பாலியல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாடகி சின்மயி போராட்டம்!

public

பாலியல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துபவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என, ஆன்லைன் கையெழுத்து மனுவை பாடகி சின்மயி தொடங்கினார். அவர் தொடங்கிய change.org என்னும் மனு இன்று காலை வரை 98,171 பேரின் ஆதரவைப் பெற்றுள்ளது.

மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பாலியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 7ஆம் தேதி சின்மயி கையெழுத்து மனுவை தொடங்கினார். ட்விட்டரில் சின்மயிக்கு பாலியல்ரீதியாகவும், அவர்மீது ஆசிட் வீசப்படும் எனவும் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர் கருத்தை வெளிப்படுத்தியதற்காக வந்த அச்சுறுத்தல்களால் அதிர்ச்சியடைந்த அவர் அதுகுறித்து ட்விட்டரில் புகார் அளிக்க முடிவுசெய்தார். ஆனால் காவல்துறையில் புகார் அளிக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சின்மயி அளித்துள்ள மனுவில், ‘இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாலான பெண்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை முடக்கிவிட்டுச் செல்கின்றனர். நான் அதை எதிர்த்துப் போராட முடிவுசெய்து காவல்துறையில் புகார் அளித்தேன். என்னை அச்சுறுத்தியவர்களை எனது ரசிகர்கள் அடையாளம் கண்டு எனக்கு உதவி செய்தனர். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு 10 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அவரின் கோபத்தைத் தூண்டியுள்ளது. சாதாரண பெண்களுக்கு வரும் அச்சுறுத்தல்களை யாரும் ஏன் தட்டிக் கேட்பதில்லை என கேள்வியெழுப்பியுள்ளார். பெண்களின் மீதான வன்முறைக்கு இடமளிக்காதவகையில் கண்காணித்து உறுதி செய்யவேண்டியது ட்விட்டர் நிறுவனத்தின் பொறுப்பு. சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு வலுவான செய்தியை தெரிவிக்கவே இந்த மனுவை தொடங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இருந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பலர் இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் ட்விட்டரில் அச்சுறுத்துபவர்களின் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக சுமார் 3,60,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல், பாலியல் அச்சுறுத்தலில் ஈடுபடும் நபர்களின் கணக்குகளை ஏன் முடக்கக் கூடாது என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். ட்விட்டர் பெண்களின் பிரச்னைகளை கேட்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் பேச்சு சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய விரும்பவில்லை. ஆனால் பாலியல் அச்சுறுத்தல்களை பேச்சுரிமையாக கருதக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த மனு 1,50,000 பேரின் ஆதரவைப் பெற்றபின்னர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சேவுக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *