ஒரு லட்சம் ரூபாய் சொம்பு! – சதுரங்க வேட்டை பாணியில் தில்லாலங்கடி!

public

நம்மைச் சுற்றியிருக்கும் ஏமாற்றுக்காரர்கள் குறித்தும், அவர்கள் அரங்கேற்றும் தில்லாலங்கடி நாடகங்கள் பற்றியும் படம் போட்டு, பாகங்கள் குறித்து ஹிட் அடித்த சினிமா, ‘சதுரங்க வேட்டை’. ‘மண்ணுள்ளிப்பாம்பு, ஈமுக்கோழி, ரேடியம், கட்டைவிரல் சித்தர்…’ என ஏமாற்றுமுறைகளின் பட்டியல், படம் முழுவதும் நீண்டுகொண்டே செல்லும். ‘ஒருத்தரை ஏமாத்தணும்னா அவங்களோட ஆசையைத் தூண்டணும்!’ என்ற ஒற்றை வரியை அடிநாதமாகக் கொண்டே அத்தனை மோசடிகளையும் கட்டமைத்திருப்பார் அந்த நாயகன். அவர் மட்டுமல்ல; மோசடிப் பேர்வழிகள் பெரும்பாலானோர், இந்த உளவியலை உணர்ந்துவைத்தே தங்கள் காரியங்களை கச்சிதமாக அரங்கேற்றி வருகின்றனர்.

சமீபத்தில், இப்படி ஒரு நிகழ்வு தர்மபுரியில் நடந்திருக்கிறது. தர்மபுரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு கும்பல் சந்தித்துள்ளது. தங்களிடம் செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் அட்சயப்பாத்திரம் போல ஒரு சொம்பு உள்ளதாக கோவிந்தராஜனிடம் சொல்லியது. இதைக்கேட்டு வாய் பிளந்த கோவிந்தராஜிடம், ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தால், அந்தச் சொம்பை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்து மோசடிக் கும்பலிடம் கொடுத்தார். ஆனால், அவர்கள் அந்த அதிசயச் சொம்பைத் தராமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தனர்.

ஒருநாள் அந்த மோசடிக் கும்பல், கோவிந்தராஜை ரயில் நிலையத்துக்கு வரச் சொல்லியிருக்கிறது. அவர் கையில் சொம்பைக் கொடுத்து, ‘இதை வீட்டுக்குக் கொண்டு சென்று பூஜை அறையில் வைத்துவிடு! உடனடியாக சொம்பு தீப்பிடிக்கும் அதிசயம் நிகழும்’ என்று சொல்லியிருக்கிறது.

அதை பயபக்தியோடு வாங்கினார் கோவிந்தராஜ். சொம்பு சூடாக இருந்ததால், எதிர்பாராதவிதமாக சொம்பை கீழே தவறவிட்டார். அவ்வளவுதான். உடனடியாக சொம்பு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனால், ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். மோசடி கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீஸார், கோவிந்தராஜிடம் விசாரணை செய்தபோது இந்தச் சொம்பு பற்றிய விவகாரம் தெரியவந்தது.

அந்த மோசடிக் கும்பல் சொம்பில் பாஸ்பரஸை வைத்து அதன்மீது தண்ணீரில் நனைக்கப்பட்ட பஞ்சை வைத்துக் கொடுத்திருக்கிறது. அந்தப் பஞ்சு சீக்கிரம் காய்ந்துவிட்டதால் சொம்பு எரிய ஆரம்பித்தது போலீஸார் விசாரணையில் தெரிந்தது. இதைத்தொடர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்ட கடத்தூரைச் சேர்ந்த விஜயன் என்ற வர்மா (40), குறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (57), புளியம்பட்டியைச் சேர்ந்த பழனி (67), இலக்கியம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி (45), பி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெகன் என்ற ராஜேந்திரன் (54) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *