சிறப்புக் கட்டுரை: கொங்கு நாட்டில் மத நல்லிணக்கக் குறியீடு!

public

கவிபிரியா

**ராவுத்தர் குமாரசாமி கோயில்**

செய்நன்றி என்பது அரிதாகிப்போன இந்த உலகத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த உதவிக்காக, முஸ்லிம் மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாய் கோயில் கட்டி கும்பிட்டுவருகிறது கொங்குச் சமூகம்.

கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் சிவகிரி அருகே இருக்கிறது காகம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் இன்றளவும் வழிபட்டுவரும் தெய்வத்தின் பெயர் ராவுத்தர் குமாரசாமி. மசூதியா, கோயிலா என்று பிரச்சினை நடந்துவரும் நமது நாட்டில்தான் இப்படியோர் இணக்கத் தலம் காகம் கிராமத்தில் உள்ளது. எப்போதோ தங்களது மூதாதையர் பட்ட நன்றிக் கடனுக்காக இப்போதும் முஸ்லிம்களைத் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் கொங்குச் சமூகத்தினர்.

திருமுருகன்பூண்டி சிற்பங்கள், மருதமலை முருகன், திருமூர்த்திமலை சிவன் எனக் கொங்கு மண்டலத்தின் பெருமையை நினைவுகூரும் வகையில் பல ஆன்மிகத் தலங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம்விட ஒருபடி மேலாகத்தான் தெரிகிறது மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்கும் ராவுத்தர் குமாரசாமி கோயில்.

பொதுவாகத் தமிழகக் கோயில்களில் முக்கியமாகக் கருப்பையா, சுடலை மாடன், அய்யனார் போன்ற சிறு தெய்வக் கோயில்களில் வண்ணமயமான குதிரைகள் மீது தெய்வங்கள் காவலுக்குச் செல்லும் வகையிலான சிற்பங்கள் அமைந்திருக்கும். குதிரைகள் மீது அமர்ந்திருப்பது அய்யனார் உள்ளிட்ட தெய்வங்கள் மட்டுமே. ஆனால் காகம் என்னுமிடத்தில் அமைந்துள்ள ராவுத்தர் குமாரசாமி கோயிலில் உள்ள குதிரையின் மீது முஸ்லிம் ராவுத்தர் கத்தியை ஏந்தியவாறு அமர்ந்திருப்பது மத நல்லிணக்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

காகம் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தின் கண்ணன் கூடத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. இந்தக் கோயிலில் சிறு சிறு தூண்களும் ஒரு கோபுரமும் விமானமும் இருக்கின்றன. நுழைவாயிலில் தொடங்கிக் கோயில் முழுவதும் ராவுத்தர்களின் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயிலில் கருவறையின் வாயிற்கதவு மீது லுங்கி உடுத்திய ராவுத்தர் சிலை ஒன்று புகைபிடிப்பது போல் உள்ளதைக் காண முடியும். கருவறையில் உள்ள குமாரசாமி சிலைக்கு அருகே ராவுத்தர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்க கோயிலில் துலுக்க நாச்சியார், ஐயப்பன் கோயிலில் வாவர் சாமி, மேலச்சூர் திரௌபதி அம்மன் கோயிலில் முத்தல ராவுத்தர் எனத் தொன்மை காலம் தொட்டே இந்துக் கடவுள் ஸ்தலங்களில் முஸ்லிம் காவல் தெய்வங்களைக் கொண்டாடும் கலாச்சாரம் உள்ளது.

தமிழ் முஸ்லிம்களான குதிரை வியாபாரம் செய்துவரும் ராவுத்தர்கள், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுகத்தின் காவல் தெய்வமாக எப்படி ஆனார்கள் என்று காகம் கிராமத்திலேயே சில பெரியவர்களிடம் விசாரித்தோம்.

“முந்நூறு, நானூறு ஆண்டுகளுக்கும் முன்னாடி எங்க மூதாதையர் கூட்டம் அரவக்குறிச்சி பக்கத்துல இருக்குற கன்னிவாடியில வாழ்ந்துக்கிட்டிருந்தாங்க. இப்ப அது கரூர்ல இருக்குங்க. அப்ப அங்கே ஏதோ பெரிய சண்டை வந்து எங்க மூதாதையரெல்லாம் ஆபத்துல இருந்தாங்களாம். அங்க இருந்த முஸ்லிம் ராவுத்தர்களாம் சேர்ந்து எங்க மூதாதயர்களை உசுரைக் காப்பாத்தி வெளியூருக்கு அனுப்பி வெச்சாங்களாம். அப்போ கன்னிவாடியிலேர்ந்து கிளம்பினவங்க ஈரோடு பக்கம் சிவகிரி வந்து செட்டிலாயிட்டாங்க. உசிரைக் காப்பாத்தி வாழ்க்கை கொடுத்த நன்றிக் கடனுக்காகத்தான் இங்க குலதெய்வக் கோயிலோடயே ராவுத்தருக்கும் சிலை வெச்சிருக்காங்க.

எங்க மூதாதையர்களோட உசிரைக் காப்பாத்தினாலதான் இன்னிக்கும் நாங்க தலைமுறை தலைமுறையாக இங்க வாழ முடியுது. அப்படிப்பட்ட நல்ல காரியத்தை செஞ்ச ராவுத்தர்களுக்கு நாங்க நன்றி செலுத்தணும் இல்லீங்களா? அதனாலதான் பரம்பரை பரம்பரையா நானூறு, ஐந்நூறு வருசமா இந்த ராவுத்தர் வழிபாட்டை விட்டுடாம வெச்சிருக்கோமுங்க’’ என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்தினார்கள்.

வெள்ளையம்மாள் காவியத்தில் கவிஞர் கண்ணாடி பெருமாள் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார் என்பதையும் அவர்கள் பெருமையோடு நினைவுகூர்கிறார்கள்.

“15ஆம் நூற்றாண்டில் தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ராவுத்தர் முருகன் என்று வர்ணிக்கிறார். ராவுத்தராக மாறிய முருகன் சுறா என்ற அசுரரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது, அசுரரைக் கொன்ற ராவுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார். அதன் பின்னர் அவர் மயில் ஏறிச் செல்வதால் மாமயிலேறும் ராவுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கண்ணன் கூட்டத்தினர் முருகனை அபிஷேக மூர்த்தி என்று அழைக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்காகப் பாரம்பரிய முறையில் கோயில் கட்டப்பட்டது. கோயில் கட்டுவதற்கு முன்பு ராவுத்தர் குமாரசாமி ஒரு கூரையின் அடியில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு வைக்கப்பட்ட ராவுத்தர் சிலைகள் வேங்கை மரத்தால் செதுக்கப்பட்டவை.. வேங்கை போர்க்குணம் மிக்க வன விலங்காகும். அபிஷேக மூர்த்தியின் கோபத்தைக் குளிர்விக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்தது. எனவே வேங்கை மரத்தால் சிலைகள் வடிவமைக்கப்பட்டன” என்று கண்ணன் கூட்டத்தைச் சேர்ந்தவரும் கோயிலின் பூசாரியுமான மகாலிங்கம் தெரிவித்தார்.

இந்தக் கோயிலின் வழிபாட்டு முறைகளைப் பற்றி விசாரித்தபோது மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

“திங்கட்கிழமை வெள்ளிக்கிழமைன்னு வாரத்துக்கு ரெண்டு நாள் பூசைங்க. அமாவாசையான பூசை விசேஷமா இருக்கும். மூணு வருசத்துக்கு ஒருமுறை திருவிழா வரும். அப்ப ராவுத்தருக்குப் பொங்க வெச்சு குறைஞ்சது 500 கிடா வெட்டுவோமுங்க. இப்பல்லாம் அப்பப்ப எங்க கூட்டத்துலேர்ந்து வெளியூர்ல செட்டிலானவங்க வந்து ஆடு வெட்டி பூசை நடத்திட்டும் போறாங்க’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

கோயில் சந்நிதியில் பொதுவாகப் பழங்களும் மலர்களும் மட்டுமே தெய்வங்களுக்குப் படைத்துவந்த நிலையில், ஆடு வெட்டி, மது வகைகளை வைத்துப் படைப்பது கிராமிய சிறுதெய்வ வழிபாட்டு முறையின் தாக்கமாகவே கருதப்படுகிறது.

காகம் கோயிலைப் பற்றி அலைபேசியில் விசாரித்த நம்மிடம், “ஈரோடு பக்கம் வந்தீங்கன்னா சொல்லுங்க. நாங்களே வந்து உங்களை அழைச்சு வர்றோம். நம்ம கோயிலுக்கு நீங்கள் வாரோணுமுங்க’’ என்று அன்பைக் கொட்டுகிறார்கள் கிராமத்தினர்.

ஒருமுறை விசாரித்ததற்கே இப்படி அன்புகாட்டும் இவர்கள், மூதாதையர்களின் உயிர்களைக் காப்பாற்றிய ராவுத்தர்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுவதில் ஆச்சரியம் இல்லைதான்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *