திருவாரூர்: தினகரனுக்கு எதிராகத் தேர்தல் ஆணையம்?

public

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் காமராஜுக்கு, பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள அதே சமயம், காமராஜ் பெயர் கொண்ட மற்றொரு வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தைக் கேட்டு தினகரன் தரப்பு கடுமையாகப் போராடியது. ஆனால், குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது எனவும், அமமுகவைச் சேர்ந்த 59 வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னம் ஒதுக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடைசி நேரம் வரை பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என்று வாதிட்ட தேர்தல் ஆணையம், இந்த உத்தரவால் அமமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. ஆனாலும் அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாகத்தான் கருதப்படுவர்.

குக்கர் சின்னம் வேறொரு வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டால், தங்கள் வாக்குகளை அது பிரிக்கும் எனக் கருதிய அமமுக, குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தது.

இந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நேற்று முன்தினம், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டது. வழக்கம்போல அமமுகவின் கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளாத தேர்தல் ஆணையம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியது. இதில்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாகவும், அமமுகவுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் அமமுகவினர்.

மேலும் அவர்கள், “திருவாரூர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது வரிசை எண் 9. அடுத்தடுத்து காமராஜ் என்ற பெயரில் இரு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் எஸ்.காமராஜுக்கு அடுத்த இடத்தில் (வரிசை எண் 10) உள்ள B.காமராஜுக்கு அமமுகவுக்குக் கொடுக்க முடியாது என மறுக்கப்பட்ட குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளருக்குக் கேட்டு மறுக்கப்பட்ட சின்னம், அமமுக வேட்பாளரின் பெயரைக் கொண்டவருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது தற்செயலானது இல்லை.

சில நாட்கள் முன்பு வரை தினகரன் என்றால் குக்கர், குக்கர் என்றால் தினகரன் என்ற நிலைமையே இருந்தது. ஆனால், இப்போது தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் பழைய ஞாபகத்தில் தினகரனுக்கு ஓட்டுப் போடுவதாக நினைத்து குக்கர் சின்னத்துக்குச் சிலர் ஓட்டளித்தால்கூட அது அமமுகவுக்கு இழப்பாகவே இருக்கும் என்ற திட்டத்தோடுதான் குக்கர் சின்னத்தை காமராஜ் பெயரைக் கொண்ட மற்றொரு வேட்பாளருக்கே ஒதுக்கியிருக்கிறார்கள்” என்று விமர்சித்தனர்.

ஆனால் அது நடக்காது என்று கூறி தொடர்ந்த அமமுகவினர், “2017 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட எங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தான் முன்பு போட்டியிட்ட தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை மறுத்த தேர்தல் ஆணையம் எங்களுக்கு குக்கர் சின்னத்தை வழங்கியது. அடுத்த இரு வாரங்களில் குக்கர் சின்னத்தைப் பிரபலமாக்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம்.

எங்கள் துணைப் பொதுச் செயலாளர் கூறியதுபோல அமமுக வேட்பாளர் என்பதுதான் முக்கியமே தவிர சின்னம் முக்கியமில்லை. இருப்பினும் சின்னம் பெற்று இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில், குக்கர் சின்னத்தைப் போலவே பரிசுப் பெட்டி சின்னத்துக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வேட்பாளர் பட்டியலில் வேட்பாளரின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கும். எங்கள் வேட்பாளர் எஸ்.காமராஜ் மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். நின்றுபோன இடைத் தேர்தலில் கூட அவர்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எப்படி 33ஆவது இடத்தில் இருந்த தினகரனின் பெயரைத் தேடிக் கண்டுபிடித்து வாக்களித்தார்களோ அதுபோல எங்கள் வேட்பாளர் எஸ்.காமராஜுக்கும் வாக்களிப்பர். மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே உதாரணமாக உள்ளது. ஆனாலும் மத்திய, மாநில அரசுகளின் சதிகளை முறியடித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்” என்று உறுதியாகக் கூறினர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *