அ.முத்துக்கிருஷ்ணன்
இந்தியர்களின் பெரும்பான்மையானவர்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் என்கிற தொழில்முறை வதந்தி தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது உண்மை அல்ல என்பதையும் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஒரு பயணம் செய்தால் நகரங்களின் தெருக்களில் மனத்தை மயக்கும் உணவின் மனம் இந்த தேசத்தின் உணவுப் பழக்கத்தை சொல்லிவிடும்.
**இந்தியா சைவ உணவு நாடா?**
**இருப்பினும் நீங்கள் எல்லோருமே அசைவம் சாப்பிட்டாலும் இந்த தேசம் சைவ உணவுப்பழக்கம் என்கிற கட்டுக்கதையை நாங்கள் பரப்புவோம். ஏனெனில், நாங்கள் சைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், இந்த தேசத்தில் பெரும்பான்மையானவர்கள் எங்களைப் போல் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் என்கிற வதந்தியை தொடர்ந்து பரப்பி உலகத்தையும் ஏமாற்றுவோம், உங்களையும் சேர்த்து மூளைச்சலவை செய்வோம் என்கிறது ஒரு சிறிய குழு.**
இந்தியர்களில் 80-85% பேர் அசைவம் சாப்பிடக்கூடியவர்கள். தெலங்கானா மாநிலத்தில் 99% பேர் அசைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள். ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் மட்டுமே சைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். இருப்பினும் ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களை அடர் பச்சையிலும், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தை பச்சையிலும், மஹாராஷ்டிரம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசத்தை மென் பச்சையிலும் போட்டு ஓர் அசைவ-சைவ வரைபடம் ஒன்று கடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் சுற்றுக்கு வந்தது. இது ஒரு சைவ லாபியின் மோசடியான வரைபடம் என்பது அவர்கள் காஷ்மீருக்கு மென் பச்சை நிறம் இட்டதில் பல்லை இளித்து காட்டியது. இப்படி கலர் கலராக காட்டித்தானே வதந்திகளுக்கு ஓர் அறிவியல் – புள்ளிவிவர சாயத்தை பூச இயலும்.
**அசைவம் சாப்பிட்டால் கோபம் வருமா**
இருப்பினும் இந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு அதனுடன் இந்தியாவில் தீண்டாமை எனும் மனித சமூகத்தின் ஆகத்தீங்காம ஒரு நடவடிக்கை நடக்கும் மாநிலங்களை ஒப்பிட்டு இந்த இரண்டு வரைபடங்களையும் இணைத்த ஒரு படம் இன்று காலை என் கண்ணில்பட்டது. இந்த படம் ஏராளமான செய்திகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. **ஆவணக் கொலைகள், மாட்டின் பெயரால் கொலைகள், சாதிய வன்கொடுமைகள், தீண்டாமை என இந்த பூமியின் மனிதன் தன் சக மனிதனின் மீது செய்யக் கூடிய கொலை பாதக செயல்களில் ஈடுபடுபவர்களின் பட்டியலில் முன்னனியில் நிற்பவர்கள் இவர்களே. (ஒப்பீட்டளவில்)
இந்தியாவில் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்களை வாசித்தாலே மனம் கனத்து போகும். பொதுப்பாதையில் நடக்கக் கூடாது, செருப்பு, போட்டு நடக்கக் கூடாது, சைக்கிள் ஓட்டக் கூடாது, தோளில் துண்டு போடக் கூடாது, வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாது, தலையில் தலைப்பாகை கட்டக் கூடாது, முகத்தில் மீசை வைக்க கூடாது, தேநீர் கடைகளில் இரட்டை குவளை, பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாது, ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு, திருவிழாக்களில் தலித் தெருக்களுக்கு சப்பரம் வராது, பொது மயானத்தில் உரிமை கிடையாது, பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது, தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது என இந்த பட்டியல் முழுமையானது அல்ல.**
சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் அதிகபட்சமாக வாழும் நிலத்தில் நடக்கும் கொடுமைகள் பார்க்க, கேட்க சகிக்க முடியாதவை. ஆனால், இதே சைவ லாபி தொடர்ச்சியாக அசைவம் சாப்பிடுகிறவர்களுக்குக் கோபம் அதிகமாக வரும், அசைவம் சாப்பிட்டால் அது வன்முறையை தூண்டும் என்றும் தொடர்ச்சியாக கிடைக்கும் இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வதந்திகளை தொடர்ந்து இடைவிடாமல் செய்வது, செய்து கொண்டேயிருப்பது என்பது ஒரு பெரும் உத்தி, அதை எதிர்த்து நாம் தொடர்ந்து சிந்திக்கவில்லை என்றால் ஒரு நாள் நம்மை அறியாமல் மூளை சலவைக்கு ஆட்பட்டு விடுவோம்.
கமல்ஹாசன் ஒரு பெரும் அசைவப்பிரியர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். சிப்பிக்குள் முத்து படப்பிடிப்பின் போது பச்சை கறியை கமல்ஹாசன் சாப்பிட்டார் என்று நாளிதழ்களில் வாசித்தது போல் ஒரு மங்கலான ஞாபகம் இருக்கிறது, அவர் பச்சை கறி சாப்பிடுகிறவரா இல்லையா என்பதை ஓரமாக வைப்போம் ஆனால் அவரை போன்ற ஒரு அசைவப்பிரியரே, **“சைவம் சாப்பாட்டை சாப்பிட்டுட்டா இப்படி சண்டை போடுறீங்க” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போதுதான் தொடர்ச்சியாக செய்யப்படும் பொய் பிரச்சாரத்துக்கு கமலை போன்ற கொஞ்சம் விவரமானவர்கூட எப்படி இரையாகக் கூடும் என்பது புலப்படுகிறது.**
சைவம் – சுத்தம் – தூய்மை என்கிற இந்தப் புள்ளிகளின் இணைப்பும் அதை புனிதம் என்று கருதுவதும் ஒரு நோய்மையின் குறியீடாகவே பார்க்கிறேன். இந்த உலகத்தின் பரிணாமத்தில் மனிதன் நடமாடத் தொடங்கிய நேரத்தில் இருந்து அவன் வேட்டையாடித்தான் மாமிசம் உட்கொண்டு இருக்கிறான், வேட்டைக்கறி தான் அவனது அடிப்படை உணவு. **இன்றும் உலகத்தில் 90-91% அசைவம் சாப்பிடுகிறவர்களே. சைவம் சாப்பிடுகிறவர்கள் 9-10% பேர் மட்டுமே.**
மனிதர்கள் ஆடு, கோழி, மாடு, பன்றி, மீன், வாத்து, காடை என தங்களுக்குப் பிடிக்கும் உணவை உட்கொள்கிறார்கள், வேட்டைக்கறியை உண்டவர்கள் பரிணாமத்தில் அவனுக்கு தேவையான மிருகங்களை பழக்கப்படுத்தி (Domesticate), வளர்த்து (தொழில்முறை வளர்ப்பு உட்பட) உண்ணுகிறான். அசைவப் பிரியன் சக மனிதர்களை மதிக்கிறான், அவன் மீது சைவ பெரும்பான்மை மனநிலை போல் அவன் சக மனிதனின் மீது வன்முறையை, தீண்டாமையை நிகழ்த்துவதில்லை.
**அவரவர் உணவு அவரவர் கலாச்சாரம்**
சைவம் லாபி தொடர்ந்து முன்வைக்கும் “பெரும்பான்மை” கோட்பாடுகளை அசைவர்கள் ஒருபோதும் அவர்கள் மீது திணிப்பதில்லை. 100% அசைவம் சாப்பிடுகிறவர்கள் கலாச்சாரத்தின் மீது மெல்ல மெல்ல நல்ல நாள், பொல்ல நாள், செவ்வாய், சனி, புதன், திங்கள் என ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை தூக்கிக்கொண்டு சைவ லாபி ஆள் பிடிக்க சுற்றியபடி உள்ளது. ஆனால் அசைவம் சாப்பிடுகிறவர்கள் உங்கள் வேதத்தில் உள்ள “பீப் வகைகளை” தூக்கிக் கொண்டு உங்களை Canvas செய்ய வருவதில்லை.
உணவு என்பது மனிதனின் பரிணாமம் தொட்டு அவனுடன் வரும் பழக்கம் அவனது கலாச்சாரம், அவனது உடல் ஒரு வகை உணவை செரிமானம் செய்யும் திறனை அடைந்துள்ளது. அதே இந்தியாவிற்குள் 4000 ஆண்டுகள் முன்பு வந்த ஆரியர்களின் உடலில் பால் பொருட்களை செரிமானம் செய்யும் 13910T என்கிற Gene உள்ளது என்று மரபணுவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மனித உடல் பரிணாமத்தில் பெற்ற திறன். அவர் அவர் திறன் அவருக்கு, இது தான் மனித உடலின் தனித்தன்மை.
**அவரவர் உணவு அவரவர் கலாச்சாரம், அதை அவரவர் பின்பற்றுவோம். இது சிறந்தது, இது தூய்மையானது, இது புனிதமானது என்பது ஒரு நோய், மனநோயின் வெட்டவெளிச்சமான கூறு.**
அது சரி கிளம்புகிறேன் வீட்டில் மீன் வறுவல் வாசனை மூக்கை துளைக்கிறது…
கொசுறு தகவல் ஒன்று….
தென்னிந்திய சைவ உணவின் மையமாகக் கருதப்படும் சென்னையின் 6% மக்கள் மட்டுமே சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: muthusmail@gmail.com
�,”