மாணவி தற்கொலை: தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்!

Published On:

| By Balaji

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த மாணவி பொன் தாரணி என்பவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்,கடந்த செப்டம்பர் மாதம் அந்த பள்ளியில் படிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி டிசியை வாங்கிய பொன் தாரணி அதேபகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி நேற்று முன் தினம்(நவம்பர் 11) வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

முன்னர் படித்த பள்ளியில் பணியாற்றிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து அளித்த பாலியல் தொல்லையால்தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்று பெற்றோரும் சக மாணவர்களும் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த உக்கடம் போலீசார் நேற்று மாலை அவரை கைது செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கு உக்கடம் காவல் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

தற்கொலைக்கு முன்னதாக மாணவி எழுதி வைத்த கடிதம் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ் அப்பில் ஆபாசமான முறையில் பாலியல் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து, மிதுனை நவம்பர் 26ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மிதுன் உடுமலைப்பேட்டையில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்து பலமுறை மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருப்பு உடை அணிந்து சக மாணவர்களும், பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் மாணவியின் உறவினர்களும் பலகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி ஒருவர் கூறுகையில்,” பாலியல் தொல்லை குறித்து மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோது, பேருந்தில் செல்லும்போதோ, நடந்து போகும்போதோ யாரோ ஒருவர் இடித்து சென்றுவிட்டதாக நினைத்துக் கொள். இதுகுறித்து வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். மேலும், மாணவிக்கு பெற்றோருக்கு தெரியாமலேயே மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய தவறு. அதனால், ஆசிரியரின் தவறான நடத்தைக்கு துணைபோன தலைமை ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகத்தின்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கூறுகின்றனர். பெரும்பாலான நேரத்தை மாணவர்கள் பள்ளியில்தான் செலவழிக்கின்றனர். ஆனால், இப்படி ஒருசில ஆசிரியரின் கேவலமான நடவடிக்கையால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதுபோன்று பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெற்றோர், மாணவியின் உடலை வாங்குவார்கள்” என்று கூறினார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

முன்னதாகஇந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் கோவை மாவட்டக் குழுக்கள் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில்,” மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதோடு, பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த பாலியல் குற்றத்தை முன்னதாகவே அறிந்திருந்த சின்மயா பள்ளி நிர்வாகத்தின் முதல்வர், துணை முதல்வர் எவரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தக் குற்றத்தில் ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பள்ளியில் வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணை செய்ய வேண்டும். கோவையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாலியல் விழிப்புணர்வு கல்வி அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share