சிறப்புப் பேட்டி: என்னைப்போல் யாரும் ஏமாறாமல் இருந்தால் சரி!

public

ஸ்ரீ ரெட்டியுடன் ஓர் உரையாடல்!

**சந்திப்பு: அன்னம் அரசு**

ஹாலிவுட்டில் நடிகைகள், நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இணைந்து ‘டைம்ஸ் அப்’ என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளனர். வேலை செய்யும் இடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் நலனுக்காக இயங்குகிறது இந்த அமைப்பு. வேலையைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வாய் திறக்காமல் இருந்த ஹாலிவுட் நடிகைகள், இன்றைக்குப் பொதுவெளியில் மனம்திறந்து பேசவும், அதற்கான எதிர்வினைகளை ஆற்றவும் துணிந்திருக்கின்றனர். இதற்குச் சான்றாக கடந்த அக்டோபர் மாதத்தில் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது 80க்கும் மேற்பட்ட நடிகைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டைச் சொல்லலாம். இதன் விளைவாக உருவானதுதான் ‘#metoo’ என்ற ஹேஷ்டேக். கேரளாவில்கூட ஒரு நடிகை பாலியல் வல்லுறவுக்கு ஆளானபோது அங்கிருக்கும் நடிகைகள், பெண்கள் அமைப்பினர் WCC என்ற அமைப்பை ஆரம்பித்து இன்றளவும் அவருக்கு ஆதரவாக இருந்துவருகிறார்கள். ஆனால், இங்கே ஸ்ரீ ரெட்டி தனியாகப் போராடிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள்…

**உங்களின் சூழ்நிலை தற்போது எப்படி இருக்கிறது?**

இந்த மாதிரியான சூழலை எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். நிறைய பேர் இது போன்ற சூழ்நிலைகளைக் கடந்துவந்து பாதுகாப்பாக இருக்கிறார்கள். குறிப்பாக சன்னி லியோன் போன்றோர். நானும் அதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறேன்.

**நீங்கள் எதாவது வழக்கு பதிவு செய்தீர்களா?**

அந்த அளவுக்குப் பொருளாதாரம் இல்லை. நேரமும் தேவைப்படுகிறது எல்லா விஷயங்களையும் செய்வதற்கு. வெளியிலிருந்தும் சில உதவிகள் தேவைப்படுகின்றன. இதில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரிய புள்ளிகள் என்பதால் காவல் துறை பின்வாங்குகிறது. என் விவகாரம் பற்றி ஊடகங்களையும் பேசவிடாமல் முடக்கிவருகிறார்கள். இது என்னுடைய பிரச்சினை மட்டும் கிடையாது, டோலிவுட்டுக்கே உரிய பிரச்சினை.

**இவ்வளவு நாள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வந்துள்ள நீங்கள் இப்போது ஏன் இதை வெளிப்படுத்தினீர்கள்?**

நான் பலரால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டேன். அதனால் மிகவும் துயரமடைந்தேன். இனிமேலும் என்னால் பொறுக்க முடியவில்லை. நான் சினிமாவிலிருந்தே விலகிவிடலாம் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் பிறருக்கும் இதுபோன்ற சிக்கல் வரக் கூடாது என்பதால் என்னை நான் வெளிப்படுத்திக்கொள்ள முன்வந்தேன். டோலிவுட்டில் மட்டுமல்ல; கோலிவுட்டிலும் நிறைய பேர் ஏமாற்றியிருக்கிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி என்னை உபயோகப்படுத்திவிட்டு அதன்பின் கண்டுகொள்ளவில்லை.

**நீங்கள் சம்மதித்ததால்தானே இவ்வளவு கஷ்டங்களும்? மறுத்திருக்கலாமே?**

எல்லோரும் எதாவது வேலை செய்தால் மட்டும்தான் இந்த உலகத்தில் பிழைத்திருக்க முடியும். சினிமாவை நம்பியே என் வாழ்க்கை இருக்கிறது. ஆனால், நான் பணத்துக்காக அப்படி நடந்துகொள்ளவில்லை. சினிமா வாய்ப்பு கேட்டபோது படுத்தால்தான் வாய்ப்பு தருவேன் என்று நிர்பந்தப்படுத்தினால் என்ன செய்ய முடியும்?

உண்மையில் எல்லாருடனும் உறவுகொள்ள ஒரு பெண் விரும்புவாளா என்ன? அவளுக்குப் பிடித்தவருடன்தான் வைத்து கொள்ள முடியும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் அப்படித்தானே. என்னை மாதிரி நிறைய பெண்கள் இந்தப் பிரச்சினையில் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகப் போராட வேண்டும். அதனால்தான் நான் களத்தில் இறங்கினேன். என்னைப் போல் பலர் இந்தப் பிரச்சினையைச் சந்திக்கிறார்கள். அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. எவ்வளவோ பேர் வாய் திறக்காமல் ஊருக்கே திரும்பிச் சென்று வேறு வேலை பார்க்கிறார்கள். ஒரு செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக, பத்திரிகையாளராக இருந்திருக்கிறேன். அப்படி இருந்ததனால்தான் என்னால் வெளிப்படையாகப் பேச முடிகிறது என்று நினைக்கிறேன்.

**இதுபோன்ற சுரண்டலில் நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்… யார் அதிகம்?**

எல்லாருமே… அதில் கூடுதலோ, குறைச்சலோ இல்லை. இவர்களை விடுங்கள்… ஒரு மனைவி கணவனிடத்தில் மறுக்க முடியுமா? ஒரு காதலி காதலனிடம் மறுக்க முடியுமா? எல்லாவற்றையும் நான் சொல்லவில்லை. ஒரு வேலை அந்தக் காதலி மறுத்தாள் என்றால், என்ன நடக்கும், ‘என் மீது உனக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் நீ மறுக்கிறாய். உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் நான் சொல்கிறபடி கேள்’ என்பான். இது போல்தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது.

**ஃபேஸ்புக்கில் ஸ்ரீகாந்த் பற்றி நீங்கள் போட்ட பதிவில் அந்தச் செயலை நீங்களும் விரும்பினீர்கள் என்பதுபோல் இருக்கிறது…**

அது விரும்பி நடந்ததாகப் பெருமையாகச் சொல்லவில்லை, பகடி செய்கிறேன். அவர் என்ன செய்தார் என்று அவருக்குத் தெரியும். (அழுதுகொண்டே) அதை என்னால் சொல்ல முடியாது.

**சினிமா துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?**

நான் சிறுவயதிலேயே லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் போட்டுக்கொள்வேன். இவற்றுக்கெல்லாம் அனுமதியே இல்லை. நான் கார் ஓட்டுவதுகூட அவர்களுக்குப் பிடிக்காது. பழைய மரபுகளில் மூழ்கிபோன குடும்பம். நான் ஒரு மாடர்ன் பெண்ணாக வாழ விரும்பினேன். அதனால் அப்போதிலிருந்தே நடிகைகளைப் பார்த்து பார்த்து இப்படித்தான் நாமும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது.

நம்முடைய கனவுகள், எண்ணங்களை மாற்றி அமைக்க யாருக்கும் உரிமை இல்லை. நாம் எல்லோரும் நமது கனவு, லட்சியங்களுக்காகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன் என் வீட்டை விட்டு வந்துவிட்டேன். வாழ்க்கையில் நிறைய சவால்களை எதிர்கொண்டு ஜெயிக்க ஆசைப்பட்டேன். வீட்டை விட்டு ஓடி வந்து என்னுடைய வேலைகளை உருவாக்கினேன். இந்தப் பிரச்சினையை வெளிக்கொண்டுவருவதற்கு முன்பே நான் பிரபலமானவளாகத்தான் இருந்தேன். ஐம்பது லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பின்தொடர்கிறார்கள். இதை நான் விளம்பரத்திற்காகச் செய்யவில்லை. என்னுடைய இழப்புகளுக்காக நான் போராடுகிறேன்.

**கேரளத் திரையுலகில் உள்ள WCC பற்றி உங்கள் கருத்து?**

கேரளா நன்றாகப் படித்த சமூகம். அங்கு போய் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்ந்தேன். டோலிவுட், கோலிவுட்டை ஒப்பிடும்போது மோலிவுட் முற்போக்கானது. அதற்காக இதுபோன்று அங்கு நடப்பதேயில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அங்கு குறைவான நபர்கள்தான் சில்மிஷ வேலைகளில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் பாதுகாப்பு விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்கள். ஏதாவது பிரச்சினை என்றால் அதற்குத் தீர்வு காண ஏதாவது செய்கிறார்கள். நான்கு மாதங்களாக ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறேன். அதைத் தீர்த்து வைக்க எந்த அமைப்பும் முன்வரவில்லை. அல்லது மற்ற ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. எனக்கு யாராவது ஆதரவாக வந்தால் அவர் மீதும் பல ஆண்களுடன் படுத்தவள் என்ற முத்திரையைக் குத்துகிறார்கள். அதை எந்தப் பெண்ணும் விரும்பவில்லை. ஊடகங்களின் கேள்விக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் வாய் திறந்தால் வாய்ப்பு ஏதும் கிடைக்காது. ஆதரவு கிடைக்கவில்லை என்று நான் வருந்தவில்லை. என்னைப் போல யாரும் ஏமாறாமல் இருந்தால் எனக்குச் சந்தோஷம்தான்.

**#Metoo பற்றி?**

அது ரொம்ப பாசிட்டிவான விஷயம். பெண்கள், ஆண்களுக்கு இணையானவர்கள். நாம் அதுகுறித்து நிறைய விவாதிக்கிறோம், பல விஷயங்கள் செய்கிறோம். வெளிநாடுகளில் அரசும் இதைப் பற்றி அக்கறை எடுக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. பெண்கள் செக்ஸுக்கான அடிமைகள்தான். ஒரு கணவனுக்கு அப்படிதான் இருக்கிறோம். காதலனுக்கும் அப்படித்தான். ஒரு வேலை வேண்டும் என்றாலும், பிழைப்பிற்காகவும் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது. எல்லா இடங்களிலும் செக்ஸ்… செக்ஸ்… இது உலகம் முழுக்க இருக்கிறது.

ஆனால், அங்கெல்லாம் பிரச்சினை என்று வரும்போது ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், மாற்றங்கள் நடக்கிறது. இந்தியாவில் மூடிமறைக்க மட்டுமே செய்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அரசும் எந்த உதவியும் செய்யவில்லை. அது மட்டுமில்லாமல் என்னுடைய விஷயங்களை ஊடகங்கள் பதிவு செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். இதற்கான தீர்வுதான் என்ன என்று யாரும் சொல்லவில்லை.

**உங்கள் எதிர்காலத் திட்டம்?**

ஏன் என் கனவுகளை நான் மாற்றிக்கொள்ள வேண்டும்? என் எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்திய பிறகு எங்காவது சென்று என் வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன். யார் என் மீது உண்மையான பரிவோடு நடந்துகொள்கிறார்களோ, அவர்களிடம் வேலை தாருங்கள் என்பேன். சீக்கிரம் நல்ல வேலை பார்த்து வெளிநாட்டுக்குச் செல்லவிருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் இருப்பதை அவமானமாகப் பார்க்கிறேன். அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ இருந்திருந்தால் இந்நேரம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். இதற்குக் காரணமானவர்களை உடனடியாகத் தண்டித்திருப்பார்கள். இந்தியாவில் இருப்பது எனக்குப் பாதுகாப்பில்லை. சமீபத்தில் இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் முதலிடம் என்றார்கள். அது என்னைப் போன்ற ஆட்கள் மூலமாக உறுதியாகிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *