மூலம், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இதுபோன்ற கருத்துடையவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் உள்ளது என்பது தெரிகிறது. ஆண்களைப் போல, சிறிய குழிகள் கொண்ட கழிவறைகளை பயன்படுத்துவதற்கு எதிராகவே பெரும்பாலான பெண்கள் உள்ளனர். திறந்த கழிவறைகளை பயன்படுத்துவதை ஆண்கள் எப்படி சாதாரணமானது என்று கருதுகின்றார்களோ அதுபோலவே பெண்களும் சாதாரணமானது என்றே கருதுகின்றனர். இதனால் இதை வெட்கமான அல்லது சங்கடமான நடைமுறை என்று அவர்கள் பார்ப்பதில்லை. இறுதியாக சில பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களை வரவேற்கவும் செய்தார்கள். அதேசமயம் இளம்பெண்களின் செயல்பாடுகள் மிகவும் கவனமாக அவருடைய பெற்றோர்கள் அல்லது கணவரால் கண்காணிக்கவும் படுகிறது.

**கேள்வி 5: திறந்தவெளி மலம் கழித்தல் இந்திய பெண்களின் உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது?**

கோஃபே: எங்களுடைய ஆய்வின் மூலம், திறந்தவெளிகளில் மலம் கழிக்கும் பழக்கத்தால் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் எடை குறைந்து மெலிந்து காணப்படுகிறார்கள். எடை குறைவு என்பது ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் முக்கியமான பிரச்னையாக இந்தியாவில் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் எடை குறைவாக இருந்தால் பிறக்கும் குழந்தைகளும் எடை குறைவாகவே பிறக்கின்றன. மேலும், டீன் ஸ்பியர்ஸ் மற்றும் மைக்கல் கெருசோவுடன் இணைந்து நடத்திய ஆய்வில் நேபாளத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் அம்னீசியா குறைபாடு அதிகளவில் இருப்பதும் தெரிய வந்தது.

**கேள்வி 6: திறந்த வெளியில் மலம் கழித்தல் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா செய்யும் அதிகபட்ச செலவு என்ன?**

ஸ்பியர்ஸ்: அதை எண்ணிக்கையில் சொல்வது என்பது சிரமமானது. ஆனால் அதில் ஒரு சிறு பகுதியை அரசு செய்து வருகிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியும். மேலும், வேறு துறைகளில் சாதிக்க முடியும். அனைவரும் ஆரோக்கியமாக இருந்தால் தான் சுகாதாரமான சுற்றுச் சூழலைப் பெற முடியும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கான தூய்மையையும் பெற முடியும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள ஊதிய தரவை பார்க்கும்போது ” அதிக வருவாய் பெறுகின்ற, அதிக வரி செலுத்துகின்ற குடும்பங்களே சுகாதாரமான சுற்றுச் சூழலையும் பெற்றுள்ளன. எனவே திறந்தவெளி கழிப்பிடங்கள் பயன்படுத்துவதை தடுக்க தனிநபர் வருவாயையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்திற்கான மாத வருவாயை ரூ.20,000 வரையாவது அதிகரிக்க வேண்டியுள்ளது. இது அரசுக்கான வருவாயை அதிகரிக்க அல்ல, அவ்வாறு அதிகரிக்கும்போது அந்த குடும்பங்கள் அதிகமான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை பெற வாய்ப்புள்ளது என்று ஆய்வின் மூலம் தெரிகிறது.

**கேள்வி 7: இந்தியாவில் வறுமையில் இருப்பவர்கள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது திறந்தவெளி மலம் கழிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் உள்ளது. மாறாக உங்கள் ஆய்வில் கூறப்பட்டுள்ளதில் கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார நிபுணர்கள் என்ன நம்புகிறார்கள், அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் உங்கள் ஆய்வை?**

ஸ்பியர்ஸ்: இந்த ஆய்வு ஒரு நிமிடத்தில் நடத்தப்பட்டது அல்ல. எங்கள் ஆய்வு அறிக்கைகள் 2013,2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தரப்பு மக்களை நேராக சந்தித்து நடத்தப்பட்டது. மேலும் நாங்கள் சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்களுடனும் இதுகுறித்து பேசினோம். இதற்குப் பிறகு எங்களுக்கு கிடைத்த ஆச்சரியம் என்னவென்றால் இந்த பிரச்னை இந்தியாவில் மட்டும் இல்லை என்பது தான். பிறகு நாங்கள் இதுகுறித்து மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பேச முயற்சித்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.

இதற்கு காரணம், இதில் நிலவும் ஜாதிய, தீண்டாமைப் பாகுபாடுகள் தான் என்பதை உணர்ந்தோம். இதுகுறித்து மாநில ஊரகத் துறை செயலாளர் ஒருவரிடம் பேசும்போது” இதுகுறித்து எனக்கு தெரியாது. தற்போது, நீங்கள் கூறியுள்ளீர்கள், இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

**கேள்வி 8: காந்தி தீண்டாமை குறித்து பேசியுள்ளார். சுற்றியுள்ள எல்லா விசயங்களும் மாறும்போது, சுகாதாரம் வரை தடையாக இருக்கும் வலுவான நம்பிக்கையாக ஜாதி மட்டும் ஏன் மாறாமல் அப்படியே உள்ளது?**

கிராமப்புற இந்தியாவில் ஜாதி, ஜாதி அமைப்புகள், தீண்டாமை ஆகியவை இன்றுவரை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. பல்வேறு மக்கள் ஜாதிய தீண்டாமை, திருமணமான இந்துப் பெண்கள் கட்டாயம் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு பாகுபாடுகளை அனுபவிக்கின்றனர். மேலும், தன் ஜாதிய விட உயர்ந்த ஜாதியில் திருமணம் செய்யக்கூடாது, மதம் மாறி இசுலாமியர்களை திருமணம் செய்யக் கூடாது என ஜாதியைப் பாதுகாக்க தேவையான சட்டவிரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறுகின்றனர். இதை இன்றும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். கழிப்பிடங்களையும் ஜாதியுடன் இணைத்தே பார்க்கின்றனர்.

**கேள்வி 9: திறந்தவெளி கழிவறைகள் பயன்படுத்தலை நிறுத்த ஏதேனும் உத்திகள் உள்ளதா?**

கோஃபே: இந்த புத்தகத்தின் கடைசி பாகத்தில் சில உத்திகளை மேற்கோள்காட்டியுள்ளோம். முதலில் கழிவறைகள் எப்படி இயங்குகின்றன என்று மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இந்த கழிவறைக் குழிகள் நிரம்ப எவ்வளவு காலமாகும், அதை அப்படி சுத்தம் செய்வது போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கழிவறைகள் அமைக்க அரசு கூடுதல் மானியம் வழங்கலாம். மேலும் ஜாதியம் மற்றும் இங்கு நிலவும் சுகாதாரக் குறைபாடு குறித்த விழிப்புணர்வும் அளிக்க வேண்டியுள்ளது.

**கேள்வி 10: சுகாதாரக் கொள்கையில் படிப்படியான மாற்றம்- நடத்தை மாற்றம் மற்றும் கழிவறைகளுக்கான தேவைகள் உருவாக்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்களா?**

ஸ்பியர்ஸ்: இப்படிப்பட்ட கொள்கைகள் குறித்த பேச்சுகள் எழுகின்றன. இந்த கொள்கை வகுப்பாளர்கள் கிராமப்புறங்களில் உள்ள **மக்களை ஜாதியத்திலிருந்து விடுபடத் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதை அலுவலகத்தில் அமர்ந்து பேசுவதும் எழுதுவதும் மிக எளிது. ஆனால் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது மிக சிரமமானது. மக்களின் மனதில் உள்ள சமத்துவமின்மையை மாற்ற வேண்டும்**.

**கேள்வி 11: சமூகத் தலைமையிலான மொத்த சுகாதாரத்தில் (CLTS) ஏதேனும் தலையீடு இருக்கிறதா?**

ஸ்பியர்ஸ்: இந்தியாவில் இந்த பிரச்னை மிக அதிகளவில் இருக்கிறது. இதுதான் முக்கிய விவாதப் பொருளாகவும் இருக்கிறது. மற்ற நாடுகளை விட இங்கு இந்த சிக்கல் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக வங்கதேசத்தை எடுத்துக்கொள்வோம். 2000ஆம் ஆண்டு CLTS உருவாக்கப்பட்டது. ஆனால் 1991ஆம் ஆண்டிலேயே வங்கதேசத்தில் திறந்தவெளி மலம் கழிப்பவர்களின் எண்ணிக்கை இன்று இந்தியாவில் உள்ள எண்ணிக்கையை விட குறைவுதான். ஆனால் அதே எண்ணிக்கையில் தான் இன்றும் உள்ளது. இதனால் CLTS எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது.

**கேள்வி 12: அனைவரும் கழிவறைகள் அமைத்து பயன்படுத்தும் சூழல் ஏற்படுமா?**

ஸ்வச் பாரத் மிஷன் (தூய்மை இந்தியா திட்டம்) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு அனைவரும் கழிவறைகள் பயன்படுத்துவதாக கற்பனை செய்து கொண்டுள்ளனர். இன்னும் சில வருடங்களில் கழிவறைகளை முழுமையாக சுத்தம் செய்ய யார் வருவார்கள் என்ற கேள்வி எழும்போது திரும்ப வந்து நிற்கும் இடம் சமூக விடுதலை தான். மீண்டும் மீண்டும் தலித்துகள் மட்டும் தான் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள் என்றால் இந்தப் பிரச்னைக்கு எனக்கு தீர்வு தெரியவில்லை. இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும்.

[தூய்மை இந்தியாவுக்குத் தடைபோடும் சாதியவாதம்! – பகுதி 1](http://edit.minnambalam.com/k/1502908207)

[நன்றி : இந்தியா ஸ்பென்ட்](http://www.indiaspend.com/cover-story/casteism-will-not-allow-swacch-bharat-abhiyan-to-succeed-24444)

தமிழில் : [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)

மின்னஞ்சல் முகவரி : prakash@minnambalam.com

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *